மோடி இந்த தேசத்திற்குச் செய்த பெரும் அநீதிகளில் ஒன்று விவசாயிகளுக்குச் செய்த துரோகம். அவரது கொள்கைகளால் நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அதைவிட அநியாயம் விவசாயிகளின் போராட்டத்தை மோடி தொடர்ந்து அலட்சியப்படுத்தி அவர்களை அவமானப்படுத்தியது.

அப்படி பெரும் வேதனைக்கு ஆளான தமிழக விவசாயிகள் 111 பேர் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் போட்டியிடப்போகிறார்கள் என்று PTI செய்திக்குறிப்பு கூறுகிறது.

ஏப்ரல் 23 ஆம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய தமிழ்நாட்டிலிருந்து குறைந்தது 300 விவசாயிகள் வாரணாசிக்கு டிரெய்ன் டிக்கட்டுகள் எடுத்துள்ளதாக விவசாயிகளின் தலைவர் ஐயாக்கண்ணு கூறினார்.

இதன் நோக்கம் மோடி 2014இல் விவசாயிகளுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளைக் காக்கத் தவறியதற்கு தங்களின் எதிர்ப்பாக இதைச் செய்வதாகக் கூறினார். மேலும் அவர் பாஜக தங்களுடைய 2019 தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் நலன் கருதி அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் தாங்கள் இந்த வேட்புமனு தாக்கல் போராட்டத்தைக் கைவிடுவதாகத் தெரிவித்தார்.

அனைத்து வங்கிகளும் விவசாயக் கடன்களை ரத்து செய்தல், தங்களுடைய உற்பத்தி பொருட்களுக்கு லாபகரமான தொகை, தண்ணீர் பிரச்சனை தீரத் தேசிய நதிகளை ஒன்றிணைத்தல், 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் 5000 ரூபாய் ஓய்வூதியம் வழங்குதல் போன்றவற்றை விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளாக வைத்துள்ளனர்.

இதற்காக 2017 இல் இருந்து தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த தமிழக விவசாயிகள் புது டில்லியில் மத்திய அரசின் கவனத்தை பெறக் கடுமையான பல போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.

2017 ஏப்ரலில் வறட்சி நிவாரண நிதி சம்பந்தமாக மோடியைச் சந்திப்பதற்கான அனுமதி மறுக்கப்பட நிலையில் பிரதம மந்திரியின் அலுவலகம் முன்பு அவர்கள் நிர்வாண போராட்டம் நடத்தினர்.

அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தில்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் விவசாயிகள் நீண்ட காலமாகப் போராட்டம் நடத்திவந்தனர். அதில் அவர்கள் தங்கள் தலையை மழித்துக்கொள்வது, இறந்த மிருகங்களை தங்கள் வாயில் கவ்விக்கொள்வது, கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மண்டையோட்டை அனைவரின் பார்வைக்கு வைப்பது, செப்டம்பர் 2017 இல் மனித கழிவுகளை உண்பது, எல்லாவற்றிற்கும் உச்சமாக மனித மாமிசத்தை உண்ணப்போவதாக அறிவித்தது என்று விவசாயிகள் தங்களின் போராட்டத்திற்குக் கவனம் பெறப் பல வேதனையான செயல்களில் ஈடுபட்டார்கள்.

விவசாயிகளின் தலைவர் ஐயாக்கண்ணு பி‌.டி‌.ஐ. செய்தி நிறுவனத்திற்கு, “தமிழக கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போன்றவை தங்களின் 2019 தேர்தல் அறிக்கையில் விவசாயக் கடன்களை மொத்தமாக ரத்து செய்வதாக கூறியுள்ளன. விவசாயிகளான நாங்கள் பாஜகவை இதே கோரிக்கையை தங்கள் 2019 தேர்தல் அறிக்கையில் சேர்க்குமாறு நிர்ப்பந்திக்கிறோம்”. காங்கிரசுக்கு ஏன் இந்த கோரிக்கையை வைக்கவில்லை என்ற கேள்விக்கு அவர் “பா.ஜ.கதான் தற்போது ஆளும் கட்சியாக இருப்பதால்தான் அவர்களுக்கு இந்த கோரிக்கையா நாங்கள் வைக்கிறோம்” என்றார்.

விவசாயிகள் நிம்மதியாக இல்லை. அரசும், அரசியல்வாதிகளும் அவர்களை வஞ்சிக்கிறனர். மக்களாகிய நாமும் அவர்களை அலட்சியப்படுத்துகிறோம். நமக்கு உணவளிப்பதை தவிர அவர்கள் வேறொரு குற்றமும் செய்யவில்லை அவர்களுக்கு நாம் தரும் ஒரே பரிசு மரணமாகத்தான் இருக்கிறது. கடைசி விவசாயியும் இறக்கும்போது தான் அவர்களின் துன்பம் நமக்குப் புரியும் போல.