சில நாட்களுக்கு முன், சங்கரலிங்கனார் அவர்களின் நினைவு நாள் வலைத்தளமெங்கு காணினும் போற்றப்பட்டது.  புகழஞ்சலி செலுத்தியவர்களில் குறிப்பிடத்தக்க பல தமிழ் தேசியர்கள் இருந்தனர்.  அதில் பெரும்பாலோர் சங்கரலிங்கனார் அவர்களுடைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள்

அதிலேதும் பிழையை நான் காணவில்லை.  தமிழ்நாடு என்கிற பெயரை நம் மாநிலத்திற்கு சூட்ட அவரே காரணம் என்று அவர்கள் பெருமிதப்பட்டதையும் குறை கூறப் போவதில்லை !

ஆனால் என்னை நெருடிய சில காட்சிகள் இருந்தன.

தொடர்ந்து 76 நாட்கள், சாகும்வரை நீர், உணவு என எதையும் உட்கொள்ளாமல், தள்ளாத வயதில் உண்ணாவிரதமிருந்து, தன்னுடைய கோரிக்கைகளுக்காக காந்தியவழியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டது தினமும் செய்திகளில் வந்துக் கொண்டிருந்தும், அவரை அப்படியே சாக விட்டதோடல்லாமல், அவருடையக் கோரிக்கைகளை  இடதுகையால் புறந்தள்ளிவிட்டு, தங்களின் ஆட்சி இருந்த கடைசி நாள்வரை ஒன்றையுமே அதற்காகச் சாதிக்காமல் வாளாவிருந்தது அன்றைய  காங்கிரஸ் அரசு !

” இத்தகைய அர்த்தமற்ற போராட்டங்கள் நாட்டின் ஒற்றுமைக்கு கேடு, பிரிவினைக்கான பாதை, பசிப்போராட்டம் போன்ற மிரட்டல்களுக்கு என் அரசு பணியாது, சங்கரலிங்கனார் தன் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் “

மேற்கண்டக் கூற்று அன்று முதல்வராக இருந்த காமராசருடையது !

இத்தனைக்கும் சங்கரலிங்கனார் காமராஜரின் ஊரைச் சார்ந்தவர், காமராஜருக்கு சீனியராக ஒரே பள்ளியில் படித்தவர்கள், சக இனத்தைச் சார்ந்தவர்தான், போக காந்தியடிகளாருடன் நெருக்கமாக இருந்த அறப்போராளி.  காந்தியுடன் தண்டி யாத்திரையில் பங்கேற்றவர்.  உண்மையான காந்தியவாதியாகத் தன் சொத்துக்களை பொதுமக்களுக்காக விட்டுக்கொடுத்தவர்.  அது பள்ளிகளைக் கட்ட உதவின.  பள்ளியில் கல்வி கற்க வரும் ஏழை மாணவர்களுக்கு கஞ்சி ஊற்ற நிதியுதவி அளித்து, காமராஜரின் புரட்சித் திட்டமான மதிய உணவுத்திட்டத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தார் ! (உண்மையில் 1920 களிலேயே நீதிக்கட்சி கல்விக்கூடங்களில் மதிய உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.  முதலில் சென்னை மாநகராட்சியின் நான்கு பள்ளிகளில் சோதனைமுறையாக இதைச் சாதித்தார்கள், ஆனால் அவர்களுக்குப் பின் முதல்வராக வந்த ராஜாஜி நிதிச்சுமையென இதைக் கிடப்பில் போட, இத்திட்டம்  முடங்கிப்போனது )

சங்கரலிங்கனாரின் பிடிவாதம் பற்றி ம பொ சி, அறிஞர் அண்ணா அவர்கள் உணர்ந்திருந்தனர்.  அண்ணா உண்ணாவிரதப் பந்தலுக்கே வந்து, வாடிக் கிடந்த சங்கரலிங்கனாரைத் தழுவி, கண்ணீர் மல்க பசிப் போரை கைவிட இறைஞ்சினார் !

திமுக அப்போது மெல்ல வளர்ந்துக்கொண்டிருந்த ஒரு புதுக் கட்சி.  தென்னகத்தில் இன்னும் வலுவாக காலூன்றவில்லை.  அன்று தமிழகமெங்கும் வலுவாக இருந்த இரு கட்சிகள் ஒன்று காமராசர் தலைமையிலான காங்கிரஸ், மற்றொன்று பொதுவுடமைக் கட்சி !

