கொரோனா பீதி தலைவிரித்தாடும் போது மோடி அதற்குத் தீர்வாக மக்கள் கைதட்டுவது, டார்ச் அடிப்பது போன்றவற்றை அளிப்பதை பலரும் சமூக வலைதளங்களில் கலாய்த்தார்கள். மோடி இப்படி செய்வதற்கு ஒரு காரணம் அவரது சுயவிளம்பர மோகம். மற்றொன்று அவரது டிஸைனே அப்படித் தான் என்பது.
அண்மையில் நூலகம் ஒன்றில் அவரது “மன் கீ பாத்” வானொலி உரைகளின் தொகுப்பான Mann Ki Baat: A Social Revolution on Radioவை பொறுமையாகப் படித்தேன். அப்போது எனக்கு ஒன்று விளங்கியது: அவர் ஒன்றும் கொடுமையான ஆள் அல்ல, உள்ளுக்குள் அவர் ஒரு குழந்தை. ஒரு பக்கம் ரொம்ப தந்திரமான ஆசாமி, இன்னொரு பக்கம் வெள்ளாந்தியான மனிதர் என விசித்திரமான கலவை.
நாம் ஏதாவது ஒரு பெரிய பிரச்சனையில் இருக்கையில் ஒரு பாட்டி வந்து “என்னப்பா இது?” என விசாரிப்பார். நாம் சொன்னதும் ஏதோ எல்லாம் புரிந்ததைப் போல கொஞ்சம் விபூதியை நெற்றியில் பூசி விட்டு “கொஞ்ச நாள் ஒண்ணத்தையும் யோசிக்காதே. எல்லாம் சரியாயிடும்.” என்பார் பொக்கை வாய் சிரிப்போடு. நமக்கும் சற்று ஆறுதலாக இருக்கும். “சரி பாட்டி” என நன்றி சொல்வோம். இந்த வானொலி உரைகளில் மோடி பேசுவது எல்லாம் இப்படித் தான் இருக்கிறது. கற்பனையாய் ஒரு உதாரணம்: ஊழல் அதிகமாய் இருக்கிறது என ஒரு பிரச்சனையை எடுத்துப் போனால் “நீ ஒழுங்கா இருந்தா சமூகத்தில் ஊழல் சரியாப் போய் விடும். அதனால் சுய ஒழுக்கம் தான் முக்கியம். அதை கடைபிடியுங்கள்” என்று சொல்லி விடுவார். இதற்கு நீங்க என்ன பதில் சொல்ல முடியும்? அவரது ஸ்வச் பாரத் பிரச்சாரம் இந்த நோக்கம் கொண்டது தான். நகரம் ஏன் அசுத்தமாக இருக்கிறது? நடைமுறைக் காரணங்கள் பல, போதுமான துப்புரவு தொழிலாளர்கள் இல்லாதது, குப்பைத்தொட்டிகள் இல்லாதது, அதற்கான நிதி கார்ப்பரேஷனிடம் இல்லாதது, நிறைய மக்கள் குறைவான இடத்தில் நெருக்கடியாய் வாழ நேர்வது, கூடவே மக்களின் சுகாதாரமின்மை என. ஆனால் மோடி இதை ஒட்டுமொத்தமாக மக்களின் சுய-ஒழுக்கமின்மை என சுருக்கி விடுவார். நீங்கள் என்னதான் சுத்தமாக இருக்க விரும்பினாலும் குப்பையை போட இடமில்லை என்றால் என்ன பண்ண முடியும் என்னும் கேள்விக்கு அவர் வர மாட்டார். அவர் எதையும் மிக மிக எளிமையாக குழந்தைத்தனமாக பார்க்க விரும்புவார்.
இப்போது நிஜ உதாரணம்: பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்து கொண்டிருந்த போது மோடி தொடர்ந்து அப்போது மாணவர்கள் எப்படிப் படிக்க வேண்டும், எப்படி பதற்றமில்லாமல் இருக்க வேண்டும் என கரிசனத்துடன் வானொலியில் பேசியிருக்கிறார். அதன் எழுத்தாக்கத்தில் ஒரு அத்தியாயமாக இப்புத்தகத்தில் வருகிறது: மோடி குழந்தைகளுக்கு தேர்தல் சமயத்தில் ஏற்படும் உளவியல் சிக்கல்களைப் பற்றி குறிப்பிடுகிறார். அடடே நல்ல விசமாயிற்றே என நினைத்தேன். அடுத்து தான் தலைவர் தீர்வுக்கு வருகிறார்: தாள முடியாத அழுத்தத்தில் இருக்கும் ஒரு மாணவன் படிப்பின் இடையே ஒரு பத்து நிமிடம் வெளியே போய் விளையாடி விட்டு திரும்ப வந்து அமர்ந்து சமர்த்தாக படிக்க வேண்டும், எல்லா மன அழுத்தமும் காணாமல் போய் விடும் என்கிறார். (நண்பன் படத்தில் விஜய் சாவின் விளிம்பில் இருப்பவர்களிடம் ‘ஆல் இஸ் வெல்’ சொல்வதைப் போல.) நமக்கு முதலில் இதைக் கேட்க “எவ்வளவு எளிமையான தெளிவான தீர்வைத் தருகிறார்” எனத் தோன்றும். ஆனால் நடைமுறையில் இது எந்த பலனையும் அளிக்காது எனப் புரிகையில் இந்த ஆள் நம்மை பைத்தியமாக்குகிறாரா எனத் தோன்றும்.
