“பி.எம். கேர்ஸ்” தொடர்பாக சில தகவல்களைக் கேட்டு, பெங்களூரில் முதுகலை சட்டம் படித்து வரும், “கந்துகுரி சூர்யா ஸ்ரீ ஹர்ஷா தேஜா” என்பவர் ஏப்ரல் 1ம் தேதி, மனு செய்தார். கொரோனா நிவாரணத்திற்காக உருவாக்கப்பட்ட “பி.எம்.கேர்ஸ்” என்ற சிறப்பு  நிதியானது, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் “பொது அதிகாரம் பெற்ற அமைப்பு” அல்ல என்பதால் அந்த கேள்விக்குப் பதில் வழங்கிட முடியாது என்றும்,  வேண்டுமானால் அதுதொடர்பாக விபரங்களை “pmcares.gov.in” என்ற இணையத்தில் பார்த்துக் கொள்ளலாம் என 29.05.20 அன்று பிரதமர் அலுவலகம் பதில் கூறியுள்ளது.

“மக்கள் கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். அதற்கு மரியாதை அளிக்கும் விதமாக பிஎம் கேர்ஸ் நிதி உருவாக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியாமான இந்தியாவை உருவாக்குவதில் இது மிகப்பெரிய பங்களிப்பு புரியும்” என்று 28.03.20 அன்று, பிரதமர் தெரிவித்தார். “பி.எம்.கேர்ஸ்” எனும், “பிரதமரின் குடிமக்களுக்கான உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி” எனும் திட்டம் இவ்வாறு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது.

“பிரதமர் தேசிய நிவாரண நிதி” என்ற திட்டம் நடப்பில் இருக்கும் போது, கூடுதலாக “பி.எம். கேர்ஸ்” என்ற திட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட போதே, எதிர்கட்சிகள் அதனை கடுமையாக விமர்சித்தன. மருத்துவ உதவி, கல்வி, ஆதரவற்றோருக்கு உதவுதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாக கொண்டு, “பிரதமர் தேசிய நிவாரண நிதி” என்ற அமைப்பு 24.01.1948ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்டது. பிரதமரை தலைவராகக்கொண்டு இயங்கும் அந்த அமைப்பு, அதன் நன்கொடையாளர்களுக்கு வரி விலக்கு கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் 18.09.1973ல்  அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டது.

2009 முதல் 2011 வரையிலான “பிரதமர் தேசிய நிவாரண நிதி”யின் நன்கொடையாளர்கள், அதன் பயனாளர்கள் உள்ளிட்ட விபரங்களைக் கோரி தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் அசிம் தாக்யார் என்பவர் மனு செய்தார்.  நடுவண் / மாநில அரசுகளிடம் இருந்து அந்த அறக்கட்டளைக்கு நிதி உதவி எதுவும் பெறவில்லை என்பதால்  “பிரதமர் தேசிய நிவாரண நிதி” அமைப்பானது பொது அதிகார அமைப்பு அல்ல என்று கூறி அவருக்கு பதில் மறுக்கப்பட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டில், அந்த நிதி அமைப்பின் நன்கொடையாளர் பட்டியலை அவருக்கு கொடுக்க வேண்டும் என 06.06.2012 அன்று தேசிய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. தேசிய தகவல் ஆணையத்தின் அந்த உத்தரவுக்கு எதிராக பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த நீதிபேராணை வழக்கினை 19.11.2015 அன்று தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம், அந்த தகவல்களை அவருக்குக் கொடுக்க உத்தரவிட்டது.

கொரோனா தொற்று பரவலாக ஆரம்பித்த டிசம்பர் 2019ல், “பிரதமரின் தேசிய நிவாரண நிதி”யில், 3,800 கோடி ரூபாய் கணக்கில் இருந்தது. பேரிடர் காலத்தில் குடி மக்களுக்கு உதவுவதற்காக திரட்டப்பட்ட இந்த நிதியே செலவழிக்கப்படாத நிலையில்தான் புதிதாக  பி.எம். கேர்ஸ் நிதி உருவாக்கப்பட்டது.  இந்த நிதி உருவாக்கப்பட்ட முதல் வாரத்திலேயே சுமார் 6,500 கோடி ரூபாய் நன்கொடை வசூலானதாக செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் ஊதியமும், உள்ளூர் பகுதி மேம்பாட்டுக்கான நிதியிலிருந்து 100 க்கும் அதிகமான நாடளுமன்ற உறுப்பினர்களால் தலா ஒரு கோடி ரூபாய் வீதமும் பி.எம். கேர்ஸ்-க்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

