இந்தியாவின் உயிர்நாடி என இந்திய ரயில்வேயைச் சொல்லுவார்கள். 800 கோடி மக்களை வருடம் முழுவதும் ஏற்றிச் செல்லும் இது உலகின் நான்காவது பெரிய ரயில்வே ஆகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று அது பரிதாபமான நிலையில் உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக எண்ணிலடங்கா விபத்துகள் நிகழ்ந்துள்ளன. டிசம்பர் 2018 இல் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் எண்ணிக்கை 21,053 ஆக உள்ளது. இதுவே 2014-2015 இல் 3,591 ஆக இருந்தது. ஏறத்தாழ ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. இது பற்றி பாராளுமன்றத்தில் ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோஹைன் கூறுகையில் 2013-2014 இல் 831 கோடி பயணிகளாக இருந்தது 2016-2017 இல் 811 கோடியாகக் குறைந்துள்ளது என்றார். மேலும் 30% ரயில்கள் தாமதமாக வருகின்றன. இது வருடா வருடம் அதிகரிக்கின்றன என்ற தகவலும் கிடைத்துள்ளது.   

தண்டவாள பாதைகளைப் புதுப்பித்தல் என்பது ரயில் பாதுகாப்பில் மிக முக்கியமானது. தகவல் அறியும் சட்டம் மூலம் 2019 பிப்ரவரியில் பெற்ற தகவலின் படி 2017-2018 நிதியாண்டு வரை பாஜக அரசு புதுப்பித்த பாதைகளின் எண்ணிக்கையை அதற்கு முந்தைய அரசு ஒரே வருடத்தில் (2009) புதுப்பித்தது.

1.17 இலட்சம் கிலோமீட்டருக்கு மேல் ரயில் பாதையைக் கொண்டது இந்திய ரயில்வே. அதில் சில பழமையானது, சில அதிக பயன்பாடுகள் கொண்டது. அப்படியிருக்க இந்த ஐந்து ஆண்டுகளில் வெறும் 4000 கிலோமீட்டருக்கு மட்டுமே பாதைகள் புதுப்பிக்கப்பட்டன. அதாவது மொத்த பாதையில் 3.5%. அதே போல மின்சார பாதைகளின் விஷயத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த முதல் மூன்று வருடங்கள் எதுவுமே செய்யாமல் வீணடிக்கப்பட்டன. நான்காவது வருடத்தில் வெறும் நான்கு  கிலோமீட்டர்கள் மின்சார பாதைகள் மட்டுமே போடப்பட்டன.

ரயில்வே துறையில் மிக முக்கியமானது புதிய பாதைகள் போடப்படுவது. இந்தியா ரயில்வேயில் ஒற்றைப் பாதைகளே அதிகம் உள்ளன. அதிலும் கூட 2016-2017 இல் 953 கிலோமீட்டர் போடப்பட்ட பாதைகள் 2017-2018 இல் 409 ஆகக் குறைந்தது.

ரயில்வே நிதி

ரயில்வேயின் முக்கியமான செயல்பாட்டுத் துறைகளைச் சீர்செய்ய பெரும் நிதி தேவைப்படுகிறது. எல்.ஐ.சி யுடன் இந்திய ரயில்வே ரூ.1.5 இலட்சம் கோடிக்குப் போடப்பட்ட ஒப்பந்தமே இது வரை செய்த ஒப்பந்தங்களிலேயே மிக அதிகமானது. இந்திய ரயில்வேயை இந்த ஒப்பந்தம் பெரும் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லும் என்றும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மார்ச் 11,2015 அன்று கூறினார். அதற்கு அடுத்ததாக அக்டோபர் 27, 2015 அன்று ரயில்வே அமைச்சகம் எல்.ஐ.சி யிடமிருந்து ரூ.2000 கோடி பெற்றதாகத் தகவல் இருக்கிறது. அதன் பின் மார்ச் 2018 வரை நிதி கொடுத்ததற்கான எந்த தகவலும் இல்லை.

