இந்த விவாதத்தை ஒரு கேள்வியுடன் ஆரம்பிப்போம்:

தமிழகத்தில் பாஜகவின் போர் ஏன் சிறுபான்மையினரை குறி வைக்காமல் திராவிடம், மதசார்பின்மைக்கு மட்டும் எதிராக உள்ளது?

யோசித்து பாருங்கள் – பாஜகவினர் நியாயமாக இஸ்லாமியருக்கு எதிராகத் தானே பேச வேண்டும். அதுதானே அவர்களுடைய இந்துத்துவ இலக்கு. ஆனால் கடந்த ஆறேழு வருடங்களில் கடுமையான தாக்குதலை பாஜகவிடம் இருந்து எதிர்கொண்ட ஒரு சிந்தனை மரபு இஸ்லாம், கிறித்துவம் போன்ற சிறுபன்மை மதங்கள் அல்ல, மதசார்பின்மையே என்பது ஒரு வியப்பான சேதி. அண்மையில் இது இன்னும் தீவிரமாகி உள்ளது. இதை செய்பவர்கள் இந்துத்துவர்கள் என்பதையும், இதை ஏற்கிறவர்கள் சில சிறுபான்மை அமைப்புகள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

இந்துத்துவர்கள் (ஆடு நனையுதே என…) சிறுபான்மையினரிடம் “உங்களுக்கு இந்த மதசார்பின்மை பேசும் கட்சிகள் பிரதிநுத்துவம் தருவதில்லை” என கண்ணீர் மல்க சொல்கிறார்கள். “நாங்கள் வெளிப்படையாக உங்களை ஆதரிக்கிறோம், பிரதிநுத்துவம் தருகிறோம்” எனச் சொல்லி முத்தலாக் போன்ற சட்டங்களை சான்றாக காட்டுகிறார்கள். ஆனால் இந்துத்துவர்களுக்கு இஸ்லாமியர் அதிகமாக உள்ள தொகுதிகளில் அவர்களுக்கு நேரடியாக பிரதிநுத்துவம் அளிக்க தயக்கமுள்ளது. ஆகையால் அதற்கு ஒவைஸ்ஸி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற கட்சிகளை பயன்படுத்துகிறார்கள். மதசார்பற்ற கட்சி ஒரு இந்துவையோ அல்லது இஸ்லாமியரை கூட நிறுத்தலாம். ஆனால் அவர்களுக்கு சார்பாக வாக்குகள் சென்று விடாத படி இதர பாஜக பினாமி கட்சிகள் (ஒவைஸ்ஸி, சீமான், கமலின் கட்சிகள்) “இஸ்லாமிய வாக்காளர்களை இவ்வாறு வேட்பாளராக நிறுத்தும் துணிச்சல், நேர்மை ஏன் மதசார்பற்ற கட்சிகளுக்கு இல்லை” எனக் கேட்பார்கள். வாக்குகள் இவ்வாறு பிரியும் பட்சத்தில் பாஜக தான் மட்டுமே இந்துக்களின் கட்சி, மதசார்பற்ற கட்சி சிறுபான்மையினரை மட்டுமே ஆதரிக்கிறது என மாற்றிப் பேசி வாக்கு கேட்கும். இந்த முறை அண்ணாமலை நின்ற அரவக்குறிச்சியில் பாஜகவின் பி, சி-டீம் கட்சிகள் இஸ்லாமிய வேட்பாளர்களை நிறுத்தியதை கவனியுங்கள். சில நேரங்களில் பாஜகவே நேரடியாக இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்தும். அவர் ஜெயித்தால் கட்சியில் பொறுப்பு, அமைச்சர் பதவி கூட கொடுக்கும். ஆனால் அவர் பெயரளவுக்கே இஸ்லாமியராக இருப்பார், இந்துக்களின் நலனே தனது லட்சியம், இந்து நலனே நாட்டின் நலன் என வினோதமாக பேசுவார். இம்முறை குஷ்புவை பாஜக ஆயிரம் விளக்கு தொகுதியில் ‘இஸ்லாமிய வாக்காளராக’ நிறுத்தியது. (அங்கு தொடர்ந்து சட்டமன்ற தேர்தல்களில் திராவிட கட்சிகளே ஜெயித்து வந்துள்ளன.) என்னதான் குஷ்பு இஸ்லாமியர் என்றாலும் அவர் இதுவரை மதசார்பின்மைக்காக குரல் கொடுத்து போர்க்கொடி ஏந்தி விட்டு, தொடர்ந்து பாஜக அரசின் ஒடுக்குமுறைகளை எதிர்த்து தொடர்ந்து பிரதமரை விமர்சித்து விட்டு வேட்பாளர் பதவிக்காக திடீரென பாஜகவுக்கு தாவி குங்குமம் வைத்து தன்னை ஒரு இந்துப்பெண் போல காட்டிக் கொள்பவர். அவர் இரட்டை வேடம் போடுபவர் என எண்ணி மக்கள் நிராகரித்தாலோ, பாஜகவை ஆதரிக்காத இஸ்லாமிய வாக்குகள் அவருக்கு  விழாமல் போனாலோ என்ன செய்வது? உடனே மக்கள் நீதி மய்யமும் நாம் தமிழர் கட்சியும் அவரைக் காப்பாற்ற இஸ்லாமிய வேட்பாளர்களை அங்கு நிறுத்துகிறார்கள்.  இதில் இன்னொரு சுவாரஸ்யமான தகவல் மன்சூர் அலிகான் அங்கு நிற்பதற்கு வாய்ப்பு கேட்ட போது சீமான் மறுத்தார் என்பது. மன்சூரும் இஸ்லாமியர் தான், ஆனால் அவர் நடிகர் என்பதால் குஷ்புவுக்கு கடும் போட்டி ஏற்பட்டு விடக் கூடும் என நினைத்து சீமான் இதை செய்திருக்கலாம். ஆக சீமானுக்கு முக்கியம் தன் வேட்பாளர் ஜெயிப்பது அல்ல, தன் ஸ்பான்சரான பாஜக தோற்றுவிடக் கூடாது என்பதே முக்கியம். இப்படி கட்சி மீது ‘அக்கறை’ கொண்ட மற்றொரு தலைவரை பார்க்க முடியுமா? இது ஓட்டு பிரிப்பு அரசியல். மக்கள் இந்த சதியை முறியடிக்கிறார்களா இல்லையா என்பது விரைவில் தெரிந்து விடும்.

