காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரிட்டனில் குடியுரிமை உள்ளதா என்று விளக்கம் அளிக்க அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

பிரிட்டனில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு குடியுரிமை உள்ளதாகவும், அவர் ஒரு நிறுவனத்தின் இயக்குநராக உள்ளதாகவும் பாஜக எம்.பி சுப்பிரமணிய சாமி புகார் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றும் அனுப்பியிருந்தார் சுப்பிரமணிய சாமி. அதைதொடர்ந்து, இந்தப் புகார் தொடர்பாக 15 நாட்களுக்குள் ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், பிரிட்டனின் வின்செஸ்டர் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தின் இயக்குநராகவும், செயலாளராகவும் ராகுல் காந்தி பணியாற்றி வருவது தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த நிறுவனம் செலுத்திய 2005 மற்றும் 2006ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் தாக்கலில் ராகுலின் பிறந்த தேதி சரியாக குறிப்பிடப்பட்டு, பிரிட்டனைச் சேர்ந்தவர் எனச் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் உண்மை நிலை என்னவென்பதை ராகுல் காந்தி விளக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ராகுல் காந்தியின் மீதான குடியுரிமை புகார் குப்பைத்தனமானது என்று பதிலளித்துள்ளார் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி. “ராகுல் காந்தி, இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்” என்றும் அவர் தெரிவித்தார்.