தோல்வியில் முடிந்த வெளிநாட்டு ஒத்துழைப்புகள்

பல்வேறு ஒப்பந்தங்கள் வெளிநாடுகளுடன் போடப்பட்டன. ஒரே ஒரு டெல்கோ ரயில் பெட்டி சோதனை செய்யப்பட்டதைத் தவிர வேறு எந்த தாக்கங்களும் இதனால் நிகழவில்லை. மோடி 2015 ஏப்ரலில் இல் ஃபிரான்ஸ் சென்றபோது மித வேக ரயில்களுக்கான ஒப்பந்தமும் ரயில்வே நிலையங்களைப் புதுப்பிப்பதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டது. ஆனால் இன்று வரை அதைப் பற்றி ஒரு தகவலும் இல்லை.

அதே போல மே 2015 மோடி சீனாவுடன் 2015-2016 வருடத்திற்குள் இரு நாட்டு ரயில்வேக்களும் கூட்டுறவு செயல்பாடுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதிலும் இன்று வரை ஒரு செயல்பாடும் இல்லை.

ரஷ்யாவுடன் 2018 அக்டோபர் மாதம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் ரயில்வே பணியாளர்களுக்கு உயர் தொழில் நுட்ப அறிவு, மற்றும் பல் நோக்கு ரயில்வே நிலையங்களை உருவாக்குதல் அடங்கும். இது 2015 இல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் தொடர்ச்சி என்று கூறினார்கள். 2015 லும் சரி 2018 லும் இது சம்பந்தமாக ஒரு செயல்பாடும் இல்லை.

பொது – தனியார் கூட்டு எனும் ஏமாற்றம்

ஜூலை 25,2018 அன்று பாராளுமன்றத்தில் ரயில்வே அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக ஒரு பதிலைத் தந்தது, அதில் ரயில் நிலையங்களைப் புதுப்பிப்பதற்கான திட்டங்கள் சிக்கலானவை என்றும் அதற்குத் தொழில்நுட்ப மற்றும் ஏராளமான நிதித் தேவைகள் வேண்டும் என்றது.  இந்தியா முழுவதும் 13 ரயில் நிலையங்களை பொது-தனியார் கூட்டு அமைப்புகளோடு இணைந்து புனரமைக்கப்போவதாக அறிவித்தது. அவை எர்ணாகுளம், கோமி நகர் (லக்னோ), ஹபீப்கஞ்ச் (போபால்), தில்லி சராய், ரோஹில்லா, ஜம்மு தாவி, கோட்டா, கோழிக்கோடு, மட்காவன், நெல்லூர், புதுச்சேரி, சூரத் மற்றும் திருப்பதி ரயில் நிலையங்கள்.  இதற்கான திறந்த ஏலம் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே நடத்தி முடிந்துவிட்டதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலின்படி இன்றைய தேதி வரை இதுவரை ஒரு ரயில் நிலையம் கூட அப்படிப் புனரமைக்கப்படவில்லை.

கடந்த ஏழு வருடங்களில் ரயில்வே அமைச்சகம் 24 கட்டுமான ஒப்பந்தங்களை ரூ.186 கோடிக்குப் போட்டிருக்கிறது. அதில் இரண்டு மட்டுமே உண்மையாக கட்டுமான சம்பந்தப்பட்டவை. மீதி அனைத்தும் பல்வேறு நிபுணர்களை ஈடுபடுத்தியதாக மட்டும் கூறப்பட்டது ஆனால் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. அப்படிச் செயல்படுத்திய இரண்டு ஒப்பந்தங்கள் பன்ஸால் கட்டுமான கழகம் எனும் தனியார் நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டது, ஆனால் ஒப்பந்த தொகை குறிப்பிடவில்லை.

ஒரு பொது-தனியார் கூட்டுச் செயல்பாடுகள் கூட கடந்த இரண்டு வருடங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படவில்லை. ஆனால் செய்திகளில் மட்டும் மோடி அரசாங்கம் பல சாதனைகளை நிகழ்திவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.

கடந்த ஆட்சியில் பெரும் லாபகரமான அரசு நிறுவனமாக இருந்த ரயில்வே துறை, அதன் வெற்றியைப் பல்வேறு நாடுகள் ஆராய்ந்த பெருமையும் பல பல்கலைக் கழகங்களில் பாடத் திட்டமாகவே வைக்கப்பட்டிருந்த ரயில்வேயின் நிலைமை, கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது பாஜக அரசின் மிக மோசமான நிர்வாகத் திறமையையும் கடும் அலட்சியத்தையுமே காட்டுகிறது.