 ஆனால் நான் இப்போது பேச விரும்புவது இதை விட தீவிரமான ஒரு பிரச்சனை: பாஜகவில் இருந்து மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டோர் வரை முன்னெடுக்கும் இந்த திராவிட எதிர்ப்பு, மதசார்பின்மை விரோதப் பேச்சுகள் – தமிழக மக்களுக்கு மதரீதியான, சாதிரீதியான, தமிழ்தேசிய ரீதியான பிரதிநுத்துவத்தை காங்கிரஸும் திமுகவும் மறுக்கிறது என்று சொல்லி – மதசார்பின்மையின் அடிமடியிலே கைவைத்து அதை அழிக்க நினைக்கிறது. இது தேர்தலில் யார் ஜெயிக்கப் போகிறார் என்பதை விட அதிமுக்கியமான ஒரு பிரச்சனை. அதனாலே நாம் இதை சற்று உன்னிப்பாக நோக்க வேண்டும். ஏன் பாஜகவும் அதன் பினாமி கட்சிகளும் மதசார்பின்மை, திராவிடம் இரண்டையும் உக்கிரமாக தாக்குகின்றன? (1) இதனால் சிறுபான்மையினருக்கு எதாவது பலன் உண்டா? (2 )இதனால் பாஜகவுக்கு என்ன பயன்?

