ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வரும் 26ஆம் தேதி வரை அவரை கைது செய்யத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மும்மரமாகச் செயல்பட்டதால், அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, புதன்கிழமை இரவு ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
நேற்று சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணை நடத்திய பிறகு மாலை 3 மணி அளவில் சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டது நீதிமன்றம்.
ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் எடுத்ததற்கு எதிரான கபில்சிபலின் முறையீடு குறித்து திங்கள்கிழமை விசாரணை செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் அமலாக்கத்துறை கைது செய்யாமலிருக்க ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. சிதம்பரம் கைது செய்யப்பட்டதால் முன் ஜாமீன் மனு செல்லாது என சிபிஐ தரப்பில் துஷார் மேத்தா வாதாடினார்.
மேலும், “ப.சிதம்பரம் சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமானது. கைது செய்தால் தான் உண்மை வெளிவரும். முன் ஜாமீன் எனும் பாதுகாப்பு இருந்தால் ப.சிதம்பரத்தை விசாரிக்க இயலாது. வழக்கின் விசாரணை எவ்வளவுதான் நடந்தாலும் உண்மைகள் அவரிடம் இருந்து வெளிவராது. இதற்கு காரணம் அவரின் அந்தஸ்து.
இன்னொன்று அவருக்குச் சட்ட நுணுக்கங்கள் தெரியும். காவலில் வைத்தால் மட்டும்தான் முடிவு வரும். சிதம்பரத்திற்குச் சொந்தமாக வெளிநாட்டில் 17 வங்கிக்கணக்குகள் 10 அசையா சொத்துக்களின் விவரங்கள் கிடைத்துள்ளன. அரசியல் காழ்ப்புணர்ச்சி என சிதம்பரம் கூறினாலும் வலுவான ஆதாரங்கள் இருப்பதால் தான் கைது செய்தோம்.” எனத் தெரிவித்தார் துஷார் மேத்தா.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதிவரை அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்வதற்குத் தடை விதித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், “எனது சொத்துகள் குறித்த விவரங்களை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளேன்” எனக் கார்த்தி சிதம்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீனை நீட்டிக்கக்கோரிய மனு மீது செப்டம்பர் 3இல் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறதாகத் தெரிவித்துள்ளது.