காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் வரும் 22ஆம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி எம்பிக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியது மத்திய அரசு. அதைதொடர்ந்து, கடந்த இரண்டு வாரக் காலமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணையதள சேவைகளையும் முடக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும் கடந்த 5ஆம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீர் தலைவர்களை வீட்டுக்காவலில் அடைத்துவைத்துள்ளது பாஜக அரசு. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு ஜனநாயக படுகொலை செய்துள்ளதாகப் பலர் எதிர்ப்புகள் தெரிவித்து வரும் நிலையில், சிலர் ஆதரவுகளும் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரில் பதற்றம் தணிந்ததையடுத்து பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவு படிப்படியாகத் திரும்பப் பெறப்பட்டு தொலைபேசி, இணையச் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அதைதொடர்ந்து, காஷ்மீரில் படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் இரண்டு வார விடுமுறைக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி வரும் 22ஆம் தேதி அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
இதுதொடர்பராக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ டெல்லி ஜந்தர் மந்தரில் 22ஆம் தேதி காலை 11 மணியளவில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்துக்கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பர். அடக்குமுறைகள், ஊரடங்கு உத்தரவு மூலம் காஷ்மீரைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது பாஜக அரசு. தொலைத்தொடர்புகளைத் துண்டித்து ஜம்மு காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்து அடிப்படை உரிமைகளை பாஜக அரசு பறித்துள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.