(1) சிறுபான்மையினருக்கு சில உடனடி பலன்கள் இருக்கலாம் (ஒன்றிரண்டு இடங்களை சென்று பதவிகளை கட்சியில் பெறுவது அல்லது ஒரு டோக்கன் அமைச்சராகவே ஆவது), ஆனால் தொலைநோக்குப் பார்வையில் இது சிறுபான்மையினருக்கு மிக ஆபத்தான ஒன்று என விளங்கும். எப்படி? சிறுபான்மையினர் நலன் என்பதை தாழ்த்தப்பட்ட சாதிகளின் நலன், ஒடுக்கப்பட்ட அனைத்து வர்க்கத்தினரின் நலன், பெண்களின் நலன் என சாதி, பொருளாதார, வர்க்க, பாலின அடிப்படையில் ஒற்றைப் புள்ளியில் இணைப்பதே மதசார்பின்மை சிந்தனையின் நோக்கம். அதாவது, இது சிறுபான்மையினருக்கு சார்பாக பெரும்பான்மையினரை யோசிக்க கேட்பது மட்டுமல்ல. இஸ்லாமியருக்கு சார்பாக பேசுகிற ஒரு இந்து அதே அக்கறையை அனைத்து ஒடுக்கப்பட்டோரிடத்தும் காட்ட செய்வது. அரசும் சமூகமும் அதிகாரமற்ற மக்களை மேலும் பலவீனப்படுத்தக் கூடாது என அவனை நினைக்கத் தூண்டுவது. அத்தகைய மதசார்பற்ற சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள் ஒடுக்கப்பட்டோரை வலுப்படுத்துவதற்கான சட்டரீதியான பாதுகாப்புகளை உருவாக்குவார்கள். அவர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம் எனப் பேசுவார்கள். கடந்த சில ஆண்டுகளில் வலதுசாரிகள் என்ன செய்தார்கள் என்றால் இது ஒரு ஏமாற்று, பொய்ப்புரட்டு என பேச ஆரம்பித்தார்கள்; ஒரு பக்கம் சிறுபான்மையினரிடம் போய் “உங்களை மதசார்பின்மையின் பெயரில் ஏமாற்றுகிறார்கள், உங்களுக்கு எந்த பிரதிநுத்துவமும் இவர்களால் கிடைக்காது, மதசார்பின்மை பேசும் கட்சிகள் இந்துக்களுக்கு மட்டுமே அதிகாரமும் தேர்தலில் இடமும் கொடுக்கிறது, உங்கள் வாக்குகளை வாங்கி விட்டு கழற்றி விடுகிறார்கள்” என்பார்கள்; இன்னொரு பக்கம் இந்துக்களிடம் போய் “மதசார்பற்றவர்கள் இந்து விரோதிகள், அவர்கள் சிறுபான்மையினருக்காக உங்களை பலி கொடுக்கிறார்கள்” என தூண்டி விடுவார்கள். ஏனென்றால் இப்படி மக்களை பிரித்து குறுகிய மனப்பான்மையுடன் சிந்திக்க வைத்தால் அவர்கள் தத்தமது நலனே இனி முக்கியம் என நினைக்கச் செய்தால் மதசார்பின்மை விழுந்து விடும்; சாதி, மத அடிப்படையிலான அரசியல் மட்டுமே நிற்கும்.

மதவாத பரப்புரை இப்படிப் போகுமெனில் சாதியைப் பொறுத்தமட்டில் அவர்கள் தலித்துகளிடம் சென்று “மாநிலக் கட்சிகளும் மதசார்பற்ற கட்சிகளும் உங்களுக்கு பிரதிநுத்துவமோ அதிகாரமோ அளிக்காமல் உங்களை சுரண்டுகிறது, நாங்களே உங்களை காக்க வந்தவர்கள்” எனக் கூறி விட்டு பெயருக்கு ஒன்றிரண்டு பதவிகளை அச்சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அளிக்கும். ஆனால் உயர்நிலை அதிகார வட்டத்தில் பார்ப்பனர்களும் அவர்களுக்கு அடுத்தபடியாக பனியாக்களுமே இருக்க வேண்டும், மற்றவர்கள் அவர்களின் சொற்படி நடந்தே ஆக வேண்டும் என ஒரு சாதி அடுக்குமுறையை கட்சிக்குள் வைத்திருப்பார்கள். முக்கியமாக கருத்தியல்ரீதியாக சாதியை ஒழிப்பதையோ பார்ப்பன ஆதிக்கத்தை கேள்வி கேட்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இன்று முற்போக்கு சிந்தனை வழியாக நாம் அடைந்துள்ள சில சுதந்திரங்கள் – சாதி, மதத்துக்கு வெளியே மணமுடிப்பது, மரபார்ந்த சீர்கேடுகளை கேள்விக்குட்படுத்துவது, சமத்துவத்தை கோருவது, இடஒதுக்கீடு வழி சமத்துவமான கல்வி, பொருளாதார வாய்ப்புகளை மக்களுக்கு வழங்கி ஓரளவுக்கு அதிகார பரவலாக்கத்தை சாத்தியப்படுத்தியது, சகிப்பின்மையுடன் மாற்று உரையாடல்களை அனுமதிப்பது – மதவாதமான ஒரு அரசியல் சூழலில் இருக்காது. அடைந்த ஒவ்வொன்றையும் இழந்து பின்னோக்கி செல்வதன்றி வேறு வழி இராது. இந்துத்துவர்களின் சாமர்த்தியம் என்னவென்றால் இந்த மதசார்பின்மை வெற்றிகளை மறக்கடிக்கும், மதவாத அரசியலினால் மட்டுமே சமத்துவம் நிலவும் ஒரு பொய்ப்பிரச்சாரத்தை மும்முரமாக எடுத்து செல்வதும், அப்பாவி மக்களை நம்ப வைப்பதுமே. நான் ஆரம்பத்தில் சொன்னதைப் போல ஆடுகள் தமக்காக ஓநாய்கள் அழுகின்றனவே என நம்பத் தொடங்குவதே அவர்களின் வெற்றியின் ஆரம்பம்.

