பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அமித்ஷா மீதான புகாரில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது காங்கிரஸ்.

காங்கிரஸ் எம்.பியும், மகிளா காங்கிரஸ் தலைவருமான சுஷ்மிதா தேவ் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பிரதமர் மோடி, பாஜகவின் மூத்த தலைவர் அமித்ஷா ஆகியோர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பாலகோட் தாக்குதல், இந்திய ராணுவம், இஸ்லாமியர்கள் பற்றி பேசியுள்ளார் எனக் குற்றம் சாட்டியுள்ளார் சுஷ்மிதா தேவ்.

மேலும், “இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாகச் செயல்படுகிறது. எனவே தேர்தல் ஆணையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது. இதைதொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மோடி, அமித்ஷா மீதான புகார் குறித்து மே 6ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் அந்த நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இந்நிலையில், இந்த மனு இன்று மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறிக்கையை சமர்ப்பித்த தேர்தல் ஆணையம், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிக்கைக்குக் காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு வரும் 8ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.