என்னுடைய “மோடியின் எதிர்காலம்” கட்டுரையை பேஸ்புக்கில் பகிர்ந்த போது அதன் கீழ் பின்னூட்டத்தில் கோதை செங்குட்டுவேல் (Kothai Sengottuvel) ‘தேசிய கட்சிகளின் அவசியம் தன என்ன, மாநில கட்சிகளின் கூட்டாட்சி மத்தியில் தோன்றும் நிலை ஏற்பட வேண்டும்’ என சொல்லி இருந்தார். இது என் மனத்திலும், மாநில தன்னாட்சி உரிமைகள் பற்றி சிந்திப்பவர்கள் மனத்திலும் உள்ள விருப்பமே. இன்னும் சொல்லப் போனால், இது தமிழ் தேசிய அரசியலின் கோரிக்கையே அல்ல. இதுவே உண்மையான மக்களாட்சி அமைய வேண்டும் என கனவு காண்பவர்களின் கோரிக்கை. ஏனென்றால், இப்போதுள்ள நாடாளுமன்ற தேர்தல் முறையும் இந்தி-இந்து தேசியவாத கட்சிகளின் இருப்பும் மக்களாட்சியின் ஆன்மாவுக்கே விரோதமானது. இன்னும் துணிந்து சொல்வதானால், நமது மக்களாட்சியானது ஒரு அடிப்படையான உள்முரணின் மீது அமைந்துள்ளது – மாநிலங்களை பிரநித்துவப்படுத்தும் ஒன்றிய அரசானது மாநிலங்களின் சுயாட்சி உணர்வை தனது இருப்புக்கு பாதகமாக எண்ணுகிறது. சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இந்த முரண் தோற்றம் கொண்டு, மாகாண நலன்களை காலில் இட்டு நடிக்கும் ஒரு தேசியவாத இயக்கமாக முகம் காட்டியது. சுதந்திரத்துக்குப் பின்னும் அது தன் புரோஜெக்டில் மும்முரமாக இருந்தது. இந்தியா முழுமைக்கும் ஒற்றை முகமே எனும் இந்த இந்தி-இந்து தேசியவாதமானது இந்திய தேசியவாதமாக முன்வைக்கப்பட்டு, தன்னை எதிர்ப்பவரை பிரிவினைவாதி என முத்திரை குத்த இது தவறவில்லை. இன்று நம் தேசம் சந்திக்கும் மிகப்பெரிய நெருக்கடியான மதவாத சர்வாதிகாரமானது இந்த முரணில் இருந்து முளைவிட்ட ஆலஞ்செடி தான். வலுவான ஒன்றியம் எனும் பெயரில் உலவும் இந்திய தேசியத்தின் ஆபத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் நம்மால் இங்கு மக்களாட்சியை ஆரோக்கியமாக நிலைநிறுத்த முடியாது.

1968இல் நடந்த தமிழரசு கழக மாநில மாநாட்டினை ஒட்டி ஏற்பாடான மாநில சுயாட்சி கருத்தரங்கில் உரையாற்றிய அறிஞர் அண்ணா வலுவான ஒன்றிய அரசு எனும் கருத்தாக்கம் எவ்வளவு ஆபத்தானது என கீழ்வருமாறு விளக்கினார்:

“பலம் என்பது தனிப்பட்ட ஆளுக்கு இருக்கலாம்; தனிப்பட்ட அமைப்புக்கு இருக்காலம்; மாநில துரைத்தனத்திற்கு இருக்கலாம், மத்திய துரைத்தனத்திற்கு இருக்கலாம். ஆனால் அந்தப் பலம் யாருக்காக எதற்காக ஏற்படுத்துவது என்பது பற்றி விளங்கிக் கொள்ளாமலும் விளக்கிச் சொல்லாமலும், பேசிக் கொண்டிருக்கின்றனர்.
சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மத்திய அரசுக்கு வலிவு தேவை என்றால் ஒரு துளியும் தயக்கமில்லாமல் அந்த வலிமையைத் தரத் தயார்! பாகிஸ்தான் படையெடுப்பை அடக்க மத்திய அரசுக்கு வலிவு தேவை என்றால் நிச்சயம் அந்த வலிமையைத் தேடித்தரத் தயார்!ஆனால், மத்திய அரசின் வலிவு அசாமிற்கு அச்சத்தைத் தர தமிழ்நாடு தத்தளிக்க, கேரளத்திற்குக் கலக்கம் தருவதற்குத்தான் என்றால், நமது சிந்தனையைச் சிறுகச் சிறுக அழித்து, சிந்திக்கும் திறனே இல்லாமல் ஆக்குவதற்குத்தான் என்றால், நமது கூட்டுச் சக்தியின் மூலம் நம்மில் ஒவ்வொருவருடைய வலுவையும் கொண்டு, அந்த அக்ரம வலிவை சிறுகச் சிறுகக் குறைப்பதுதான் எங்கள் கடமையாக இருக்கும்.”