தமிழகத்தை பொறுத்தமட்டில் சாதி ஒழிப்பு, தலித் உரிமை போராளிகளும் இந்த சதியில் வீழ்ந்திருக்கிறார்கள் – பார்ப்பனியம் அவர்களிடம் திரும்ப திரும்ப மத்திய, மேல் மத்திய சாதிகளே உங்கள் பிரதிநுத்துவத்தை அரசியலில் தடுக்கிறார்கள், திராவிட மரபே இதை நியாயப்படுத்துவதற்கான தந்திரம் எனச் சொல்லி நம்ப வைத்தார்கள். இதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இங்கே பெரியார் vs அயோத்திதாசர் எனும் இருமை உருக்கொண்டது – ராமதாஸ் போன்ற அரசியல் சக்திகளும், சாதிவெறியர்களும் அவரக்ளுக்கு இணக்கான சமூக பொருளாதார அமைப்புகளும் அதற்கு நடைமுறை நியாயத்தை வழங்கினார்கள். ஆனால் இன்னொரு பக்கம் அம்பேத்கரியமும் அயோத்திதாசர் சிந்தனைகளும் அவர்களை இந்துத்துவ வெறி நோக்கி நகர்ந்து விடாமல் பாதுகாத்தன. குறிப்பாக திருமாவளவன் – அவர் தலித் அரசியலை மதசார்பின்மையின் தளத்தில் வைத்து பேசி வருபவர். அவரால் ஒடுக்கப்பட்டோரின் ஒன்று திரளலை சாதியுணர்வுக்கு அப்பாலான ஒன்றாக வடிவமைக்க முடிந்தது. பெரியாரின், திராவிட சாதி மறுப்பு சிந்தனைகளின் வலுவை அவர் பயன்படுத்தி மதசார்பின்மை-, பார்ப்பன எதிர்ப்பு-தலித்தியத்தை உண்டு பண்ணி மக்களையும் அதை ஏற்க வைத்தார். இது இந்துத்துவ பார்ப்பனிய சக்திகளை வெறுப்பேற்றியது. அவர்கள் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியதே திருமாவுக்கு எதிரான அவதூறுகளை பரப்பி அவருக்கு எதிராக போராட்டங்களை நடத்தி தான் என்பதை பாருங்கள் – திமுக கூட்டணியில் அவர் ஒரு சிறிய கட்சி தான். ஆக அவரை முறியடிப்பதனால் வேறென்ன பலன் இருக்க முடியும்?

 ஒன்றைத் தவிர – இன்றைய தலித் வாக்காளர்களை சீமான் போன்ற தமிழ் தேசிய இந்துத்துவர்கள், கிருஷ்ணசாமி போன்ற பாஜக ஆதரவு தலித் தலைவர்களின் பக்கம் கொண்டு வந்து அப்படியே திசை திருப்பி மெல்ல மெல்ல ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு கொண்டு வந்து விடலாம் என கனவு காண்கிறார்கள் இந்துத்துவர்கள். அல்லது குறைந்த பட்சம் அவர்கள் தம்மை ஒரு குறிப்பிட்ட சாதீய சமூகமாகவும் இந்துக்களாகவுமே உணர வேண்டும், இந்து மதத்தை கடந்து தம்மை ஒரு முற்போக்கு பெருந்தொகையின் பகுதியாக உணர விடக் கூடாது என நினைக்கிறார்கள். இதற்கு பெரும் தடையாக இருக்கிற விடுதலை சிறுத்தைகள் அமைப்பை, அதன் முதல்நிலை தலைவர்களை அழித்து விடும் வேண்டும் என துடிக்கிறார்கள். இதனாலே திருமா பெண்களை அவமதித்து விட்டார் எனும் எந்த ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டை இவ்வளவு காலம் கடந்தும், தேர்தல் பரப்புரையிலும் அவர்கள் முன்வைத்தார்கள். இதனாலே ஸ்டாலினை விட திருமாவையே தங்கள் பிரதான எதிரி என கருதுகிறார்கள்.

