“தீண்டாமை ஒரு பாவச்செயல்

தீண்டாமை ஒரு பெருங்குற்றம்

தீண்டாமை மனிதத்தன்மையற்ற செயல்”

என்று கற்பிக்க வேண்டிய பள்ளியிலேயே சாதிரீதியாக மாணவர்கள் பிரித்து வைக்கப்பட்டிருப்பது பெரும் அவலநிலை. நாம் அனைவரும் தமிழர் என்று பெருமையாகக் கூறிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்திலும் தமிழ்நாட்டில் எங்கோ ஓர் மூலையில் சாதிரீதியாகத் தீண்டாமை, கொலை, ஆவணக்கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரச்சனைகளைச் சாதி இந்துக்களால் சந்திவருகிறார்கள் தலித் மக்கள்.

ஒற்றுமை உருவாக வேண்டிய பள்ளியில் சாதியால் நாம் வேறுபட்டிருக்கிறோம் என்பதைக்காட்ட மாணவர்கள் ஜாதிவாரியாக கயிறுகள் கட்டி பள்ளிக்கு வருகின்றனர். தலித் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பள்ளிகளில் சமைக்க அனுமதி மறுக்கப்படுகிறது. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் சமைத்தால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று பிஞ்சு குழந்தைகளின் நெஞ்சில் சாதியை ஊற்றி வளர்க்கிறார்கள் சாதி இந்துக்கள்.

வளர்ந்துவரும் நவீன உலகில் சாதிரீதியிலான பாகுபாடுகள் அதிகளவில் கல்விக்கூடங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் பார்க்கப்படுகிறது. பிஞ்சுக் குழந்தைகளாக இருக்கும்போதே அவர்களுக்குச் சாதி என்னும் நஞ்சு ஊட்டி வளர்க்கப்படுவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும்போது, தம்மைப் போன்ற சக மாணவனை சமமாக பார்க்க மறுக்கிறது அவர்கள் மனது. மேலும், சில மாணவர்கள் இடஒதுக்கீடின் கீழ் வரும் மாணவர்களை ஏளனமாகவும், அவர்களுக்குத் திறமையில்லாதது போன்றும் விமர்சிக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் இந்தப் புரிதல் பல ஆசிரியர்களுக்கே இல்லை என்பதுதான்.

இந்தப் புரிதல் இருந்திருந்தால் பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் சாதிரீதியான பாகுபாட்டால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டார்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வும், சாதியரீதியிலான பிரச்சினைகளும் சமீபத்தில் அதிகப்படியான மாணவர்களின் மரணங்களுக்கும், படிப்பை பாதியில் நிறுத்திக்கொள்வதற்கும் காரணமாக இருந்துள்ளது.

மும்பையில் மருத்துவம் பயின்று வந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பாயல் தாத்வி, தன்னுடன் படிக்கும் சக மாணவர்களாலும், கற்பிக்கும் ஆசிரியர்களாலும் சாதிப் பாகுபாட்டால் புறக்கணிக்கப்படு கடந்த மே மாதம் தற்கொலை செய்துகொண்டார்.

முதலில் பாயல் தாத்வி தற்கொலை செய்துகொண்டார் என்று கூறுவதே அபத்தமான ஒன்றாகப் பார்க்கவேண்டும். ஆம்! அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. மாறாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். சாதிவெறி பிடித்த மிருகங்களால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

அதேபோல சாதிய பாகுபாட்டால் கடந்த 2016இல் ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா, 2017ஆம் ஆண்டில் டெல்லி நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை நாடு முழுவதும் பல்வேறு விவாதத்தை எழுப்பியது. அதன் மூலமே உயர்கல்வி நிறுவனங்களில் நிலவிவரும் சமூக சாதிய ஏற்றத்தாழ்வுகள் வெளிச்சத்திற்கு வந்தது.

உயர்கல்வி நிறுவனங்களுக்கு முன்பு பள்ளிகளிலே சாதிய ஏற்றதாழ்வுகள் அப்பட்டமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி படிக்கும் மாணவர்கள் ஜாதிவாரியாகக் கயிறுகள் கட்டிக்கொண்டு பள்ளிக்குச் செல்கின்றனர். இதற்கு அந்தக் கல்வி நிறுவனங்களும் உடந்தையாக உள்ளது.

இந்நிலையில், மாணவர்களை ஜாதிவாரியாகக் கயிறுகள் கட்டச் சொல்லும் பள்ளிகளைக் கண்டறிந்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

2018 தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டிலுள்ள ஒருசில பள்ளிகளில் மாணவர்கள் விதவிதமான நிறங்களில் கையில் கயிறுகள் கட்டி உள்ளனர். குறிப்பாக மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் காவி ஆகிய நிறங்களில் கயிறுகள் கட்டியிருக்கின்றனர். இந்தக் கயிறுகள் மூலம் மாணவர்களின் ஜாதிகள் கண்டுபிடிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து ஜாதிவாரியாக மாணவர்களைப் பிரிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாகப் பள்ளிக் கல்வித்துறையின் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி அவ்வாறு நடக்கும் பள்ளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதச்சார்பின்மை கொண்ட நாடு இந்தியா என்று கூறப்படும் நிலையில், தற்கொலை செய்துகொள்ளும் மற்றும் கொலை செய்யப்படும் மாணவர்களின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன, இங்கு சாதி, மதம், மொழி, இனம் போன்றவற்றால்தான் இவை நடைபெறுகின்றன என்று. சாதி என்னும் கொடிய நஞ்சை மாணவர்களின் மனதில் விதைக்காமல், மனிதனை சக மனிதனாக மதிக்கப் பள்ளிக்கூடங்களில் கற்றுத்தர வேண்டும்.

பாகுபாடு இல்லதா சமூகம் அமைய ஏற்றத்தாழ்வுகளை மண்ணாக்கி, மனிதநேயத்தை உரமாக்கி எதிர்கால இந்தியாவை மரம்போல மாணவர்களும், இளைஞர்களும் உருவாக்க வேண்டும்.