பரிசோதனை முறைகளைப் பெருமளவில் உயர்த்த வேண்டும் என்று சொல்கிறார் வாஷிங்டனை மையமாகக் கொண்ட நோய்களின் இயங்கியல், பொருளாதாரம், கொள்கை வகுப்பு மையத்தின் இயக்குநரான டாக்டர் ரமணன் லட்சுமி நாராயணன்.

கேட்டால் பீதி ஏற்படத்தான் செய்கிறது. கொரோனா வைரஸின் அடுத்த ஆட்டம் இந்தியாவில் இருக்கக்கூடும்; 60 சதவீத மக்கள் பாதிக்கப்படலாம் என்று சொல்கிறார் டாக்டர் ரமணன் லட்சுமி நாராயணன்.

அமெரிக்காவில் 20-60 சதவீதம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படக்கூடும் என்ற கணிப்பின் அடிப்படையில் இந்தியாவில் அதிகபட்சமாக 60 சதவீதம் பேர் பாதிக்கப்படக்கூடும் என்கிறார் டாக்டர் ரமணன். அதாவது, 70-80 கோடி பேர். எனினும் அதில் பெரும்பாலானோருக்கு லேசான பாதிப்பே இருக்கும். மிக மிக சொற்பமானவர்களே கடும் ஜூரத்தால் பாதிக்கப்படுவார்கள். அதிலும் மிக மிக குறைவானவர்களே துரதிருஷ்டவசமாக மரணமடைய வேண்டியிருக்கும் என்கிறார் அவர்.

டாக்டர் ரமணன் இந்த நேர்காணல் கொடுத்த நேரத்தில் இந்தியாவில் 130 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டிருந்தது. அதில் 14 பேர் நோய்த் தொற்றிலிருந்து மீண்டு வந்தார்கள். மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள்.

இங்கிலாந்து போன்ற நாடுகளில் 1,500 பேருக்கு கொரோனா வந்தும் கண்டறியாமல் போனதை சுட்டிக்காட்டும் அவர், இந்தியாவில் சுமார் 10,000 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தும் கண்டறியப்படாமல் இருக்கலாம் என்கிறார்.

கொரோனா பாதிப்பில் இந்தியா இன்னும் இரண்டாம் கட்டத்திலேயே இருக்கிறது, மூன்றாம் கட்டத்தை எட்டவில்லை என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிலைபாடு தவறானது என்கிறார் டாக்டர் ரமணன். மூன்று வாரங்களுக்கு முன்பே இந்தியா மூன்றாம் கட்டத்தை எட்டியிருக்கலாம் என்று கருதுகிறார் டாக்டர் ரமணன். உலகின் பிற இடங்களில் பயன்படுத்தப்பட்ட அறிவியல் மாதிரிகளின் அடிப்படையில் இதைச் சொல்வதாக அவர் தெரிவிக்கிறார்.  பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்களை மூடியிருக்கிறார்கள் என்பதே மூன்றாம் கட்டத்தை இது எட்டிவிட்டது என்பதற்கான சமிக்ஞை என்கிறார் அவர். தெரிந்தாலும் அதை ஒப்புக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை என்கிறார் அவர்.

கொரோனா வைரஸ் இருக்கிறதா என்ற பரிசோதனைகள் நடத்தப்படுவதன் வேகத்தையும் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும் என்கிறார் டாக்டர் ரமணன். ஒரு நாளைக்கு 10,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய நிலையில், மார்ச் 17ஆம் தேதி வரை மொத்தமே 11,500 பேருக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஐ.சி.எம்.ஆர் புள்ளி விவரங்களின்படி அவர் தெரிவிக்கிறார்.

எந்த நோய் அறிகுறியும் இல்லாவிட்டால் கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளிலிருந்து வந்தவர்கள், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை டெஸ்ட் செய்வது தேவையில்லை என்ற ஐ.எம்.சி.ஆர் நிலைபாடு சரியே என ஆதரிக்கிறார் டாக்டர் ரமணன். ஆனால் அதே சமயத்தில் சளி, இருமல், ஜூரம், மூச்சு விட முடியாதது ஆகிய அறிகுறிகள் இருந்தால், அவர்கள் கொரோனா பாதித்த நாடுகளுக்குப் போகாவிட்டாலும்கூட, கொரோனா பாதித்த நபருடன் பழகியிருக்காவிட்டாலும் பரிசோதிக்க வேண்டும் என்கிறார் அவர். இல்லாவிட்டால் வழக்கமான பருவ கால சளி, இருமல், ஃப்ளூ கொண்டவர்கள் எத்தனைபேர், நேரடியாக கொரோனா தொடர்பான அறிகுறிகள் கொண்டவர்கள் எத்தனை பேர் என்ற புள்ளி விவரம் நமக்குக் கிடைக்காமல் போய்விடும் என்கிறார் அவர். 130 கோடி பேர் கொண்ட நாட்டில் பரிசோதனை முறைகள் கவலை தரும் அளவுக்கு மோசமாக உள்ளதாக அவர் கருதுகிறார்.