இந்துத்துவர்களின் அடுத்த இலக்கு தமிழ் தேசியவாத இளைஞர்கள். அவர்கள் பெரியாரியத்தினால் ஈர்க்கப்படுவதை இந்துத்துவ பார்ப்பனர்கள் விரும்பவில்லை. தமிழ் தேசிய அரசியல் விவாதம் ஒரு போதும் இந்து மதத்தின் ஒடுக்குமுறைகள் நோக்கி செல்லக் கூடாது. அதற்கு முதல் வேலையாக பெரியாரை ஒழிக்க வேண்டும். அந்த பொறுப்பை, கடமையை அண்ணன் சீமானின் ஒப்படைக்கிறார்கள். அவர் திராவிடம் என்பதே போலித்தனம், அது தமிழர் விரோத கருத்தமைவு என பேச ஆரம்பித்தார். அவர் பெரியாருக்கு எதிரான ஒரு அரசியலை முன்னெடுத்தார், அதே சமயம் தான் அம்பலப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பெரியாரியவாதிகளைப் போல இந்து சனாதன சக்திகளை எதிர்த்து பேசவும் செய்தார். கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் பாஜக அரசை கடுமையாக தாக்கவும் செய்வார். இது வெற்று பாவனை மட்டுமல்ல, திராவிடம் ஒரு இந்துத்துவ எதிர்ப்பு சிந்தனை எனும் அடையாளத்தை ஹைஜேக் செய்து அதை தனதாக்க வேண்டும் என நோக்கிலேயே சீமான் இதை செய்கிறார். சீமான் திராவிட எதிர்ப்பை “வடுக எதிர்ப்பாக” காட்டுகிறார், ஈழப் போரில் புலிகள் அழிக்கப்பட்டதற்கு திமுகவே காரணம் என ஒரு ஆதாரமற்ற வாதத்தையும் தொடர்ந்து பயன்படுத்துகிறார். வடுக எதிர்ப்பு-புலிகள் ஆதரவு எனும் புள்ளியில் அவர் திராவிட-திமுக எதிர்ப்பை இணைக்கிறார். ஆனால் புலிகளை கடுமையாக எதிர்த்த ஜெயலலிதாவை ஈழத்தாய் என புகழ அவருக்கு எந்த கூச்சமும் இராது. திமுக புலி ஆதரவின் பெயரில் ஒரு தேர்தலை ஜெயலலிதாவிடம் இழந்த கட்சி என்பது சீமானுக்கு முக்கியமல்ல. ஜெயலலிதாவுக்கு எந்த தமிழ்ப் பற்றும் இல்லை, அவர் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் ஆங்கில அறிவை பிரகடனப்படுத்த விரும்பியவர், மாறாக திமுகவின் தலைவர் கருணாநிதியோ நவீனத்துவத்துக்கு முன்பான தமிழுக்கு மகத்தான பங்களிப்பு செய்தவர், ஒரு எழுத்தாளர் என்பதும் சீமானுக்கு பொருட்டல்ல. அவர்கள் தெலுங்கர்கள், தமிழ் விரோதிகள் என மூன்றே சொற்களில் கடந்து விடுவார். அவருடைய தம்பிகளும் இதையே ஒப்பிப்பார்கள். சீமான் இப்படி அபத்தமாக திராவிடத்தையும், திமுகவும் எதிர்க்க வேறேதாவது நியாயமான காரணம் உண்டா? உண்டெனில் அவர் எங்குமே அதை நிறுவியதில்லை. நடைமுறையில் இரண்டு காரணங்கள் தெரிகின்றன – சீமானை இரு கட்சித்தலைவராக வளர்த்து விட்டது ஜெயாவும் சசிகலாவும். ஆக இருவரிடத்தும் அவருக்கு இப்போதும் நன்றிக்கடன் உள்ளது. இப்போது அவருக்கு சோறிட்டு காப்பாற்றி வருபவர்கள் பாஜகவினர். அவர்களுடைய தற்போதைய நோக்கமான திராவிட, பெரியாரிய, திமுக ஒழிப்பையும் அவர் சிரத்தையுடன் முன்னெடுக்கிறார்.

 இந்துத்துவர்கள் திராவிடத்தை கடுமையாக எதிர்க்க காரணம் அதன் கடவுள் மறுப்பு சிந்தனை மட்டுமே அல்ல. சொல்லப் போனால் திமுக கடவுள் நம்பிக்கையை ஏற்கிற கட்சி. இதை பலமுறை அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். ஆகையால் பாஜகவின் இலக்கு அதுவல்ல, பாஜகவின் இலக்கு “திமுகவின் இந்து எதிர்ப்பை அம்பலப்படுத்துகிறோம்” என்ற பெயரில் திராவிட சிந்தனை மரபை வீழ்த்துவது தான்.