இந்தியாவில் காங்கிரஸ் ஆளுகை செலுத்திய காலத்தில் கூட அவ்வப்போது கூட்டணி அரசு அமைந்தது உண்டு. ஆனால் துரதிஷ்டவசமாக, இதன் சிறப்பை நாம் உணர முடியாதபடி, கடந்த சில பத்தாண்டுகளில் – கார்ப்பரேட் ஊடகங்களின் துணை கொண்டு – இங்கு வலிமையான ஒன்றிய தலைமை அவசியம், கூட்டணி ஆட்சி நிலையற்றது, அது தேசத்தின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் எனும் ஒரு கதையாடல் வளர்த்தெடுக்கப்பட்டது. ஊழல், நிர்வாகக் கோளாறுகள், தேசப் பாதுகாப்பின்மை போன்றவற்றுக்கு கூட்டாட்சியே காரணம் என்பது போன்ற சித்திரம் தோற்றுவிக்கப்பட்டது. “முதல்வன்” படத்தின் பேருந்து ஓட்டுநர் வேலை நிறுத்தக் காட்சி ஒரு உதாரணம். கூட்டாட்சி என்பது ஒரு சமரச ஆட்சியாக அமையும் போது அது நிர்வாகத்தை சில நேரம் அது பாதிக்கலாம்; ஆனால் அதே நேரம் சித்தாந்த ரீதியாக ஒருமைப்பாடு கொண்ட கட்சிகள் கூட்டாட்சி அமைக்கும் போது, அதற்கு ஒரு வலுவான தலைவர் கிடைக்கும் போது மாநில உரிமைகள், அடித்தட்டு, சிறுபான்மை மக்களின் நலன்களை கருத்திற் கொண்டு இயங்கும் ஒரு வலுவான கூட்டாட்சியும் தேசத்தின் வளர்ச்சியும் சாத்தியமாகும்.

ஆனால், நீண்ட காலமாகவே இதற்கு தடையாக இருப்பவை இரண்டு விசயங்கள்:

  1. மக்கள் தொகை அடிப்படையில் சில மாநிலங்களுக்கு அதிக பிரதிநுத்துவத்தை, இடங்களை நாடாளுமன்றத்தில் நமது அரசியலமைப்பு அளிப்பது, இதைக் கொண்டு சில இந்தி பெல்ட் மாநிலங்கள் மொத்த நாட்டையும் கட்டுப்படுத்துவது.
  2. இயல்பிலேயே பன்மைத்துவத்தை ஏற்க முடியாத இந்திய தேசியவாதம்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பெரும்பாலான தேர்தல்களில் மக்கள் காங்கிரஸின் ஒற்றைக் கட்சி ஆட்சிமுறையையே தேர்வு செய்தார்கள். விளைவாக, பன்மொழி பல்கலாச்சார தன்மை கொண்ட நம் தேசத்தின் செழுமை, சுயாட்சி உரிமைகள் ஒழிக்கப்பட்டன. பல சிறு பழங்குடி இனங்களின், உள்ளூர் பிராந்திய மொழிகள் இந்தியின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் வடக்கிலும், மத்திய இந்தியாவிலும் அழிந்தன. திராவிடர்களாக தம்மை உணர்ந்து தாக்குப்பிடித்த தென்னிந்திய மாநிலங்களே ஓரளவுக்கு தாக்குப்பிடித்தன. விளைவாக மாநிலங்களின் மாறுபட்ட கருத்துக்கள், தேவைகளுக்கு இடமளிக்காத இந்தி பெல்ட் தேசியவாத அரசியலே முக்கியத்துவம் பெற்றது. காங்கிரஸ் ஓரளவுக்கு இவ்விசயத்தில் சமரசங்களுக்கு உடன்படும் கட்சி. ஆனால் பாஜக மாநில உரிமைகளை கடுமையாக வெறுக்கிற ஒரு கட்சி. ஏனெனில் நீண்ட காலமாக அதன் கொள்கையே ஒரு தேசம், ஒரு கலாச்சாரம், ஒரு மதம், ஒரு மொழி என்பதே. இன்னும் சொல்லப் போனால் ஹிந்தி பெல்ட்டை இந்தியா முழுக்க நீட்டிக்க வேண்டும், எல்லா மாநிலங்களும் உத்தர பிரதேசம், பீகாரின் போலிகளாக தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என அது விரும்புகிறது. அதனால் தான் பாஜக அரசின் கீழ் இந்தியாவின் பன்மைத்துவம் மூச்சுத்திணறும் போது எதிர்க்குரல்கள் தமிழகம், கேரளம், மே.வங்கத்தில் இருந்து அதிகம் எழுகின்றன. ஆனால் பாஜகவை கண்டிக்கும் அதே நேரம் காங்கிரஸும் அதன் மரு இல்லாத ரெட்டை சகோதரன் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