காங்கிரஸ்காரரான சங்கரலிங்கனார் போராட்டத்துக்கு துவக்கத்திலிருந்து இறுதிவரை, இறுதிக்குப் பின்னும் ஆதரவாக இருந்தது பொதுவுடமை கட்சிதான்.  ஆனால், திமுகவின் அண்ணாதுரையின் அரசியல் பண்பு, அவருடைய பாசாங்கற்ற கனிவு அனைத்து மக்களையும் கவர்ந்தது.

குறிப்பாக விருதுநகர் மக்கள் அண்ணாவை வியப்புடன் நோக்கினர்.  அந்த வியப்புதான் 1967-ல் அங்கு காமராசரை வீழ்த்தியது.  அண்ணாவை அரியணை ஏற்றியது !

இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம்.

மதராஸ் பிரசிடென்சியிலிருந்து பிரித்து, தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களுக்காக ஆந்திரப் பிரதேசம் என ஒரு புது மாநிலம் வேண்டுமென்றும், அதற்குத் தலைநகராக சென்னை இருக்க வேண்டுமென்கிற கோரிக்கையை வைத்து சென்னையில் பொட்டி ஸ்ரீராமுலு எனும் விடுதலைப் போராட்ட வீரர், 1952 அக்டோபர் அன்று ஓர் உண்ணாவிதப் போராட்டத்தை துவங்கினார் !

இந்தப் போராட்டத்திற்கு தெலுகு தேசமெங்கும் பேராதரவு கிட்டியது.  ஆனால், நேரு, ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்கள் மொழிவாரி மாநிலப் பிரிவினை, இந்தியா என்கிற நோக்கத்தைச் சிதைத்துவிடும் என அந்தப் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் !

விளைவு, கிட்டத்தட்ட இரு மாதங்கள் (19/10/1952 – 15/12/1952) வரை கடுமையான உண்ணாவிரதத்தைக் கடைபிடித்த ஸ்ரீராமுலு, போராட்டப் பந்தலிலேயே உயிர் நீத்தார் !

இறுதி அஞ்சலிக்கு திரண்டு வந்த பல்லாயிரக் கணக்கான தெலுங்கர்கள், இறுதி ஊர்வலத்தில் அரசின் நிலைப்பாட்டுக்கெதிராக வன்முறையில் இறங்கினர்.  காட்டுத்தீயெனப் பரவிய இச்சேதியால், வன்முறை தற்போதைய ஆந்திரா வரை பெருகி, கலவரக் காடானது !

பொருட்சேதம், உயிர்ச்சேதம், துப்பாக்கிச்சூடு, ஊரடங்கு என்று நிலைமை கட்டுக்கடங்காமல் பெருகியது !

பொட்டி ஸ்ரீராமுலுவின் உயிர்த்தியாகத்திற்கும், கிளர்ச்சிக்கும் அவர் மரித்த நான்கே  நாட்களில் நற்பயன் விளைந்தது.  19/12/1952 -ல், சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஆந்திரப் பிரதேசம் உருவானது !

இதன் பின்விளைவு, நாட்டில் பல வினைகள் தொடரக் காரணமானது.  தமிழர்களுக்கும் தமிழ்நாடு என்கிற பெயருடன் மாநிலம் வேண்டுமென்று, ம பொ சி உட்பட பல தமிழார்வலர்கள் தலைமையில் போராட்டங்கள் நிகழ்ந்தன.  ஆனால் பலனில்லை !

எனவேதான் சங்கரலிங்கனார் 27/07/1956 அன்று 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தனியாளாக விருதுநகரின் ஓர் ஓரமாக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார் !

நாம் சமீபத்தில் மெரினா பீச்சில் செய்த ஜல்லிக்கட்டு உரிமை போராட்டம் போல அவருடைய அறப் போராட்டமும் மக்கள் போராட்டமாக மாறி வெல்ல வேண்டுமென கம்யூனிஸ்ட்கள் விரும்பினர்.  எனவே சங்கரலிங்கனாரை வற்புறுத்தி, அந்தப் போராட்டம் ஊருக்குள் நிகழ்ந்தால் பொதுமக்கள் ஆதரவும் கிட்டுமென்று அவரைப் போராட்டக் களத்தை மாற்றக் கோரினர் !

