டெல்லியில் வரும் 30ஆம் தேதி நடைபெறும் பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் திரைப்படம் தர்பார். இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெறுகிறது. படப்பிடிப்பிற்காக மும்பை செல்லும் ரஜினிகாந்த், அங்கிருந்து பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்காக டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

17ஆவது மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பாஜக 350க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையாக ஆட்சியமைக்கிறது. மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்கிறார். வரும் 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த விழாவிற்கு நட்புரீதியாக ரஜினிகாந்த்க்கு மோடி அழைப்பு விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதிப்பிற்குரிய நரேந்திர மோடிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். மக்களவை தேர்தலில் சாதித்துவிட்டீர்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.” என்று மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.