ஒட்டுமொத்த உலகத்தையே கொரோனா ஆட்டிப்படைக்கிற இந்தச் சூழலில் உலக வல்லரசுகளின் பார்வை முழுக்க பொதுவுடைமை நாடுகளின் பக்கம் திரும்பியிருக்கிறது. கியூபா அதற்கு மிகச்சிறந்த உதாரணம். இத்தாலியும் அமெரிக்காவும் தடுமாறிக் கொண்டிருக்கும்போது கம்யூனிசம் அவர்களுக்கு கைக்கொடுக்கிறது. இவ்வளவு ஆண்டுகாலம் தங்கள் நாடும் அரசியல் நிலைப்பாடும் கருத்தியல்களும் வளர்த்தெடுத்த பாதையில் நடைபோடுகிறார்கள். அப்படித்தான் கேரளா மாடலும்.

இந்தியாவைப் பொறுத்தவரை முதன்முதலில் கொரோனா தொற்று கண்டறிப்பட்டது கேரளாவில்தான். அடுத்தடுத்த நாட்களில் கொரோனா பாதித்த இந்திய மாநிலங்களில் முதலிடம் பிடித்தது கேரளா. அதற்கான முக்கிய காரணம் கேரள மக்கள் வெளிநாடுகளுடன் அதிகம் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். அதன்பின் தொடர்ச்சியான சோதனைகள், சுகாதாரத்துறையின் தீவிரமான செயல்பாடு என கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தது கேரள அரசு.  இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் முன்பாகவே பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தது கேரள அரசு. விளைவு 93 வயது முதியவர் கூட நோய்பாதிப்பிலிருந்து மீண்டு வந்தார். 88 வயது முதியவர்  நோயிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறார். இன்னொன்று நிப்பா வைரஸ் பாதிப்பு சில படிப்பினைகளை கேரள மக்களுக்கு வழங்கியிருக்கிறது.

இந்நிலையில்தான் ’ஒரு கம்யூனிஸ்ட் இன்னும் கனவு காணக்கூடிய சில இடங்களில் ஒன்று கேரளா ‘என  என வாஷிங்டன் போஸ்ட் நாளேடு பாராட்டி அதன் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது.

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் இருப்பிற்கு மிக முக்கியமான காரணம் தேர்தல் அரசியலின் தேவைகளுக்கு ஏற்ப மாறியிருப்பதுதான் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் கேரளாவை பாராட்டியிருக்கிறார். இந்தியாவின் “உலகளாவிய முகம் கேரளா’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.