அண்மையில், எழுவர் விடுதலையைக் கோரி முதல்வர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பிய போது, கூட்டணியில் உள்ள தமிழக காங்கிரஸார் மட்டும் கே.எஸ் அழகிரி தலைமையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்; அதற்கு அவர்கள் குறிப்பிட்ட காரணத்தை நாம் கவனிக்க வேண்டும் – ‘எழுவர் விடுதலை நிகழ்ந்தால் அது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான குரலை வலுப்படுத்தும், மாநில தன்னாட்சி உரிமைக்கான கோரிக்கை வலுக்கும்’ எனும் அச்சத்தை அவர்கள் வெளிப்படுத்தினர். இதற்கு பதிலளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமார் இதை ஏழு தமிழர் விடுதலை என்றல்லாமல் முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் இரண்டாம் நிலை குற்றவாளிகளான ஏழு மனிதர்களின் விடுதலை எனப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். “ஏழு தமிழர் விடுதலை” எனும் சொல்லாட்சி காங்கிரஸுக்கு உறுத்தலாக உள்ளது அது ‘காங்கிரஸ்’ என்பதால் அல்ல, அது ‘தேசியக் கட்சி’ என்பதாலே.

இன்னொரு பக்கம், எழுவர் விடுதலையை நாம் கோருவதன் காரணம் அவர்கள் தமிழர், கொல்லப்பட்டவர் ஒரு தமிழர் அல்லாத தலைவர், அதுவும் ஈழத்தில் பல மனிதரிமை மீறல்கள் நடக்க அமைதிப் படையை ஏவிய ஒரு தலைவர் என்பதால் தானா எனும் கேள்வியை நாம் நேர்மையாக எழுப்ப வேண்டும். என்னிடம் கேட்டால் ஆம் என்பேன். ராஜீவை விடுதலை புலிகள் கொன்றது ஒரு மோசமான அரசியல் முடிவு, அதனால் இதனால் நடைமுறையில் தமிழர்களுக்கும் லாபமில்லை, படுகொலையை நியாயப்படுத்த முடியாது. இருந்தாலும் அதற்கு தார்மீக ரீதியாக ஒரு நியாயமுள்ளது எனச் சொல்லுவேன். இந்த முரண்பாடான உணர்வுநிலையை விளக்குவது சிரமம். ஆனால் தமிழகத்தின் பல ஈழ ஆதரவாளர்களிடம் இந்த உணர்வு இருக்கலாம். ஆனால் இந்த முரண்பாடு தேசியக் கட்சிகளின் இருப்பின், அதன் வெளியுறவுக் கொள்கையின் விளைவாகத் தோன்றுவது – இந்தி-மைய வெளியுறவு கொள்கையின் ஒரு மோசமான விளைவு தான் ஈழத்தில் நடந்தேறி இனப்படுகொலைகள். ஒன்றிய அரசாக ஒரு கூட்டாட்சி இருந்து, அதில் தமிழகத்தின் தலைமை முக்கிய இடம் பெற்றிருந்தால், தமிழக குரல்களை பொருட்படுத்தாமல் எந்த முடிவையும் நாடாளுமன்றத்தில் அவர்கள் எடுக்க முடியாது எனும் நிலை இருந்திருந்தால் ராஜீவின் பல மோசமான தன்னிச்சையான வெளியுறவு முடிவுகள் பின்வாங்கப்பட்டிருக்கும். (உடனே ஈழப்போரின் போதான காங்கிரஸ்-திமுக கூட்டணி இருந்ததே எனக் கேட்கக் கூடாது – திமுகவிடம் கேட்டு முடிவெடுக்கும் நிலையில் காங்கிரஸ் அப்போது இல்லை.)

இந்திய தேசியவாதத்தின் ஒரு வரலாற்றை பார்ப்போம்:

காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி என்பதாலே தொடர்ந்து 1940 முதற்கொண்டே மாநில எதிர்குரல்களை வன்முறை மூலம் ஒடுக்கும் போக்கு அதனிடம் இருந்தது. பிரிவினை அச்சம் என்பதை விட தானே அனைத்து மாநிலங்களின் ஒற்றை பிரதிநிதியாக இருக்க வேண்டும் என அது விரும்பியது. 1928இல் அனைத்துக் கட்சி கருத்தரங்கொன்றை காங்கிரஸார் நடத்தினார்கள். அந்த நேரத்தில் ஜின்னாவும் இன்னபிற இஸ்லாமிய தலைவர்களும் காங்கிரஸின் இந்து பெரும்பான்மைவாதத்தை கேள்விக்குள்ளாக்கி வந்தனர். இந்தியா சுதந்திரம் பெறும் போது நமது அரசியலமைப்பு சட்டத்தில் சிறுபான்மையினருக்கு, மாகாணங்களுக்கு என்னென்ன உரிமைகள் வேண்டும் என அவர்கள் கோரிக்கைகள் வைத்தனர். கருத்தரங்கின் போது இவற்றை விவாதித்த காங்கிரஸார் அவற்றை அலட்சியமாக நிராகரித்தார்கள். இவற்றில் சில பஞ்சாப், வங்காளத்தில் இஸ்லாமியருக்கான தனித் தொகுதிகள் அளிக்க வேண்டும் என்பது போன்ற நியாயமான கோரிக்கைகளும் இருந்தன. இந்த கருத்தரங்க அறிக்கைக்கு தலைமை தங்கியது மோதி லால் நேரு. இஸ்லாமியர்களின் வலுவான பிரநித்துவம் காங்கிரஸில் வேண்டும் எனக் கோரி முஸ்லீம் லீக்கை முன்பு ஆரம்பித்த ஜின்னா 1929இல் 14 கோரிக்கைகளுடன் இப்போது முஸ்லீம் லீக்கை உயிர்த்தெழுப்பி வலுவான கட்சியாக்கினார். ஜவஹர்லால் நேரு இந்த 14 கோரிக்கைகளையும் நகைப்புக்குரியவை என புறமொதிக்கினார். காங்கிரஸ் கட்சி இவற்றை மொத்தமாக நிராகரித்தது. ஆனால் இன்று அவற்றை படித்துப் பார்க்கையில் அவற்றிலுள்ள கணிசமான கருத்துக்கள் மாநில தன்னாட்சியை ஏற்பவர்களுக்கு, சிறுபான்மை உரிமைகளை ஏற்பவர்களுக்கு உவப்பாக நியாயமாகத் தோன்றும். (ஜின்னா பாகிஸ்தானை நிர்மாணித்தவர் என்பதாலே இக்கோரிக்கைகளை நான் தேசவிரோதம் என புறக்கணிக்கத் தேவையில்லை.) உதாரணமாக, நாடாளுமன்ற தேர்தலில் எண்ணிக்கை அடிப்படையில் பிரதிநுத்துவம் அமைந்தால் அது இந்து பெரும்பான்மை ஆட்சிக்கு வழிவகுக்கும் என்பதால் அடையாள அடிப்படையில் பிரநித்துவம் இருக்க வேண்டும் என ஜின்னா கேட்கிறார். பாராளுமன்றத்தில் மூன்றில் ஒரு பகுதியாக இஸ்லாமிய பிரநிதிகள் இருக்க வேண்டும் என்கிறார். அதே போலத்தான் சிறுபான்மையினருக்கான தனித்தொகுதி கோரிக்கையும். இதை நாம் அனைத்து மாநிலங்களுக்கும் அடையாள அடிப்படையில் சமமான எண்ணிக்கையில் பிரந்திதிகள் தரப்பட வேண்டும் என விரிவுபடுத்தினால் இந்தியாவில் உள்ள இந்தி பெல்ட் ஆதிக்கவாத ஒரு முடிவுக்கு வரும். பொருளாதாரத்துக்கு எந்த பொருட்படுத்தத்தக்க பங்களிப்பும் செய்யாத இந்தி பெல்ட் மாநிலங்களுக்கு நமது மத்திய அரசு அதிகமான பொருளாதார பங்கீட்டை தருகிறது. இந்த மக்கள் தொகை பெருகிய நான்கு மாநிலங்களின் மக்களே மத்திய அரசில் யார் தலைமை என்பதில் இருந்து எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதை தீர்மானிக்கிறார்கள். பாபர் மசூதி இடிப்பு இவ்வளவு பெரிய வரலாற்று நிகழ்வாக மாற்றப்பட்டு நாடு முழுக்க பிரிவினைவாதம் முன்னெடுக்கப்பட்டு கலவரங்கள் நடத்தப்பட்டது இந்த நான்கு மாநிலங்களுக்காகத் தான். கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இந்த நான்கு மாநிலங்களுக்காக மற்ற மாநிலங்களின், சிறுபான்மையினரின் உரிமைகள் பலிகொடுக்கப்படுவது திரும்ப திரும்ப நடந்துள்ளது. ஆனால் எண்ணிக்கை அடிப்படையில் மாநிலங்களுக்கு எம்.பி இடங்கள் வழங்கப்பட மாட்டாது எனும் முடிவை நாம் எடுத்து அதை சட்டமாக்கினால் இதற்கு ஒரு முடிவு கட்ட முடியும். அதே போலத் தான் சுதந்திரம் கிடைத்த இத்தனை ஆண்டுகளில் ஏன் ஒரு சிறுபான்மைத் தலைவர் கூட பிரதமர் ஆக முடியவில்லை எனும் கேள்வியும் முக்கியம். இதற்கு தீர்வாக தான் ஜின்னா தனது கோரிக்கைகளை முன்வைத்தார்.

