தமிழக பா.ஜ.க., வின் தலைவராக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முருகனை நியமித்ததும், பார்த்தீர்களா பா.ஜ.க. வின் தலித் பாசத்தை என்று தோள் தட்டத் தொடங்கிவிட்டது ஒரு கூட்டம். கூடுதலாக தி.மு.க.வில் இருந்து அதன் துணைப்  பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி விலகி பா.ஜ.க.வில் சேர்ந்ததும் பத்திரமே எழுதிக் கொடுத்துவிட்டார்கள் சிலர் பாஜக தான் இனி ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் என்று.

நானும் இதையெல்லாம் நம்ப வேண்டும் என்றுதான் நினைக்கின்றேன். என்ன செய்வது பகுத்தறியும் அறிவை கொஞ்சம் வளர்த்து விட்டுச்சென்று விட்டார்கள் தமிழக அரசியல் முன்னோடிகள். பின்னாட்களில் இப்படியெல்லாம் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவார்கள் என்று தெரிந்தே சொல்லிச் சென்றிருக்கக் கூடும்.

முதலில்  கட்சி, அரசியல் ரீதியிலான நகர்வுகளில் பாஜக சொல்லும் பசப்பு வார்த்தைகளையும் பின்னர் அதைத் தாண்டி சாதிய படி நிலைகளை மீட்டெடுக்க எப்படியெல்லாம்  அது முனைகிறது என்பதையும் நாம் விரிவாகவே பார்க்கலாம்.

வி.பி.துரைசாமி திமுக வில் இருந்து பாஜக விற்கு சென்றிருக்கிறார். இது செய்தி.

இதை கீழ்க்கண்டவாறும் சொல்லலாம்.

அருந்ததியர்களுக்கு 3 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு கொடுத்து அதன் மூலம் பல மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், பேராசிரியர்களை அருந்ததியர் சமூகத்தில் இருந்து உருவாக்கி அச்சமூகத்தின் வாழ்க்கைத் தரம் மேம்பட காரணியாக இருந்த திமுக வில் இருந்து பாஜக சென்றிருக்கிறார்.

சாதிய ரீதியிலான ஒடுக்கமுறை இருக்கும் நாட்டில் சாதிய ரீதியிலான இட ஒதுக்கீடே சரி என்ற அறிஞர்களின் வாதங்களுக்கு முரணாக, முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிய பாஜக விற்கு சென்றிருக்கிறார்.

ஒரு பக்கம் முற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கி, மறுபக்கம் மருத்துவ உயர் கல்வியில் பி.சி., எம்.பி.சி. சமூகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்த பாஜக விற்கு சென்றுள்ளார்.

எந்தப் பதவிக்கும் எந்த சமூகத்தைச் சேர்ந்தவரும் வர இயலும் திமுகவில். யாரும் ஒதுக்கி வைக்கப்படவில்லை. அப்படியிருந்தும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், பெண்களுக்கும் அதிகாரப் பகிர்வு கிடைக்காமல் போய் விடக்கூடாது என்பதற்காக துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவர் கண்டிப்பாக பெண், ஒருவர் கண்டிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்சேர்ந்தவர் என்று விதிகளை வகுத்த தி.மு.க.வில் இருந்து விலகி பாஜக விற்கு சென்றிருக்கிறார்.

அதுவும் எந்தக் கட்சிக்குச் சென்றிருக்கிறார், பார்ப்பனர்களைத் தவிர வேறு யாருமே தலைமைப் பதவிக்கு வர முடியாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குழந்தையான பாஜக விற்கு சென்றுள்ளார்.

அவருக்கு வாழ்த்துகளைச் சொல்வதுதான் அரசியல் நாகரீகம். ஆனால்,பாஜக வின் கடந்த கால வரலாற்றைப் பார்க்கும்போது அவருக்கு வாழ்த்து சொல்வதை விட அங்கே கவனமாக இருங்கள் என்று அவரை  எச்சரிக்கை செய்ய வேண்டியதுள்ளது.

காரணம், 20 ஆண்டுகளுக்கு முன்பு 2000 முதல் 2003 வரை 3 ஆண்டுகள் தமிழக பாஜக வின் மாநிலத் தலைவராக இருந்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் கிருபாநிதி. பாஜக வின் மாநிலத் தலைவராக தான் இருந்த போது இல.கணேசன் தன் கைகளை முறுக்கி தன்னை அடித்து விட்டதாகவும், சாதிய ரீதியில் தான் வஞ்சிக்கப்பட்டதாகவும் வேதனையோடு கூறியவர்  இறுதியில் பாஜக வில் இருந்து விலகி திமுக வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இவர் மட்டுமின்றி, பாஜக வின் தேசியத் தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன், மத்திய அமைச்சராக இருந்த உமா பாரதி, உள்ளிட்டோரும் பாஜக வின் மீது இதே போன்ற விமர்சனங்களை வைத்துள்ளனர்.

எனவே திரு.வி.பி.துரைசாமி அவர்கள் அங்கே கவனத்தோடு இருக்க வேண்டும் என்று நாம் அவரை எச்சரிக்கை செய்ய வேண்டியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, பட்டியல் சமூகத்தினர் குறித்து ஆர்.எஸ்.பாரதி கண்ணியக்குறைவாக பேசிவிட்டார் என்று சொல்லி அவரை அதிகாலையில் கைது செய்துள்ளது அதிமுக அரசு.

பெண் ஊடகவியலாளர்கள் குறித்து மிகவும் அநாகரீகமாக பேசிய எஸ்.வி.சேகரை இதுவரை கைது செய்யவில்லையே ஏன் ? மாறாக அவர் வீட்டில் பால் பாக்கெட் கெட்டுப் போய்விட்டது என்றால் பதறிப் போய் பால் வாங்கிக் கொடுக்கும் உங்கள் வீரத்தை என்னவென்று சொல்வது ?

நீதிமன்றத்தையே ஹெச்.ராஜா அவதூறு செய்து அநாகரிகமாக பேசினாரே அவரை ஏன் கைது செய்யவில்லை ?

சரி இதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள், உங்களைப் பார்த்து ஆண்மையற்றவர்கள், நீங்கள் எல்லாம் ஆம்பளைங்களா ? எனக் கேட்ட குருமூர்த்தியின் மேல் நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் உங்களுக்கு உண்டா ?

இதை எதையும் செய்யத் துணிவில்லாத நீங்கள் ஆர்.எஸ்.பாரதியை மட்டும் கைது செய்திருப்பது என்பது உங்களின் மேலிட விசுவாசத்தின் வெளிப்பாடே.

உங்கள் தொடர் செயல்பாடுகளால் குருமூர்த்தி உங்கள் மீது வைத்த விமர்சனத்தை உண்மையாக்கிவிடாதீர்கள்.