தேர்வு எனும் அமைப்பு ஏற்படுத்தும் உளவியல் பாதிப்பு, அது கல்விக்கு எந்த விதத்திலும் பங்களிக்காதது பற்றி பல நிபுணர்கள் பேசியுள்ளதை மோடி ஏன் பரிசீலிப்பதில்லை எனத் தோன்றும். ஒரு தலைவராக அவரது கடமை சமூக அமைப்புகளில் உள்ள சிக்கல்களை அகற்றுவதும், அதைப் பற்றி சிந்திப்பதும் அல்லவா? ஆனால் மோடியின் மனம் அந்தளவுக்கு ஆழத்தில் போய் அலசாது. அம்பேத்கரும் காந்தியும் தாம் வாழ்ந்த காலத்தின் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். நம் காலத்தில் கூட அத்தகைய தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்களின் பேட்டிகளில் காண்கிறோம். மோடி மட்டுமே இவர்களிடையே தனித்துவமானவர். எந்த மிகப்பெரிய சிக்கலான பிரச்சனைக்கும் யாரும் யோசிக்க முடியாத எளிதான தீர்வுகளைத் தருவதே அவரது பாணி, அது எவ்வளவு வேடிக்கையாக இருந்தாலும் அவர் கவலைப்படுவதில்லை.
மோடி எந்த அரசியல் விவாதத்திலும் ஈடுபட மாட்டார். ஊடகங்களுக்கு சுலபத்தில் பேட்டி அளிக்க மாட்டார். தன்னை ஒரு காவலாளி, வேலைக்காரன் என தாழ்த்திக்கொண்டு மக்களை நோக்கி வணங்கி பணிவாக நின்று கொள்வார். இதெல்லாம் அவரது தற்காப்பு உத்திகளாக இருக்கலாம். ஆனால் அவரது உடல்மொழியைப் பார்த்தால் அவரது பணிவு ஒரு பாசாங்காக நமக்குத் தோன்றாது. ஒருவேளை இந்த குழந்தைமை தான் இந்தியர்களை வரை நோக்கி ஈர்க்கிறதோ?
என் வேலை, என் எதிர்காலம் என்ன ஆகும்? நாளை நான் உயிருடன் இருப்பேனா என்று கவலையுடன் நீங்கள் இருக்கும் போது அவர் உங்கள் அருகே வந்து “கண்ணை மூடி சற்று அமைதியாக இருங்கள். எல்லாம் சரியாகி விடும்” என சொல்கிறார். உங்களால் என்ன செய்ய முடியும்? அவரை கலாய்க்கலாம். ஆனால் அதுவும் ஒருவித இரக்கத்தை தான் தூண்டும்.
ஏகப்பட்ட பிரச்சனைகளால் தலையை பிய்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கு அவர் ஒருவேளை வாழ்நாள் ஆறுதலாக, நம்பிக்கையின் ஒளியாகத் தோன்றலாம். படிக்காத ஏகப்பட்ட ஜனங்களுக்கு (அவர்களின் நலனுக்கு அவரே பெரும் விரோதி என்றாலும்) அவர் தங்களது மொழியைப் பேசுவதாகப் படலாம். நான் என்னுடைய மாணவர்கள் பலரிடம் மோடியைப் பற்றி அவர்களின் கருத்தைக் கேட்டிருக்கிறேன். அவர்களில் பாஜக. இந்துத்துவ எதிர்ப்பாளர்களுக்கு கூட மோடி மீது ஒரு கரிசனம், நம்பிக்கை உண்டு. அவர்களால் மோடியின் ஆளுமையை இந்துத்துவாவுடன் இணைத்துப் பார்க்க முடிவதில்லை. மோடியை இந்து ராஷ்டிர தலைவராகக் காணும் பக்தாள்களுக்குக் கூட அவர் கடுமையான இந்துத்துவர் அல்ல. மோடியின் டிஸைனை நாம் பகடி செய்யலாம், ஆனால் அதுவே அவருக்கு அனுகூலமாகவும் அரசியலில் இருக்கிறது. அவரை எதிர்க்கட்சிகள் திட்டினதும் அது அவர்களுக்கு எதிராகவே திரும்பி விடுகிறது. ஆனால் இதே மோடி தன் எதிர்க்கட்சியினரை காறித் துப்பினாலும் மக்கள் கண்டு கொள்வதில்லை.
“இந்த புலிப்பாண்டி பயங்கரமானவன் தான், ஆனால் குழந்தைகளுக்கு இல்ல” (“மஜாவில்” வடிவேலு) – குழந்தைகளால் புலிப்பாண்டியை வெறுக்க முடியுமா சொல்லுங்க?