ஜின்னாவின் 14வது கோரிக்கை கவனிக்கத்தக்கது – “அனைத்து மாநிலங்களின் (மாகாணங்கள் என்று அப்போது குறிப்பிட்டார்கள்) சம்மதத்தைப் பெறாமல் பாராளுமன்றத்தால் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தம் கூடாது”. யோசித்துப் பாருங்கள் இந்த சட்டம் நிலுவையில் இருந்திருந்தால் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி, சி.ஏ.ஏ., வேளாண்மை சட்டங்கள், இந்தியர்களுக்கான தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு விற்றது போன்ற பல மக்கள் விரோத முடிவுகளை பாஜகவால் நிறைவேற்றி இருக்க முடியாது. இந்த 14வது கோரிக்கையை நாம் பொருட்படுத்தி இருந்தால் பாஜவால் எந்த விவாதங்களும் இல்லாமல் இயற்றப்பட்ட சட்டதிருத்தம் மூலம் காஷ்மீரை இன்று ஒரு திறந்தவெளி சிறையாக்கி இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு சில மாநிலங்களாவது இந்தி பெல்ட்டுக்கு வெளியே இவற்றை எதிர்த்திருப்போம். அது தானே மக்களாட்சி என்பது. ஆனால் 90 ஆண்டுகளாகவே காங்கிரஸ் மக்களாட்சி கொள்கைக்கு விரோதமான ஒரு வடிவத்தையே இங்கு கொண்டு வந்து, அதற்கு இணங்க அரசியலமைப்பையும் உருவாக்கியது. அதன் மோசமான விளைவுகளைத் தான் இன்று மக்கள் பாஜகவின் வழி அனுபவித்து வருகிறார்கள். மாநில அனுமதியின்றி அரசியலமைப்பு திருத்தங்கள், ஆளுநர்களைக் கொண்டு மாநில ஆட்சியை கவிழ்ப்பது, அரசு எந்திரத்தை பயன்படுத்தி மாநில அரசை அச்சுறுத்துவது என காங்கிரஸ் விட்டுச் சென்ற பிழையான அமைப்பின் அனைத்து சாத்தியங்களையும் பயன்படுத்தி பாஜக ஒரு சர்வாதிகார அரசாக உருப்பெற்று, தேர்தலையே ஒருதலைபட்சமாக, முழுமையான ஒற்றைக்கட்சி ஆட்சியாக வளர்ந்து நிற்கிறது. ஆனால் இதன் விதைகள் மோதி லால் நேரு-காந்தி காலத்திலேயே தூவப்பட்டு விட்டிருந்தன.

ஏனென்றால் இந்தியா போன்ற பன்மைத்துவம் மிக்க ஒரு தேசத்தை தமது ஒற்றை இந்தியா எனும் சிந்தாந்த கட்டமைக்குள் வளைப்பது சுலபம் அல்ல, ஜின்னாவின் கோரிக்கை அதை தகர்க்கிற வெடிமருந்து கொண்டது என காங்கிரஸ் தலைமை அன்றே உணர்ந்திருந்தது. ஆகையால் சர்வாதிகார அடிப்படையில் பன்மைத்துவத்தை, மாநில தன்னாட்சி கோரிக்கைகளை ஒடுக்குவது அவசியம் என அது நினைத்தது. சுதந்திரத்துக்குப் பின், இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு நீண்ட காலமாகவே மத்திய அரசு நிதியுதவியை அள்ளி வழங்கி வந்தது எப்படியாவது ஒருநாள் இந்தி பேசாத மாநிலங்களை சொந்த மொழியை, இனவுணர்வை, சூயாதீன இருப்பை மறக்கடிக்க செய்யலாம் என நம்பிய காரணத்தாலே. இந்தியே ஆட்சி மொழி எனும் அதன் இறுக்கமான நிலைப்பாட்டை – கட்டாய இந்திக் கல்வியை – எதிர்த்தே தமிழகத்தில் 1937இல் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடித்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததும் மத்திய அரசு இந்தியே நமது முதன்மை ஆட்சி மொழி என்றும், ஆங்கிலம் இரண்டாம் நிலை ஆட்சி மொழி என்றும், போகப் போக ஆங்கிலம் கைவிடப்படும் என்றும் அறிவித்தது. இது 1950இல் நிலுவைக்கு வந்தது. 1965, 26 ஜனவரி அன்று அனைத்து மாநிலங்களும் கட்டாயமாக இந்தியை ஆட்சி மொழியாக ஏற்க வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது (இன்னொரு பக்கம் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாகத் தொடர்வோம் என நேரு உத்தரவாதமும் அளித்தார்). மத்திய அரசு மீது நம்பிக்கை இழந்த தமிழகம் ஜனவரி 25 அன்றே இந்தி எதிர்ப்பு போராட்டங்களை திமுக தலைமையின் கீழ் முன்னெடுத்தது.