திராவிடத்தை வீழ்த்த ஏன் பாஜகவும் அவர்களுடைய அடியாட் படைகளான சீமானும் கமலும் கடுமையாக முயல்கிறார்கள்? ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்கு பின்பான வெற்றிடத்தை தமதாக்கிக் கொள்ளவா? அதற்கு அவர்கள் திராவிட மரபில் வருகிற ஒரு மாற்றுக் கட்சியாக தம்மை காட்டிக் கொண்டால் போதுமே. பாஜகவிடம் இருந்தும், ஐரோப்பிய கார்ப்பரேட் சார்பு வலதுசாரி கட்சிகளிடம் (அமெரிக்காவின் ரிபப்ளிகன் பார்ட்டி, இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் பார்ட்டி) இருந்தும், பாஜகவிடம் இருந்தும், காந்தியிடம் இருந்தும் கலந்துகட்டி ஒரு குழப்பமான கட்சிக் கொள்கையை உருவாக்கிய கமல் ஏன் சில முக்கியமான கருத்துக்களை, லட்சியங்களை தமிழ் மரபில் இருந்து எடுத்துக் கொள்ளவில்லை? அவர் ஏன் தான் இதுவரை அணிந்து வந்த பெரியாரிய முகமூடியை திடீரென கைவிட்டார்? அவர் ஏன் தன் இடதுசாரி முகமூடியையும் ஒரே நாளில் கழற்றி வீசினார்? ஒரே காரணம் தான் – அதுவே அவருக்கு அளிக்கப்பட்ட புரோஜெக்ட் – இடதுசாரிகளின் மதசார்பின்மையை, பெரியாரின் ஆரிய எதிர்ப்பை ஒழித்து விட்டு அங்கு பாஜகவுக்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும். கமல் – சீமானைப் போன்றே – ஒரு நடிகர். இன்று காந்தி வேடம் போடச் சொன்னால் ஏற்பார், நாளை கார்ல் மார்க்ஸாக, பெரியாராக நடிக்க சொன்னாலும் செய்வார்.

சரி இத்தனை பேர் வரிந்து கட்டி அழிக்க முனையும் அளவுக்கு திராவிடம் என்ன ‘குற்றம்’ செய்தது?

ஒரே ‘குற்றம்’ தான் – திராவிடம் என்பது மொழியைக் கடந்து ஆரிய-மாற்று மக்களை சிந்திக்கிறது, கட்டமைக்கிறது, ஒன்று திரட்டுகிறது. தெலுங்கையும் கன்னடத்தையும் தம் தாய்மொழியாக கொண்டவர்களும் தமிழை நேசிப்பதை, தமிழக நலனுக்காக சிந்திப்பதை, மதசார்பின்மை குரலில் பேசுவதை அது சாத்தியமாக்குகிறது. தமிழகத்தில் பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் சிறிய தொகை அல்ல. நீங்கள் தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட சாதிகளின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் பல மொழி பேசுகிற மக்கள் அவர்களிடையே உள்ளதை கவனிக்கலாம். இவர்களை ஒன்றிணைப்பது மதசார்பற்ற திராவிடம். இவர்களை அந்த சட்டகத்தில் இருந்து வெளியேற்றுவதே சீமானுக்கும், கமலுக்கும் கொடுக்கப்பட்டுள்ள பணி.

சீமான் இம்மண்ணில் இருந்து திராவிடர்களை வெளியேற்றிய பின்னர் தமிழை தாய்மொழியாக கொண்டோருக்கு மட்டுமே தமிழ் தேசத்தில் இடம் என நிலை வரும் போது, மிச்ச பேர் அரசியலற்றவர்களாக ஆவார்கள். கமல் பெரியாரியத்தை காலி செய்து அங்கு காந்தியத்தை கொண்டு வருகையில் மதத்தைப் பற்றிக் கொண்டு தொங்குவதைத் தவிர நமக்கு வேறு வழி இராது.

