அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு எதிராக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய மூன்று பேரும் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகப் புகார் கூறியுள்ளார் அதிமுக கொறடா ராஜேந்திரன். அதிமுகவிற்கு எதிராக செயல்படுவதாக புகார் கூறிய ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலிடம் அளித்த புகார் மனுவில், எம்எல்ஏக்கள் மூன்று பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் குறித்து 3 எம்எல்ஏக்களும் 7 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியிருந்தார் சபாநாயகர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது திமுக. சபாநாயகர் தனபால் மீது திமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தடைவிதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது.

சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக அதிருப்தி அடைந்த அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் கடந்த வெள்ளி கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இதைதொடர்ந்து, இந்த மனு அவசர வழக்காக இன்று (மே 6) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு எதிராக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர் நீதிபதிகள். மேலும், இதுதொடர்பாக சபாநாயகர் தனபால் விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் செயல்பட்டதாக கூறி 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், 113 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையாக ஆட்சியை அமைத்துள்ளது அதிமுக. திமுக-காங்கிரஸ் கூட்டனியில் 97 தொகுதிகள் வெற்றிபெற்று வலுவான எதிர்கட்சியாக தமிழகத்தில் உள்ளது. இந்நிலையில், 118 தொகுதி

தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாகவுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் தனபால் எடுக்கும் நடவடிக்கைகள் ஜனநாயக படுகொலை செய்வதுபோன்று உள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மீது திமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்படும் என்று பேசினார் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன்.

டிடிவி தினகரனின் ஆதரவான தங்க தமிழ்ச்செல்வன், “மக்களவை தேர்தலில் அதிமுக பெரும் அச்சத்தில் உள்ளது. நம்பிக்கையை இழந்துவருகிறது. பாஜக வெற்றி பெற்றாலும் அதிமுகவுக்கு பலவீனமே. சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடிப்போம் என அதிமுகவினர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ ரத்தின சபாபதி, “தர்மம், நீதி வென்றது என்று சொல்லக் கூடிய வகையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆட்சிக்கு எதிராகவோ, கட்சிக்கு எதிராகவோ நாங்கள் எந்த சூழ்ச்சியும் செய்யவில்லை. ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு பதவி கொடுத்தனர்.” என்று தெரிவித்தார்.

இரட்டை இலை சின்னம் எங்கு உள்ளதோ அங்குதான் நாங்களும் இருப்போம் என்று தெரிவித்தார் எம்எல்ஏ கலைச்செல்வன். மேலும், சபாநாயகர் தனபாலின் அணுகுமுறை தவறானது எனத் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தெரியவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார் திமுக ஆர்.எஸ்.பாரதி.