சாதி, மதத்தைக் கொண்டு தேர்தல் ஆதாயம் காணும் வேட்பாளர்கள்மீது கடும் நடவடிக்கை எடுங்கள் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த 11ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் பல்வேறு சர்ச்சைகளோடு நடந்து முடிந்த நிலையில், வரும் 18ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. களத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் பிற கட்சிகளை விமர்சனம் செய்து தேர்தல் பரப்புரையை செய்து வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவரையொருவர் விமர்சனம் செய்யும்போது தனிநபர் தாக்குதல்கள் மற்றும் மிகவும் தரம் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி வருவதற்கும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சாதியையும், மதத்தையும் கொண்டு வேட்பாளர்கள் தேர்தல் பரப்புரையில் பேசிவருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையமும் கண்டனம் தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

தேர்தல் பரப்புரையில் சாதி, மதத்தைக் கொண்டு பரப்புரை செய்யும் வேட்பாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (ஏப்ரல் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது, சாதி, மதத்தைக் கொண்டு பரப்புரை செய்யும் வேட்பாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தினர் நீதிபதிகள்.

அதைதொடர்ந்து, வெறுப்புப் பேச்சுகளைக் கொண்டு பரப்புரை மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு எங்களுக்கு அதிகாரம் இல்லையென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. இதைக் கேட்ட நீதிபதிகள், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசும் அரசியல்வாதிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை எனக்கூறி வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.