இந்தியாவில் சுமார் 40-80 லட்சம் பேருக்கு ஐ.சி.யு சிகிச்சை தேவைப்படலாம் என்பதால் அந்த வசதிகளையும் விரைந்து அதிகப்படுத்த வேண்டும் என்பது டாக்டர் ரமணனின் கருத்து. அதனால் ஐ.சி.யு அமைப்பதற்கான வெண்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகளையும் மருந்துகளையும் உடனடியாக பெருமளவில் இறக்குமதி செய்ய வேண்டும் என்கிறார் அவர். அரசாங்கத்திற்குக் கொடுத்த வழிகாட்டுதலிலும் இதற்கு முன்னுரிமை கொடுத்து கூறியிருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

கொரோனா அறிகுறிகள் (சளி, இருமல், காய்ச்சல், மூச்சுக் கோளாறுகள்) கொண்டவர்களுக்கு அவர் கூறும் அறிவுரை:

*ஒரு வாரம் வரை வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும். அறிகுறி தென்படத் துவங்கிய உடனேயே அதைச் செய்யத் துவங்க வேண்டும்.

*ஐந்து நாட்களுக்குப் பிறகும் அறிகுறிகள் தொடர்ந்தால், பரிசோதனை மையத்திற்குச் சென்று டெஸ்ட் செய்துகொள்ள வேண்டும்.

*சளி, காய்ச்சல், இருமல் வந்தவுடனேயே டெஸ்ட்டுக்கு ஓடக்கூடாது.

கொரோனா அறிகுறிகளுடன் வீட்டில் ஓய்வெடுக்கும் போது சக குடும்பத்தினர் பீதியடைய வேண்டாம் என்று கூறும் அவர், எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது, எது தேவையில்லை என கூறுகிறார்

வீட்டில் கொரோனா பாதிப்பு கொண்டவர் இருக்கும் போது
செய்யக்கூடியவை

அறைக்குள் நுழைந்து சாப்பாடு பரிமாறலாம்

தட்டைக் கையில் கொடுத்தாலும் பிழை இல்லை.

அவர்கள் சாப்பிட்ட தட்டு, கப் உள்ளிட்டவற்றை கழுவுவதில் தவறில்லை.

அவர்களது ஆடைகளைத் துவைப்பதில் பிரச்சனை இல்லை.

வெறும் கையாலேயே துவைக்கலாம். அதற்கு கையுறை அணிய வேண்டியதில்லை.

முடிந்த பிறகு நன்றாக கையை சோப்பு போட்டு கழுவினால் போதுமானது.

ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை சோப்பு போட்டு கை கழுவினாலே போதுமானது.

செய்யக்கூடாதவை அல்லது தவிர்க்க வேண்டியவை

இரண்டு அடி தூரம் தள்ளி நின்று அல்லது அறைக்கு வெளியே நின்று தட்டை தள்ளி விடுவது.

அவர்களுக்கு சேவை செய்யும் போது முகமூடி அணியும் அவசியமில்லை.

அவர்களது பொருட்களைப் பயன்படுத்தும்போது கிளவுஸ் அணிய வேண்டியதில்லை. எனினும் எல்லாம் முடிந்த பிறகு சோப்புப் போட்டு நன்றாகக் கை கழுவ வேண்டும்.

அவசியமில்லாமல் எல்லோரும் முகக் கவசம் அணிவது, தேவையானவர்களுக்கு அதைக் கிடைக்காமல் செய்துவிடும் என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் ரமணன். குறிப்பாக மருத்துவப் பணியாளர்களுக்கு மாஸ்க் கிடைக்காமல் போகும் அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் என்கிறார் அவர். குறிப்பாக, கிருமித் தொற்று ஏற்படாதவர்கள் மாஸ்க் அணிய வேண்டியதில்லை என்கிறார் அவர்.

பசு மூத்திரம் குடித்தால் கொரோனா வராது அல்லது ஓடிவிடும் என்பது போன்ற வாதங்களுக்கு அறிவியல் ஆதாரமில்லை என்கிறார் டாக்டர் ரமணன். ஹோமியோபதி மருந்துகள் பலன் கொடுக்கும் என்பதற்கும் ஆதாரமில்லை என்கிறார் அவர்.

டாக்டர் ரமணன் தி வயர் இணைய தளத்திற்கு கொடுத்த நேர்காணலின் திருத்தி எழுதப்பட்ட வடிவம்.

நன்றி: https://thewire.in/health/india-coronavirus-ramanan-laxminarayan