கிரிக்கெட் வீரர்கள், சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு ட்விட்டர் வாயிலாக குரல் கொடுப்பது சமீபகாலங்களில் அதிகரித்துவந்துள்ளது. தமக்கும் அரசியல் அறிவு உண்டு என்பதுபோலும் தன்னால் மக்களுக்கு உதவ முடியும் என்பதுபோலவும் இவர்களது அறிக்கைகள் சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் அரசியலில் ஈடுபட உரிமை உண்டென்றபோதிலும் ஜனநாயக நாட்டில் மக்களுக்குத்தான் அவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்க்கும் சக்தி உண்டென்பது அனைவரும் தெரிந்ததே!
ஏற்கனவே சச்சின், கம்பீர், அசாருதீன் போன்ற முன்னணி வீரர்கள் கிரிக்கெட்டை விட்டு அரசியலில் தங்கள் பணியை சிறப்பாக செய்துவருகின்றனர். இந்நிலையில் தோனி என்ற காந்த சக்தியை பாஜக தன் பங்குக்கு கட்சியில் இணைக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
உலகப் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், கீப்பர், மகேந்திர சிங் தோனி இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் ஓய்வு பெறுவார் என நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு முடிவை எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சஞ்சை பஸ்வான், “தோனி பாஜகவில் இணைவார். இதைப் பற்றி இவர் நெடு நாட்களாகவே பேசிவருகிறார்.” எனத் தெரிவித்துள்ளார். “இது பற்றிய பேச்சு நீண்ட காலமாகத் தொடர்கிறது என்றாலும் முடிவை தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதை அறிவித்த பிறகுதான் தெரியும்” எனவும் கூறியுள்ளார்.
முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜக தலைவர் அமித் ஷா தோனியைச் சந்தித்து ஆதரவு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு இறுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளதால் இப்போதே பாஜக தன்னுடைய வேலைகள் துரிதப்படுத்தியுள்ளது. தோனி ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவரை முன்நிறுத்தி பல முடிவுகளை எடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.