ஆளுங்கட்சி – எதிர்கட்சியினரிடையே எழுந்த கடும் வாக்குவாதங்களை அடுத்து மக்களவையில் ஒப்புதல் பெற்றது தேசிய புலனாய்வு முகமை சட்டத்திருத்த மசோதா.

தேசிய புலனாய்வு முகமை – National Investigation Agency:

கடந்த ஜூலை 8ம் தேதி மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய புலனாய்வு முகமை (சட்டத்திருத்த) மசோதாவினை தாக்கல் செய்தார்.

தேசிய புலனாய்வு முகமை என்பது 2008ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து NIA எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அமைக்கப்பட்டது. தீவிரவாதச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க சிறப்பு அந்தஸ்துடன் அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் நடைபெறும் தீவிரவாதச் சம்பவங்களை எதிர்கொள்ள மாநில அரசுகளின் அனுமதி இன்றியேகூட விசாரணைகள் மேற்கொள்ள இவ்வமைப்பு உரிமையுள்ளது.

என்னென்ன மாற்றப்பட்டுள்ளன?

இந்தச் சட்டத்தில் சில திருத்தங்களை தற்போது பாரதிய ஜனதா அரசு கொண்டுவந்துள்ளது. அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட குற்றங்களுக்கான பட்டியலில் மேலும் சில குற்றங்கள் சேர்க்கப்படுகின்றன. ஆட்கடத்தல், தடை செய்யப்பட்ட ஆயுதங்களை உற்பத்தி அல்லது விற்பனை செய்தல், வெடிபொருட்கள் சட்டம் 1908ன் கீழ் வரும் குற்றங்கள், கள்ளநோட்டு அச்சிடுதல் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன. இனி தேசிய புலனாய்வு முகமை இந்தக் குற்றங்கள் சார் செயல்களைப் பற்றியும் நடவடிக்கை எடுக்கலாம்.

Related image

இக்குற்றங்களை விசாரிக்கும் புலனாய்வு முகமை அதிகாரிக்கு அவ்வழக்கினை விசாரிக்கும் காவல்துறைக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அத்தனையும் உண்டு. இவ்வமைப்பின் அதிகார வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது; இந்தியாவிற்கு வெளியே சர்வதேச உடன்படிக்கைகளுக்கு உட்பட்டு அந்தந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இக்குற்றங்கள் பற்றி விசாரிக்கும் அதிகாரமும் உண்டு. அப்படி வெளிநாடுகளில் நடந்து அதனால் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும்போது மத்திய அரசு அதுபோன்ற வழக்குகளை புலனாய்வு முகமையிடம் வழங்கும். இது டில்லியில் அமையும் சிறப்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வரும்.

இவ்வரையறுக்கப்பட்ட குற்றங்களை விசாரிக்க மத்திய அரசே சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது. மேலும் மாநிலங்களிலுள்ள அமர்வு நீதிமன்றங்களை அவ்வவற்றுக்குரிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியோடு கலந்தாலோசித்து இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களாக அறிவிக்கலாம்; ஒரு உயர்நீதிமன்றத்தின் கீழ் இயங்கும் ஒன்றுக்கு மேற்பட்ட அமர்வு நீதிமன்றங்கள் சிறப்பு நீதிமன்றங்களாக அறிவிக்கப்படும் எனில் அந்த தலைமை நீதிபதியே வழக்குகளைப் பிரித்தளிப்பார்.

இவ்வாறு அம்மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சட்டதிருத்த மசோதா அரசியல் நோக்கம் கொண்டிருப்பதாகவும் இதனை பாஜக அரசு தன் சுயலாபத்துக்காகப் பயன்படுத்தும் என்றும் எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டினர். நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைசிக்கும் உள்துறை அமைச்சருக்கும் இது தொடர்பாக நீண்ட காரசாரமான விவாதம் நடைபெற்றது.

இறுதியாக வாக்கெடுப்பிற்கு வந்த மசோதாவிற்கு 278 பேர் ஆதரவும் 66 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். இறுதியாக மசோதா பெரும்பான்மை ஒப்புதலோடு நிறைவேறியது.