 இப்படி அரசியல் உரிமையை இழந்தவர்கள் இனி இந்து அடையாளமே தங்களுடைய சரணாகதி என்றும், அதற்குள் தத்ததமது சாதித்தலைமைகளின் கீழ் மட்டுமே திரண்டு அவர்கள் வாக்களிக்க வேண்டும் எனும் நிலையை பாஜக இங்கு ஏற்படுத்த விரும்புகிறது. இப்படி திரளும் மக்கள் அரசியல் தளத்தில் பார்ப்பனிய இந்து மதத்துக்கு விரோதமாக இருக்க மாட்டார்கள் என அது நம்புகிறது. அதற்காகவே அது பெரியாரை தொடர்ந்து தாக்கி அவரிடத்தில் தமிழ்க் கடவுள் வழிபாட்டை கொண்டு வருகிறது. அதனாலே பாஜகவினர் முதலில் சீமானிடம் வேலைக் கொடுத்து முருகனை தமிழ்க்கடவுளாக பரப்புரை பண்ண சொன்னார்கள். ஆரம்ப கூட்டங்களில் முருகனை ஒரு ஆரிய எதிர்ப்பு கடவுளாக கண்ட சீமான் போகப் போக இதை ஒரு மதவாத வழிபாட்டு செயலாக்கினார். முருகனை வழிபடாத மக்கள் தமிழர்கள் அல்ல எனும் இடத்துக்கு வந்தார் சீமான். பின்னர் தமிழக பாஜகவின் தலைவர் எல்.முருகன் வேல் யாத்திரையை முன்னெடுத்த போது அது தற்செயலாக நடந்த ஒன்று அல்ல என நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான தளத்தை நீண்ட காலமாக நாம் தமிழர் தம்பிகள் தயாரித்து வந்திருக்கிறார்கள். சீமான் ஒரு கூட்டத்தில் “டேய் நான் தாண்டா முதலில் வேலை கையில எடுத்தேன்” என அபத்தமாக பீற்றிக் கொள்வதை கவனியுங்கள். சீமானிடம் இருந்து பிரிந்து வந்த தோழர்கள் அவர் ஆரம்பத்தில் இருந்தே பெரியாரியத்தை முன்னெடுப்பதில் தயக்கம் காட்டி வந்ததைப் பற்றி சொல்லுவதை கவனியுங்கள். பெரியாரும் ஒரு தமிழ் விரோதி என நம்மை நம்ப வைத்தால் அது நிகழுகிற அன்றிரவே இந்துத்துவர்கள் சீமானுக்கு பெரிய விருந்து வைப்பார்கள் என நம்புகிறேன்.

தமிழக சட்டமன்ற வாக்களிப்புக்குப் பிறகான பேட்டி ஒன்றி ரவீந்திரன் துரைசாமி ஸ்டாலின் அதிமுகவுக்கு போக வேண்டிய சில சாதிகளின் ஆதரவை அபகரித்து விட்டார் என மீண்டும் சாதிக் கணக்கை சொல்லுவதை கவனியுங்கள். இதற்கு புள்ளிவிபரம், ஆதாரம் உள்ளது என சொல்லுகிற நகைச்சுவையை பாருங்கள் – நாளை ஒரு ஓட்டலில் போடுகிற வடை சுவையாக இருக்கிறது என நிறைய பேர் போகிறார்கள். அவர்களிடமும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி 60% இந்த சாதியினர் இந்த கடை வடையை ஆதரிக்கிறார்கள், 40% அந்த சாதியினர் வேறு கடை வடையை ஆதரிக்கிறார்கள் என ஒருவர் சொல்லலாம். ஆனால் இதிலெல்லாம் ஏதாவது தர்க்கம் உள்ளதா? அதே போலத்தான் மோடி எதிர்ப்பை கணிசமான இந்துக்கள் இங்கு முன்னெடுக்கும் போது ரவீந்திரன் துரைசாமி மோடியை எதிர்ப்பவர்கள் இஸ்லாமியரும் கிறித்துவர்களும் மட்டுமே என்கிறார். அவருக்கு கள எதார்த்தம் தெரியும். இருந்தும் இந்த சிரிப்புக்குரிய விசயத்தை ஏன் அவர் திரும்ப திரும்ப சொல்லுகிறார் என்றால் எதிர்காலத்தில் இத்தகைய கதையாடல்கள் நிறுவப்பட வேண்டும், மக்கள் திராவிடம், மதசார்பின்மை, பெரியாரியம் கடந்து தமது சாதிக்காக, மதத்துக்காக மட்டும் சிந்திக்கிறார்கள் எனும் குறுகின எண்ணம் வலுப்பட வேண்டும் என்பது அவருக்கு அளிக்கப்பட்டுள்ள புரோஜெக்ட். அவர் அதை செவ்வனே நிறைவேற்ற நிறைய டிவி சேனல் முதலாளிகள், யுடியூப் சேனல் ஆட்களும் உதவுகிறார்கள். என்னதான் பின்னூட்டத்தில் மக்கள் வந்து அவரை காறிக் காறித் துப்பினாலும் அவர்கள் கவலையே படுவதில்லை.

இந்தியா முழுக்க பாஜக இதை ஒரு ரத யாத்திரையாக முன்னெடுத்து வருகிறது என்பதை கவனியுங்கள் – அவர்களுடைய ராமன் கொல்ல நினைப்பது மக்கள் தமது, தமது சாதி, மத நலன்களை கடந்து சிந்திக்கிற உதவுகிற ஒரு கருத்தாக்கத்தை தான், மதசார்பின்மையே அவர்களுடைய ராவணன்.

