கிட்டத்தட்ட 50 லட்சத்திற்கும் மேலான இந்திய ஆண்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னால் 2016-2018 வரையிலான காலகட்டத்தில் தங்கள் வேலைகளை இழந்துள்ளதாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலையான வேலை வாய்ப்பு மையம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டுக்குப் பின்னர் வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே இருந்துள்ளது. இந்நிலையில் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ‘ஸ்டேட் ஆஃப் ஒர்க்கிங் இந்தியா’ (State of Working India) என்ற ஆய்வின்படி 2016 நவம்பர் மாதத்திற்குப் பிறகு நாட்டில் 50 லட்சம் ஆண்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

அதேபோல 2011-2018 வரை வேலையின்மையின் சதவிகிதம் இரு மடங்கு உயர்ந்து 6% ஆக  உள்ளதாகவும், மேலும் 2016 ஆம் ஆண்டு 72 சதவிகிதமாக இருந்த வேலைப்பார்ப்பவர்களின் நிலை தற்போது 68 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல நகரங்களில் வேலை பார்ப்பவர்களின் சதவிகிதம் 68-இருந்து 65 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இந்தியாவின் சக்தி, பலம் என்றெல்லாம் கருதப்படும் இளைஞர்கள் குறிப்பாக 20 முதல் 24 வரையிலான இளைஞர்கள் அதிகளவில் வேலை இல்லாமல் உள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

ஆண்கள் நிலையைவிட பெண்கள் அதிகளவில் வேலைவாய்ப்பின்மையால் தவிக்கின்றனர் என்கிறது ஆய்வு. தொழிலாளர் புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்தியத் தொழிலாளர் சந்தை கடந்த மூன்று ஆண்டுகளாகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் இன்னும் சில ஆண்டுகளில் நகர்ப்புறத்தில் அதிகளவில் மக்கள் வசிக்கவுள்ளதால் அங்கு நிலவப்போகும் வேலையின்மை தவிர்க்க ஒரு புதிய திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஆய்வு, “கடந்த மூன்று வருடங்கள், இந்தியாவின் தொழிலாளர் சந்தை வரலாற்றில் இது வரையில் இல்லாத அளவுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.” என்று கூறுகிறது.
இந்தியாவையே மாற்றப்போவதாக, கருப்புப் பணத்தை வெளிக்கொண்டுவருதாக மோடி சொன்ன அத்தனை புரட்டுகளும் ஒவ்வொன்றாக நொறுங்குகின்றன. இந்தியாவில் ஒரு துறை விடாமல், ஒரு தொழில் விடாமல், ஒரு குடும்பம் விடாமல், ஒரு மனிதர் விடாமல்  அனைவரையும் பாதிக்கும் இந்த முடிவை அவர் எதேச்சதிகாரமாக எடுத்தது தான் இதில் பெரும் அதிர்ச்சி.