ஏற்றார்.  அவருடைய உரைகள்,  அவரைப் பார்க்க வந்த தலைவர்கள், அவர்களுடனான உரையாடல்கள், அவருடைய அறிக்கைகளென தினமும் அந்த உண்ணாவிரத அப்டேட்கள் தினசரிகளில் வந்தன.  மக்களும் அதை ஆர்வமாகக் கவனித்தனர் !

வெகு சமீபமாகத்தான் ஒரு தியாகியின் மரண அவலம் நிகழ்ந்தேறியிருக்கிறது.  ஆகவே,  இன்னொரு தியாகியின் மரணம்  நிகழ, காங்கிரஸ் அரசு விடாது என்றும் நம்பினர் !

உண்ணாவிரதம் பத்து நாட்களைக் கடந்தும் தொடர்ந்தபோது, பல காங்கிரஸ் தலைவர்கள், அதாவது ராஜாஜி, கக்கன், சி சு, ஆர் வி போன்றோர், சங்கரலிங்கனார் உண்ணாவிரதத்தைக் கைவிட கோரிக்கை வைத்தார்கள்.  ஆனால் ஒரு கட்டத்திற்குப் பின் அவர்கள் தன் வற்புறுத்தலைத் தொடரவில்லை.  மாறாக, வேறு பல காங்கிரஸ் தலைவர்கள் சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதத்தை நாடகமென்றும், அந்த நாடகத்திற்கு பொதுவுடமை, திமுக போன்ற கட்சிகள் கதை – திரைக்கதை எழுதிக் கொடுக்கின்றன என்றும் எள்ளல் புரிந்தனர் !

ஜீவா, ம பொ சி, அண்ணா போன்றோர்தான் போராட்டம் நெடுக, சங்கரலிங்கனார் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள் !

இறுதிகட்டத்தின் சில நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்திருந்த அண்ணாவின் கைகளை இறுகப் பற்றி கண்ணீர் மல்கியிருக்கிறார் சங்கரலிங்கனார்.  அவருடைய உடல் நிலையைப் பார்த்து அண்ணாவும் உடைந்து வெடித்திருக்கிறார்.  அப்போது அவர் அண்ணாவிடம், ” நீயாவது என் கோரிக்கைளை நிறைவேற்றி வைப்பாயா ? ” என்றதாக உடன்பிறப்புகள் கூறுவதை மறுக்கவும் முடியாது.  காரணம் மறுநாள், காங்கிரஸ் அரசின் அலட்சியப்போக்கை கடுமையாகச் சபித்து ஓர் அறிக்கை விட்டார் சங்கரலிங்கனார் !

” பொதுஜனங்களின் விருப்பத்திற்கு மாறாக, தவறான வழியில் கண்மூடித்தனமாகப் போய்க் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி ஒழிந்தே தீரும்.  அறிவிருந்தால் சிந்தித்து தன்னை திருத்திக் கொள்ளட்டும் “

ஆற்றாமல், ஒருவேளை நான் இப்படியே இறந்துபோனால் என்னுடலை காங்கிரஸ்காரன் ஒருவனும் சீந்தக்கூடாது.  என் உடலில் காங்கிரஸ் கொடி போர்த்தக் கூடாது.  என் உடலை பொதுவுடமைக் கட்சியினரிடமே ஒப்படைக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டார் !

தமிழர்களின் கண்களுக்கெதிரே அந்த உயிர் வதைபட்டு ஒருகட்டத்தில் பறந்து போனது.  இறுதி நாட்களில் காவலர்கள் அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றபோதும், சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் 13/10/1956 அன்று இறந்தார்.  அவருடைய இறுதி விருப்பப்படி சங்கரலிங்கனாரின் உடல் பொதுவுடமைக் கட்சித்தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது !

மாணவர்களுக்கிடையே பெருஞ்சலசலப்பை ஏற்படுத்திவிட்ட இந்த மரணத்தால், தமிழ்நாடு கோரிக்கையின் குரல் பெருக ஆரம்பித்தது.  மூச்.  நாட்டாமை படத்தில் பசுபதி டீச்சருக்கான கனெக்‌ஷனை ஒரு வழிபோக்கர் காதில் சொல்லும் கவுண்டமணி கதிக்குத்தான் அது ஆளானது !

