ஜூலியன் அசாஞ்! இந்த பெயர் உலகின் மிக வலிமையான மனிதர்களை சர்வ வல்லமை படைத்த அரசாங்கங்களைப் பல வருடங்கள் தூங்க விடவில்லை. பின் லேடனுக்குப் பிறகு அமெரிக்கா மிகத் தீவிரமாகக் கொல்லத் துடித்தது இவரைத்தான்.

யார் இந்த ஜூலியன் அசாஞ்? ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினீயரான இவர் ‘விக்கிலீக்ஸ்’ எனும் ஊடக நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு இரகசியங்களை விக்கிலீக்ஸ் இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தார்.

தன் இளவயதிலேயே கம்ப்யூட்டர் ஹாக்கிங் செய்வதில் வல்லவரான ஜூலியன், நாசா மற்றும் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் போன்றவற்றிலுள்ள சர்வர்களை ஊடுருவியவர். இதற்காக அவர் சைபர் கிரைம் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி மன்னிப்பு கோரினார். நீதி மன்றமும் அவரின் வயதை கருத்தில் கொண்டு சிறு தண்டனைகளோடு அவரை விடுவித்தது. அடுத்த பத்தாண்டுகளில் அவர் உலகில் பல பயணம் மேற்கொண்டார். மெல்போர்ன் யூனிவர்சிடியில் இயற்பியல் படித்தார். பின் கம்ப்யூட்டர் பாதுகாப்பு ஆலோசகராகப் பல நிறுவனங்களுக்கு வேலை செய்தார்.

2006 இல் அசாஞ் விக்கிலீக்ஸ் நிறுவனத்தை தொடங்கி அதில் பல ரகசிய செய்திகளை வெளியிட்டார். குறிப்பாக கியூபாவின் குவாந்தநாமோவில் உள்ள அமெரிக்க இராணுவ சிறை, பிரிட்டன் தேசிய கட்சியின் இரகசிய உறுப்பினர் பட்டியல், செயிண்டாலஜி இயக்கத்திலிருந்து உள்ள ஆவணங்கள் மற்றும் கிழக்கு ஆங்கிலியாவின் காலநிலை ஆராய்ச்சி பிரிவின் பல்கலைக்கழகத்தின் ரகசிய மின்னஞ்சல்கள் குறிப்பிடத்தக்கவை.

2010 இல் அமெரிக்கா உலக நாடுகளில் உள்ள 247 அமெரிக்கத் தூதரகங்களிலிருந்து தமது நாட்டுக்கு பரிமாறப்பட்ட ஆயிரக்கணக்கான ரகசிய குறிப்புகள் உள்படப் பல ஆவணங்களை, புலனாய்வு வலைத்தளமான விக்கிலீக்ஸில் அம்பலப்படுத்திப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஐந்து லட்சம் பக்கங்கள் கொண்ட பல ஆவணங்களை அவர் வெளியிட்டார். அதில் குறிப்பாக அமெரிக்காவைக் கோபப்படுத்தும் விதமாக,  ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் போர் சம்பந்தமான ஆவணங்கள். இது அமெரிக்காவுக்குச் சர்வதேச அளவில் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது. சில அமெரிக்க அரசியல்வாதிகள் அவரை தீவிரவாதியைப் போல வேட்டையாடவேண்டும் என்றனர்.

இதனால் அவர் பல நாடுகளில் ஒளிந்து வாழ்ந்தார். அமெரிக்க உளவு நிறுவனங்கள் அவரைக் கைது செய்ய உலகம் முழுக்க தீவிரமாகத் தேடியது.

மே 2011 இல் சிட்னி அமைதி அறக்கட்டளை அவருக்கு அமைதிக்கான தங்கப் பதக்கம் கொடுத்துக் கௌரவித்தது. இந்த விருது இதற்கு முன் நெல்சன் மண்டேலா தலாய் லாமா போன்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இந்த விருது அசாஞ்க்கு மனித உரிமைகளுக்காக துணிவாகப் போராடியதற்குக் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், சுவீடனில் 2 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அசாஞ் மீது வழக்கு தொடரப்பட்டது. லண்டனிலிருந்த அசாஞ்சேவை இங்கிலாந்து காவல்துறை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்தது. எனினும், சுவீடன் கேட்டுக் கொண்டதை ஏற்று, அசாஞ்சேவை அந்நாட்டிடம் ஒப்படைக்க இங்கிலாந்து அரசு முடிவெடுத்தது. அப்படி சுவீடனிடம் ஒப்படைக்கப்பட்டால், சுவீடன் அரசு தன்னை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் என்று அசாஞ் பயந்தார்.

அதனால் அவர் 2011ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி, லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டுத் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். அந்நாட்டு அரசிடம் தனக்கு அரசியல் அடைக்கலம் தருமாறு கோரிக்கை விடுத்தார். தூதரகத்திலிருந்து எப்போது வெளியே வந்தாலும் அவர் கைது செய்யப்படுவார் என இங்கிலாந்து அரசு எச்சரித்தது.

ஈக்வடார் வெளியுறவு அமைச்சர் ரிகார்டோ படினோ அசாஞ்க்கு அரசியல் அடைக்கலம் கொடுப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கு இங்கிலாந்து அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இது இங்கிலாந்து, ஈக்வடார் இடையேயான நல்லுறவைப் பாதிக்கத் தொடங்கியது.

கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி ஈக்குவடோர் ஜனாதிபதி லெனின் மொரினோ அசாஞ்க்கு தனது நாட்டுக் குடியுரிமை வழங்கவிருப்பதான அறிவிப்பினை திரும்பப்பெறுவதாக பெறுவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து லண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் கடந்த ஏழு வருடங்களாக அடைக்கலமடைந்திருந்த அசாஞ்சை பிரிட்டன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பிரிட்டன் காவல்துறை  வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இதற்குச் சர்வதேச அளவில் பத்திரிக்கைகள் கடும் கண்டனக் குரல்களை எழுப்பின. உலகில் நடந்த பல்வேறு சம்பவங்களில் உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவர் அசாஞ். மறைக்கப்பட்ட உண்மைகள், மக்களுக்கெதிரான அநீதி, அட்டூழியங்களுக்கு எதிராக விக்கிலீக்ஸ் ஊடகம் துணிச்சலாகப் போராடி வருகிறது. அப்படி வெளியிடும் செய்திகளில் உண்மைத்தன்மையையும், ஆதாரத்தையும் தொடர்ந்து நிலைநாட்டியது. இது பல அரசுகளுக்கு பெரும் அச்சத்தை உண்டு பண்ணியது. அவர்களின் தூண்டுதலே இந்த கைது. அவரை உடனடியாக விடுதலை செய்வதே பத்திரிகை சுதந்திரத்தின் புனிதத்தன்மையை பாதுகாப்பதாக அமையும்.

தனி ஒரு மனிதனைக் கண்டு இவ்வளவு அரசாங்கங்கள் உளவு அமைப்புகள் எரிச்சலும் பதட்டமும் அடைகிறது என்றால் அவை வெகு நிச்சயமாக மக்களுக்குத் தெரியக்கூடாத உண்மையை மறைக்கின்றன என்றே பொருள். அதே நேரம் ஒரு தனி மனிதனானாலும் உண்மையின் பாதையை அவர் தேர்ந்தெடுத்ததுவே ஜூலியன் அசாஞ்க்கு மக்களிடையே இவ்வளவு அன்பையும் அபிமானத்தையும் தேடித்தந்தது.