இவ்வாறு நன்கொடை வசூலிக்க ஆரம்பித்த சில நாட்களில், நடுவண்/மாநில அரசுகளுக்கான தொகுக்கப்பட்ட நிதிகளுக்காக (consolidated funds) நிதி பெறுவது மற்றும் அவைகளைக் கையாள்வது தொடர்பான  இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் சரத்து 266  மற்றும் நடுவண்/மாநில அரசுகளுக்கான எதிர்பாரா செலவினங்களுக்கான நிதி தொடர்பான சரத்து 267 ஆகியவைகளை கருத்தில் கொள்ளாமல், புதிதாக ஒரு  சட்டம் இயற்றாமல் அல்லது அரசிதழில் வெளியிடாமல், “பி.எம். கேர்ஸ்” உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே, அந்த அமைப்பை இரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் ஷர்மா என்பவர் வழக்கு தாக்கல் செய்தார். அந்த  வழக்கினை 13.04.2020 அன்று, “தவறாக கருத்தில் கொள்ளப்பட்ட ஒன்று (misconceived)” என்று கூறி உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய ஆயம் தள்ளுபடி செய்தது.

அதனைத் தொடர்ந்து, 27.04.20 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் சாஸ்வத் ஆனந்த் தாக்கல் செய்த ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் அவர், தேசிய பேரிடர் நிவாரண நிதி அமைப்பு நடப்பில் இருக்கும் நிலையில், பி.எம். கேர்ஸ் மற்றும் மாநில அரசுகள் நிவாரண நிதிக்காக நன்கொடை வசூலிப்பதன் சட்டத்தகுதி மற்றும் அதன் செயல்பாடுகளை கேள்வி எழுப்பி, அதனை இரத்து செய்து, வசூலிக்கப்ட்ட பணத்தை தேசிய மற்றும் மாநில அவசரகால நிவாரண நிதிக்கு மாற்றிட வேண்டும் என கோரியிருந்தார். அந்த வழக்கினை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய ஆயம், அரசியல் சாயம் பூசப்பட்ட, அசட்டையான இந்த வழக்கினை திரும்பப் பெறுகிறீர்களா அல்லது அபராதத்துடன் தள்ளுபடி செய்யட்டுமா என மனுதாரரின் வழக்கறிஞரிடம் கேட்டு, அந்த வழக்கினை தள்ளுபடி செய்தது.

மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வழங்கிய 50க்கும் மேற்பட்ட பிணை மற்றும் முன்பிணை உத்தரவுகளில், வழக்கமான நிபந்தனைகளுடன் கூடுதலாக “பி.எம். கேர்ஸ்” அமைப்புக்கு குறிப்பிட்ட தொகைகளை செலுத்தக் கோரி அபராதம் விதித்தது.

இதற்கிடையில், விக்ரான்த் தொகாட் என்பவர், பி.எம். கேர்ஸ் குறித்து தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் 12 கேள்விகளைக் கேட்டிருந்தார். அந்த கேள்விக்கு கடந்த 27.04.20  அன்று, ஒரே மனுவில் பல்வேறு கேள்விகள் கேட்க கூடாது, ஒவ்வொரு கேள்வியையும் தனித்தனி மனுவாக தனித்தனி கட்டணம் செலுத்தி கேட்க வேண்டும் என கூறி பிரதமர் அலுவலகம் பதில் அளிக்க மறுத்தது.

இந்த சூழலில் தான், “பி.எம். கேர்ஸ்” பொது அதிகாரம் பெற்ற அமைப்பு அல்ல என தற்போது, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின், பிரிவு 2 (h) (IV)-ன் படி, உரிய அரசால் பிறப்பிக்கப்படும் உத்தரவு அல்லது அறிவிக்கை-யின் அடிப்படையில் உருவாக்கப்படும் அனைத்தும் “பொது அதிகாரம் பெற்ற அமைப்பு” என்று கூறுகிறது. பிரதமர் தான் இதன் தலைவராக இருக்கிறார். மேலும், நடுவண் அரசின் பாதுகாப்பு, நிதி மற்றும் உள்துறை அமைச்சர்கள் மூவரும் அதில் பொறுப்பாளர்களாக இருக்கின்றார்கள். கூடுதலாக, பி.எம். கேர்ஸ்-ன் பெயர், அதன் கட்டமைப்பு, அதில் இடம்பெற்றுள்ள அரசுச் சின்னமான அசோக சக்கரம்  உள்ளிட்ட அனைத்தும் இது பொது அதிகாரத்தின் கீழ்தான் வருகிறது என்பதையே காட்டுகிறது. அரசாங்கத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட இணையதளத்தின் பெயரில் தான் அந்த நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது இதில் குறிப்பிடத் தகுந்தது.

அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு அமைப்பிற்கு, நாட்டின் பிரதமர் விளம்பரம் செய்கிறார். அது பொது அதிகார அமைப்பு இல்லை என்றால், அது யாரால்  நிர்வகிக்கப்படுகிறது என்பது மிகப்பெரும் கேள்விக்குறி. அவ்வாறு வழங்கப்படும் நன்கொடை தொகைக்கு முழுமையாக வரி விலக்கு உண்டு என நடுவண் அரசால் அறிவிக்கப்படுகிறது. அதன் வாயிலாக பொது அதிகாரம் இல்லாத ஒரு அமைப்புக்கு பணம் வசூலிப்பதற்காக அரசின் வருவாய்க்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

“பி.எம். கேர்ஸ்” அமைப்புக்கு மே 2020 முதல் மார்ச் 2021 வரையிலும் மாதத்தில் ஒரு நாள் ஊதியத்தை அளிக்க நிதி மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட அமைச்சகங்கள் தங்களது பணியாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. அந்த பணியாளர்களின் எண்ணிக்கை 50,000 க்கும் அதிகம். ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய்க்கு அதிகமாக நிகர லாபமீட்டும் கார்பரேட் நிறுவங்கள், அந்த இலாபத்தில் 2% தொகையை ஆண்டுதோறும், பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டுமென நிறுவனங்கள் சட்டம், 2013ன் பிரிவு 135 (5) கூறுகிறது. இந்நிலையில், கடந்த 26.05.2020  அன்று நிறுவனங்கள் சட்டத்தில் அது தொடர்பான அட்டவணை VIIல், பிரதமரின் தேசிய நிவாரண நிதி அல்லது பிஎம் கேர்ஸ்-க்கு அந்த தொகையை செலுத்த வேண்டுமென திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

“பி.எம். கேர்ஸ்” மூலமாக நன்கொடையாக வசூலிக்கப்பட்ட பணம், நன்கொடையாளர்களின் பெயர்கள், அவைகள் செலவு செய்யப்பட்ட விவரங்கள் போன்றவைகளை  தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொடுக்க முடியாது என்று தற்போது பிரதமர் அலுவலகம் மறுத்துள்ள நிலையில், அது குறித்த போதிய விவரங்கள் பி.எம். கேர்ஸ் இணையதளத்திலும் இடம்பெறவில்லை.

கொரோனா தடுப்புக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை கொடுத்துவிட்டு பிறகு நாட்டுக்கு ஆலோசனை கூறவும் என்று பலரும் சமூக ஊடகங்களில் கருத்து பதிவு செய்தார்கள். அவ்வாறு நன்கொடை வழங்கிட எந்தவித கட்டாயமும் இல்லாத நிலையிலும், நன்கொடை கொடுக்காதவர்கள் வழக்கம் போல ஒருசாராரால், தேசப்பற்று இல்லாதவர்களாக பார்க்கப்பட்டார்கள். தான் விரும்பிய நபர்களுக்கு நடுவண் அரசு உதவி செய்யவேண்டும் என இங்கே எவரும் கோரவில்லை. அவ்வாறு கோரும் நோக்கத்திலும் எவரும் நன்கொடை அளிக்கவில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் பெயரில் நடுவண் அரசால் வசூலிக்கப்பட்ட பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்குப்  போய் சேர்ந்ததா என்பதை தெரிந்துகொள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது.

பி.எம். கேர்ஸ் பொது அதிகார அமைப்பாகவே இல்லாமல் போனாலும் கூட, பிரதமர் பெயரில் பெற்ற நிதி தொடர்பாக, குடிமக்களுக்கு வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பு தனக்கு உள்ளது என்பதை பிரதமர் அலுவலகம் மிக சாதாரணமாக தட்டிக் கழித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடவேண்டும் என்ற குடிமக்களின் உணர்வுகளை, நடுவண் அரசு தனது சொந்த ஆதாயத்திற்கு பணமாக அறுவடை செய்துள்ளது. குடிமக்களுக்கு பதில் சொல்லும் கடப்பாடு, ஊழலற்ற சமூகம் மற்றும் வெளிப்படைத் தன்மையான அரசு நிர்வாகம் என்ற தகவல் பெறும் உரிமை சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு மற்ற எல்லோரையும் விட நடுவண் அரசுக்கு கூடுதலாகவே உள்ளது. ஆகவே, பி.எம். கேர்ஸ் தொடர்பான அனைத்து விபரங்களையும் பிரதமர் அலுவலகம் தாமாக முன்வந்து இணைய தளத்தில் குடிமக்களின் பார்வைக்கு வைக்கவேண்டும்.