மொழி அரசியலின் வரலாற்றை நான் இங்கு குறிப்பிடக் காரணம் இது வெறும் மொழித்திணிப்பு அல்ல, அனைத்து மாநிலங்களையும் இந்திமயமாக்கும், உத்தரபிரதேசமாக்கும் ஒரு புரோஜெக்ட் என்பதே. இந்த புரோஜெக்டின் உள்நோக்கம் இந்திய தேசியவாதத்தின் நடப்பியல் முரண்களை இந்தியைக் கொண்டு இட்டுக்கட்டி மறைத்து நாம் அனைவரையும் ஒருநாள் பஜன்லால், பன்லாவாரி லால் ஆக்க வேண்டும் என்பதே. நமது பெயர், அடையாளம், மொழி, கலாச்சாரம் அனைத்தையும் இந்தி பெல்ட்டுக்கு ஏற்ப மாற்றி நம்மை சுலபத்தில் ஒருநாள் ஆள வேண்டும் என காங்கிரஸ் விரும்பியது. சமத்துவ நோக்கில், மாநில அடையாளங்களுடனான ஒரு பன்மைத்துவ தேசியவாத கூட்டாட்சி அமைப்பை காங்கிரஸ் சிந்திக்கத் தவறியது. ஏனென்றால் அது தானே இந்தியாவை ஒற்றைக்கட்சியாக நெடுங்காலம் ஆள வேண்டும் என ஆசைப்பட்டது. ஏனென்றால் அதன் கருத்தியலை தீர்மானிக்கிறவர்களாக இந்தி பெல்ட்டின் தலைவர்களே நீண்ட காலமாக இருந்தார்கள். அதனாலே அவர்கள் உருதுவை இஸ்லாமியர்களின் மொழி என நம்பி அதை ஆட்சிமொழியாக்க முடியாது என நிராகரித்தார்கள். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளை பரிகாசத்துடன் அணுகினர். இந்தி என்பது இந்துக்களின் மொழி இல்லையா எனும் கருத்தமைவே இந்த வெறியின் முக்கியர் காரணம். இந்துக்களே பெரும்பான்மை, ஆகையால் இது இந்துக்களின் தேசம் என அன்றைய காங்கிரஸ் இந்தி பெல்ட் தலைவர்கள் கருதினார்கள். மற்றொரு பக்கம், இதை வெளிப்படையாக அங்கீகரிக்க தயங்கும்படி முற்போக்கு தலைவர்களும் காங்கிரஸில் இருந்தார்கள். அம்பேத்கரும் அரசியலமைப்பில் நம்மை ஒரு மதசார்பற்ற தேசம் என அறிவித்து விட்டார். ஒரு பக்கம் இந்தி சார்பிருந்தாலும் நேருவின் சோசலிச சாய்வு அவரையும் பிறரையும் இதை ஏற்க வைத்ததென நினைக்கிறேன். ஆனால் ஜின்னா அன்று எழுப்பிய சந்தேகங்கள் 92 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நமக்குப் புரிய ஆரம்பிக்கின்றன. அன்று காங்கிரஸ் தலைவர்கள் ஜின்னாவின் கோரிக்கைகளை வேடிக்கையானவை எனக் கருதி நிராகரித்தது போன்றே இன்று எழுவர் விடுதலையை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அண்ணாதுரையின் உரையில் அவர் வலிமையான மத்திய அரசு- அதற்கு கீழ் வலுவற்ற மாநில அரசு எனும் கட்டமைப்பின் போதாமைகளை  பட்டியலிடுகிறார்:

“இன்றைய தினம் மாநில அரசுக்குள் வேலை என்ன? மக்களுக்குச் சோறு போடுவது, வேலை வாய்ப்புத் தருவது தொழில் நீதியை நிலைநாட்டுவது, சுகாதாரத்தைப் பேணுவது, கல்விச் செல்வத்தை வளர்ப்பது போன்ற எண்ணற்ற வேலைகளைச் செய்யவேண்டியது மாநில அரசு. ஆனால் மத்திய அரசின் வேலை என்ன? நாடக மேடையில் வரும் ராஜா, மந்திரியை அழைத்து, மந்திரி! நமது மாநகர் தன்னில் மாதம் மும்மாரி பொழிகின்றதா? என்று கேட்பானாம். அதுபோல் மாதம் ஒருமுறை மாநில மந்திரிகளை மத்திய மந்திரி டில்லியில் கூட்டி பள்ளிக்கூடங்களில் கல்வி எப்படி இருக்கின்றது? காலரா நோய் தடுக்கப்பட்டுவிட்டதா? என்று கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இப்படி தர்பார் பேச்சுப் பேசும் பொறுப்புத்தான் டில்லிக்கு இருக்கிறதே தவிர வேறு ஒன்றுமில்லை.”

அன்று காலரா நோயென்றால் இன்று கொரோனா. ஆனால் மாநிலங்களுக்கு அதிக பொறுப்பு, ஒன்றியத்துக்கு அதிக அதிகாரம் எனும் சமநிலையின்மை மட்டும் மாறவில்லை.

