மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் பேனர்கள், கட்அவுட்டுகள் வைக்க இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கட்சி கூட்டங்களுக்கு மக்களை வாகனங்களில் அழைத்துச் செல்லவும் தடை விதித்துள்ளது.

பணம் பெறுவதும், கொடுப்பதும் தவறு

2019 மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதிவரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் காலியாகவுள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும் சேர்த்து ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “வாக்குக்கு பணம் பெறுவதும், கொடுப்பதும் தவறு. இது சட்டப்படி குற்றம். இதுதொடர்பாக நீதிமன்றங்களும் பல்வேறு உத்தரவுகளை உத்தரவிட்டுள்ளது. ஆனால், இவை ஏதும் முறையாக நடைமுறைபடுத்தப்படுவதில்லை. வாக்குக்கு பணம் பெறுவதும், கொடுப்பதும் தவறு என்பதை பொதுமக்களும், வாக்காளர்களும் உணரவேண்டும். இதுதொடர்பாக, செய்திதாள்களிலும், ஊடகங்களிலும் விளம்பரம் செய்ய உத்தரவிட வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருந்தார் கே.கே.ரமேஷ்.

பேனர்கள், கட்அவுட்டுகள் வைக்க தடை

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச் 14) விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் பிளக்ஸ் போர்டு, பேனர்களை வைப்பது தொடர்பாக ஏற்கனவே பல உத்தரவுகளை வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சியினரின் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டனர்.

மேலும் பேசிய நீதிபதிகள், “அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களும், பிரச்சாரக்கூட்டங்களுக்கும் மக்களை அதிக அளவில் லாரி, பேருந்து உள்ளிட்டவற்றில் அழைத்துச் செல்வதையும் பார்க்க முடிகிறது. அதனால், அரசியல் கட்சியினர் தங்களது கூட்டங்களுக்கு மக்களை வாகனங்களில் அழைத்துச் செல்ல தடைவிதிக்கப்படுகிறது.” என உத்தரவு பிறப்பித்தனர்.

அரசியல் கட்சிகளின் கூட்டம் நடைபெறும் இடங்களுக்கு பெரும் அளவில் மக்களை அழைத்துச் செல்ல அதிகாரிகள் அனுமதி வழங்கக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில், தாமாக முன்வந்து அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர்மனுதாரராக சேர்க்கவும், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.