இது சாத்தியமாகி விட்டால், மதசார்பின்மை அரசியல் முழுக்க மறைந்தால், மக்கள் ஒன்று திரண்டு ஆதிக்கவாதத்தை, மதவாத சீரழிவுகளை, மனித உரிமை மீறல்களை, நிர்தாட்சண்ணியமான ஒடுக்குமுறைகளை, சாதிய ஊழல்களை, தேசவெறியின் பெயரிலான அத்துமீறல்களை, கும்பல் மனப்பான்மையை, அதனாலான கலவரங்களை தடுக்க முடியாது. ஏனென்றால் சமூகத்துக்காக சிந்திக்கிற இயல்பு தனக்காக, தன் மதத்துக்காக, தன் சாதிக்காக சிந்திப்பது என சுருங்கிப் போகும். இப்படி ஒரு பரவலான மனநிலை அரசியல் சூழலில் வர வேண்டும் என்றே பாஜக விரும்புகிறது. அதனாலே அது தொடர்ந்து மதசார்பின்மையை முன்னெடுக்கும் இடதுசாரிகளை, முற்போக்காளர்களை தாக்குகிறது, சிறையில் தள்ளுகிறது, அத்தகையோர் ஊடகங்களில் இருந்தால் வேட்டையாடடுகிறது, அவர்களை presititutes என தமது ஆங்கில டுரோல்களாலும், ஊடக முயலாளிகளுடன் படுக்கிற பெண்கள் என எஸ்.வி சேகர்களாலும் அழைக்க வைக்கிறது.

 சுருக்கமாக சொன்னால், இது ஜனநாயக அமைப்பையே சூறையாடும் ஒரு ஆதார முயற்சி. இந்த்துவர்கள் இதில் வெற்றி பெற்ற பின் தேர்தலுக்கே அவசியம் இருக்காது என நான் இதனாலே அஞ்சுகிறேன் – மற்றமைக்காக கவலைப்படுகிற, கேள்வி எழுப்புகிற, முழங்குகிற ஒரு அரசியல் செயல்பாடே இனி இருக்காது. பாஜக வீழ்ந்தாலும் அங்கு ஒரு பாஜக-நிகர் கட்சியே ஆட்சி அமைக்கும். கண் முன் அநீதியும், துயரங்களும் நிகழும் போது “இதனால் எனக்கு ஆபத்தில்லையே” என மட்டுமே யோசிக்கும் ஒரு தலைமுறையை அவர்கள் உருவாக்குவார்கள்; மற்றமைக்காக குரல் கொடுப்பதை ஒரு போலித்தனம், தேசவிரோதம், தடித்தனம் என அவர்கள் நிஜமாகவே நம்புவார்கள். இப்போது நாம் ரவீந்திரன் துரைசாமியை கிண்டலடித்து கடந்து விடுவோம் – ஆனால் எதிர்காலத்தில் பெரும்பாலான வாக்காளர்கள் அவருடைய குரலிலே பேசுகிற நிலை ஏற்படும். இது அரசியலுக்கு மட்டுமல்ல, கலாச்சாரத்துக்கு, இலக்கியத்துக்கு, அறிவார்ந்த சிந்தனைகளுக்கு, தத்துவத்துக்கு, ஆன்மீக நலனுக்கும் கேடாகி விடும். தனக்குள் மட்டும் முடங்குகிற, தன்னலனை அன்றி வேறெதையும் சிந்திக்காத மனிதன் மிருகமாவது தவிர வேறு வழியில்லை. இப்படி மனிதர்களிடத்து மானவுணர்வோ பகுத்தறிவு சிந்தனையோ எதிர்ப்புணர்வோ மானுட நேசமோ இல்லாத மிருகங்களை உருவாக்கி அவர்கள் பெறுவதென்ன? எந்த கேள்வியும் கேட்காமல், விமர்சனமோ எதிர்பார்ப்போ இல்லாமல் வெறுப்பிலும் பயத்திலும் மட்டும் முயங்குகிற ஒரு வாக்காள தலைமுறையை உருவாக்கி, குஜராத்திய பனியாக்களும், பார்ப்பன ஆதிக்க சக்திகளும் அவர்களை ஏமாற்றி ஆளவும் பொருளாதார ரீதியாக சுரண்டவும் இது சாத்தியமாக்கும். அது தான் அவர்களுடைய இறுதி இலக்கு.

இதனால் தான் மதசார்பின்மையை அதிகாரத்துக்கு மீட்பது நமது கடமை என நினைக்கிறேன்.