மார்ச் 16 ஆம் தேதி, 53 ஆவது ஷங்கர் ஷாத் கவியரங்கம் புது டில்லியில் உள்ள மாடர்ன் பள்ளியில் நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் ஆசியத் துணைக்கண்டத்தில் உள்ள சிறந்த உருதுக் கவிஞர்களைக் கொண்டாடும்விதமாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இதில் 15 முக்கியமான கவிஞர்கள் கலந்துகொண்டனர். இதில் ஒரு வேறுபாடாக இரு நாட்டிற்கும் நிலவும் பதட்டநிலை காரணமாக பாகிஸ்தானியக் கவிஞர்கள் யாரும் அழைக்கப்படவில்லை.

இந்த கவியரங்கத்தில் கவிஞரும் பாடலாசிரியருமான ஜாவிட் அக்தர், இது வரை பதிப்பிக்காத ஒரு புதிய பாடலை முதன் முறையாக இயற்றினார். அப்பாடல் கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் இந்த இருண்ட காலத்தில் குரலெழுப்புமாறு அமைந்திருந்தது.

அனைவரும் பேசுவதற்கு அஞ்சுவதை  நீங்கள் எழுத வேண்டும்

இந்த இரவு இதற்கு முன் இவ்வளவு இருள் நிறைந்து காணப்படவில்லை, எழுதுங்கள்!

புகழாரம் பாடிய உங்கள் எழுதுகோல்களை வீசியெறியுங்கள்

இருதயத்தின் ரத்தத்தில் தோய்த்து உண்மைகளை எழுதுங்கள்!

உங்களைச் சுருக்கும் எல்லைகள் அனைத்தையும் உடைத்தெறியுங்கள்

எல்லையில்லாத வானத்தின் கீழ் புதியது படைக்க எழுதுங்கள்!

செய்தித்தாள்களில் இடம்பெற அனுமதிக்காத,

ஆனால் அனுதினமும் எங்கும் நிகழ்பவற்றை எழுதுங்கள்!

இது தான் நடந்தது என்பது மட்டுமே சொல்லப்படுகிறது

ஆனால் என்ன நடக்கவேண்டும் என்பதை எழுதுங்கள்!

இந்த தோட்டத்திற்கு வசந்தம் வரவேண்டும் என்று உங்களுக்கு விருப்பமிருந்தால்,

ஒவ்வொரு கிளைக்கும் ஒவ்வொரு இலைக்கும் அழைப்புவிடுங்கள், எழுதுங்கள்!

                                                 – ஜாவித் அக்தர்