அடுத்து, அண்ணா கல்விப் பொறுப்பு மாநிலங்களின் உரிமையில் இருக்கும் போது கல்வித்திட்டத்தை வகுக்கும் அதிகாரத்தை மட்டும் ஒன்றியம் வைத்துக் கொள்வதன் அநீதியை, தொழில் அமைப்பை மாநில பொறுப்பிலும், தொழிலுக்கு உரிமம் வழங்கும் அதிகாரத்தை ஒன்றியத்துக்கும் கொடுப்பதிலுள்ள நிர்வாகச் சிக்கலை குறிப்பிட்டு சாடுகிறார். விமான, கப்பல் போக்குவரத்தும், துறைமுகப் பராமரிப்பும் ஒன்றியம் தன் வசம் வைத்துக் கொண்டு ஏன் பஸ், லாரி போக்குவரத்தை மட்டும் மாநிலங்கள் வசம் விடுகிறது என அண்ணா கேட்கிறார். 11.01.1959இல் “திராவிட நாடு” பத்திரிகையில் மாநிலங்களுக்கு நிதியை பங்கிட்டு அளிக்கும் அதிகாரம் ஒன்றியத்தின் வசம் உள்ளது வளர்ச்சியை பாதிக்கிறது என்கிறார். இன்று ஜி.எஸ்.டியைக் கொண்டு வந்து மாநிலங்களின் வருவாயை ஒன்றியம் முடக்கியதுடன், ஜி.எஸ்.டி நிலுவையைக் கூட தர மறுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்கள் வாங்குவதற்கான அதிகாரத்தை, நிதியை மத்திய அரசு ஆரம்பத்திலேயே அளித்திருந்தால் இந்நேரம் மாநிலங்கள் கணிசமானோருக்கு தடுப்பூசிகள் கிடைக்க வழிவகுத்திருக்கும். ஆனால் தேர்தல்களை வெல்வது, அடுத்த கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்ப்பதில் மட்டுமே அக்கறை காட்டும் ஒன்றிய அரசு கொரோனா நிர்வாக உரிமையை யார் வசமும் கொடுக்காமல் தானும் எடுத்தாளாமல் இருந்ததால் விளைந்த பேராபத்தை நாம் இன்று அனுபவிக்கிறோம். மக்கள் கொத்துக்கொத்தாய் தெருவில் கிடந்து மரிக்கிறார்கள். பிணங்கள் கங்கையில் மிதக்க விடப்படுகின்றன. பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி, மருந்து, படுக்கை வசதி எவையும் இல்லை. கடந்த தமிழக தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக ஆதரவாளர்கள் ஒரு வாதத்தை எடுத்து வைத்தார்கள். அது ஒரு மறைமுக மிரட்டலுமாகும்: “தேர்தலில் திமுக ஜெயித்தாலும் மத்திய பாஜக அரசின் ஆதரவு இன்றி தமிழக அரசால் ஆட்சி நடத்தவோ, முடிவுகளை நடைமுறைப்படுத்தவோ முடியாது.” இந்த திமிரில் தான் பாஜகவின் எச்.ராஜா எல்லா ஊடகங்களையும் வரவழைத்து தமிழக நிதியமைச்சரை “அவன் இவன்” என ஏகவசனத்தில் விளித்து மிரட்டுகிறார். ஆனால் இந்த ஏகாதிபத்தியம் என்பது பாஜகவால் வெளிப்படையாக முன்னெடுக்கப்பட்டாலும் இதற்கு வலுவான அடித்தளத்தை உண்டாக்கி அளித்தது காங்கிரஸ் தான்.

ஒருவேளை காங்கிரஸ் நாற்பதுகளில் இந்து-இந்தியா-ஒற்றை பிரதிநுத்துவம் எனும் வெறியை கைவிட்டு இணங்கி சென்றிருந்தால், பிரிவினையை, அதை ஒட்டிய மோசமான கலவரங்களை, கொலைகளை, கொள்கைகளை தவிர்த்திருக்கலாம். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே காந்தி தலைவராக இருந்த போதே காங்கிரஸ் தன்னை ஒற்றை பிரதிநுத்துவ கட்சியாகக் கண்டது. காந்தி ஒரு பக்கம் மிதமிஞ்சிய இந்து கலாச்சார அடையாளத்துடன் செயல்பட்ட படியே இஸ்லாமியரும் தன்னை அவர்களின் தலைவராக ஏற்க வேண்டும் என பிடிவாதம் பிடித்தார். சனாதனவாதியாக இருந்தபடியே தலித்துகளின் பிரதிநிதியும் தானே என முரண்டு பிடித்தார். அவருக்கு மாற்றாக இருந்த ஜின்னாவையும், அம்பேத்கரையும் எதிர்த்தார். காந்தியின் இந்த கண்மூடித்தனமான ஒற்றை பிரதிநுத்துவ சர்வாதிகார மனநிலையை தான் பின்னர் காங்கிரஸும் வரித்துக் கொண்டது. சுதந்திரத்துக்குப் பின் அது மாநில உரிமைகளை கடுமையாக ஒடுக்கிய வரலாறு நெடியது. ஈழம் போன்ற வெளியுறவு விசயங்களில் அதன் நிலைப்பாடும் இவ்வாறே இருந்தது. புலிகளுக்கு ஒரு காலத்தில் காங்கிரஸ் அரசு பொருளாதார ஆதரவு, ராணுவப் பயிற்சி அளித்த திமிரில் தம் சொற்படி பிரபாகரன் பணிய வேண்டும் என ராஜீவ் கருதினார். அந்த பிடிவாதம் எடுபடாத நிலையில் தான் ஈழத்தில் வன்முறை வெடித்து, ஒரே சமயம் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் விரோதியானாகி, இறுதியில் படுகொலையுமானார் ராஜீவ்.