” மெட்ராஸ் என்கிற பெயர்தான் உலகப்பிரசித்தமானது, அனைவரும் அறிந்த பெயரும் அதுதான்.  தமிழ்நாடு என்கிற பெயர் அவர்களைக் குழப்பிவிடும், அவர்கள் வாயிலும் நுழையாது ” இது தமிழ்நாடு என்று பெயரை மாற்றக் கோரி பொதுவுடமை கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரிக்கச் சொல்லிஆர். வெங்கட்ராமன் அவர்கள் சட்டசபையில் உதிர்த்த முத்து !

1962 -ல் அண்ணா, நாடாளுமன்றத்தில், தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டு வந்த போதும் அது தள்ளுபடி செய்யப்பட்டது !

நன்கு கவனியுங்கள்.  சங்கரலிங்கனார் என்கிற தியாகி தன்னுயிரை நீத்து ஆறு வருடங்கள் கழிந்த பின்னும் இதுதான் நிலை.  காமராஜர் அன்று அவ்வளவு வலுவான ஒரு தலைவர்.  தன்னுடைய K ப்ளான் படி, அவர் முதல்வர் பதவியைத் துறந்து கட்சிப் பணிக்குப் போன பின்பும் அவர்தான் ராஜா. இருந்தும் அந்தப்போராட்டம் கண்டுகொள்ளபடவில்லை.

1967 -ல் காமராஜர், சங்கரலிங்கனார் உயிர்நீத்த அதே விருதுநகரில், ஒரு மாணவரிடம் தோற்றுப் போனார்.

சட்டசபைக்குள் நுழைந்த மாத்திரத்தில், சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை என்கிற பலகையை தமிழ்நாடு அரசு என்று மாற்றி வைக்கச் சொன்னார் அண்ணா.   அது இரவிலும் அனைத்து மக்களின்  பார்வையில் படுமாறு ஒளிர வேண்டும், விளக்குகளால் அந்தப் பெயரை அலங்கரியுங்கள் என்றும் ஆணையிட்டார் !

திமுக அரசின் சட்டமன்றத் தீர்மானமாக தமிழ்நாடு என்ற மாநிலப் பெயர் மாற்றப் பரிந்துரை அனைவராலும் ஏற்கப்பட்டு ஜூலை 1968-ல் நிறைவேறியது.  பிறகு அந்தக் கோரிக்கையை 22/11/1968 அன்று நாடாளுமன்றத்திலும் ஏற்க வைத்து சாதித்தார் அண்ணா !

முறைப்படி 01/12/1968 அன்று,  மெட்ராஸ் பிரசிடென்சி தமிழ்நாடு என்று மாற்றப்பட்டு, தமிழகமெங்கும் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு,

சங்கரலிங்கனார் கனவை நனவாக்கியது !

ஆக, சாகும் முன் என் ஆசையை நீயாவது நிறைவேத்துவியாய்யா என்று சங்கரலிங்கனார் அண்ணாவைக் கோரியது நிசம்தானென்றும், அதை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நினைவில் சுமந்துக் காத்திருந்து, கிங்மேக்கர்களே மிக மிகக் கடினமென நினைத்த ஒரு செயலை, உடனே சாதித்த அண்ணாவைப் பாராட்டாமல்,

சில இனவெறியர்கள் இன்று என்ன சொல்கிறார்கள் தெரியுமா ?

ஆமாம், அதற்காகத்தான் இந்த தியாகியின் கதை எனக்குத் தேவைப்பட்டது.  சங்கரலிங்கனாருக்கு நிகரான ஒரு தியாகத்தையும், ஆக்கத்தையும் புரிந்த அண்ணாவுக்கு இவர்கள் சூட்டும் பட்டம் வடுக வந்தேறி !

மெட்ராஸை சென்னை எனத் தமிழ்ப்படுத்திய முத்தமிழறிஞருக்கும் அந்த இனவெறியன்கள் இதையேத்தான் கூறுகிறார்கள், அவர்களை எளிதே புறந்தள்ளுவோம்.  உண்மையான வரலாற்றை எவரால் மறைத்துவிட முடியும் ??

அய்யன் வள்ளுவனின் குறளை சொல்லி முடிப்பதே அவர்களுக்கான பதில்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல் !