2019 மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் இன்று (ஏப்ரல் 8) வெளியிட்டனர்.

2019 மக்களவை தேர்தல் நாடுமுழுவதும் வரும் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல், தேர்தல் அறிக்கை வெளியிடுதல், தேர்தல் பிரச்சாரங்கள் என நாடுமுழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த 2ஆம் தேதி தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், பாஜகவும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

48 பக்கங்கள் கொண்ட பாஜகவின் தேர்தல் அறிக்கையில் 75 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக  ‘சங்கல்ப் பத்ரா’ எனும் பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய அமித்ஷா, “உலக அளவில் இந்தியாவை ஒரு பொருட்டாகவே கருதாத நாட்கள் இருந்தன; இந்த 5 ஆண்டுகளில் அனைத்தும் மாறியிருக்கிறது.” என்று தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில் பள்ளிகள் அளவில் கற்பித்தல் அதிகரிக்கப்படும்.

2024க்குள் வீடுகள் அனைத்திற்கும் குழாய் தண்ணீர் இணைப்பு வழங்கப்படும்.

அரசியலமைப்பு சட்டத் திருத்தம் மூலம் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு.

தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து விரைவாக ராமர் கோயில் கட்ட முயற்சி செய்யப்படும்.

சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைகள், சடங்குகளை உச்ச நீதிமன்றம் முன் எடுத்துரைத்து, அவற்றை பாதுகாப்போம்.

சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

வட்டி இல்லாமல் ரூ.1 லட்சம் வரை குறுகிய கால விவசாய கடன்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்படும்.

உள்கட்டமைப்புத்துறையில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு உறுதி.

தீவிரவாதம், பயங்கரவாதத்திற்கு எதிராக துளிகூட சமரசம் இல்லை என்ற கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும்.

ராணுவத்திற்கு தேவையான அதிநவீன கருவிகள், தளவாடங்கள் வாங்குவது விரைவுபடுத்தப்படும்.

மத்திய பல்கலையில் அடுத்த 5 ஆண்டுகளில் 50% இடங்கள் அதிகரிக்கப்படும்.

நாடு முழுவதும் 50 நகரங்களில் மெட்ரோ ரயில்.

2022 க்குள் அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக இணையதள வசதி.

ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின்கள்.

ஜி.எஸ்.டி எளிமையான வடிவமைப்புக்கு மாற்றப்படும்.

நாடு முழுவதும் 200 க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் அமைக்கப்படும்.

கருப்பு பணத்திற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

சிசான் சம்மான் திட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும்

முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்

நாடு முழுவதிலும் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்

நவீன கால சூழல்களை கருத்தில் கொண்டு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்

நதிகள் இணைப்பிற்கு தனி ஆணையம் உருவாக்கப்படும்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என அதிமுக கூறியிருந்த நிலையில், அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இதுகுறித்து ஏதும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.