யோசித்துப் பார்த்தால், ராஜீவ் இந்திய தேசியவாதம் எனும் முரணின் இரண்டாவது பலி (முதல் பலி அவரது தாயார் இந்திரா). அடுத்து, எந்த தேசியவாதக் கட்சி காங்கிரஸின் இடத்தில் இருந்திருந்தாலும் பெரிய வேறுபாடுகள் இருந்திருக்காது எனத் தோன்றுகிறது. ஏனென்றால் தேசியக் கட்சியின் அடிப்படையான கொள்கையே ஒற்றை பிரதிநுத்துவம் தான், அது அடிப்படையில் மக்களாட்சிக்கு பன்மைத்துவத்துக்கு எதிரானது தான் – அதாவது சட்டமன்ற தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் அது இரண்டாக ஒரு படிநிலையுடன் பார்க்கும். ஒன்று ஒன்றியத்தில் ஆளும் கட்சியே மாநிலத்திலும் ஆண்டாக வேண்டும். மக்கள் மாற்றி முடிவெடுத்தால் சி.பி.ஐ போன்ற அமைப்புகளையும் ஆளுநர்களையும் ஏவி மாநில கட்சியை தொடர்ந்து அவமதித்து ஒடுக்கும். நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் ஆண்டான்கள், சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் அடிமைகள் என்றே கருதும் கருதும், மாநில உரிமைகளை பிரிவினைவாதம் எனக் கூறும் ஒடுக்கும்.

இதற்கு ஒரு தீர்வு இந்தியாவின் மக்களாட்சிக்கு அடிப்படையாக விரோதமாக இருந்தாக வேண்டிய தேசியவாதக் கட்சிகளை தடை செய்து மத்தியில் மாநில கட்சிகளின் கூட்டணி மட்டுமே என்றும் ஆட்சி அமைக்க முடியும் என்று சட்டமியற்றுவது. அல்லது, நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து மாநிலங்களுக்கும் – அவை மக்கள் தொகையை பொறுத்து சிறிதோ பெரிதோ – ஒரே எண்ணிக்கையில் பிரதிநுத்துவம் என்றும், எந்த தீர்மானத்தையும், சட்டமாற்றத்தையும், திருத்தத்தையும் அனைத்து மாநிலங்களின் அனுமதி பெற்றே நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என ஜின்னாவின் பரிந்துரைகளை சட்டமாக்குவது. அதுவரை நமது தேசத்தின் மக்களாட்சி முறையானது ஒரு மேம்போக்கான மக்களாட்சியாக, ஒற்றைக் கட்சி, இந்தி பெல்ட் சர்வாதிகாரமாகவே நீடிக்கும். எவ்வளவு வினோதம் இது யோசியுங்கள் – உத்தர பிரதேசத்தில் இருந்தும், பீகாரில் இருந்தும் மக்கள் நம் மாநிலத்தில் கூலி வேலைக்கு வருகிறார்கள், நம்மை சார்ந்திருக்கிறார்கள், அவர்கள் கல்வி அறிவோ அரசியல் புரிதலோ அற்றவர்களாக இருக்கிறார்கள், ஆனால் தேர்தல் என வந்து விட்டால் அவர்களே நமது எஜமானர்கள். இந்த நிலை மாறி சமத்துவம் வர வேண்டும்! அப்போது தான் கூட்டணியில் இருந்து கொண்டே ஆளும் கட்சியின் கொள்கைக்கு விரோதமாக காங்கிரஸ் குரல் எழுப்புவது, பாஜக திருக்குறளை மேற்கோள் காட்டி மேம்போக்காக தமிழை ஆதரித்துக் கொண்டே நடப்பில் தொடர்ந்து தமிழர்களை விரோதிகளாக பாவிப்பது, தமிழர் உரிமை பற்றி பேசினாலே அதை பிரிவினைவாதம் என இவ்விரு தேசியக் கட்சிகளும் திரிக்கிற அபத்தங்கள் முடிவுக்கு வரும்.

இந்த மாற்றங்கள் வரும் போது தான், இந்தியாவில் உண்மையான மக்களாட்சி மலரும்.