1. கரையாத நிழல்கள்

(ஒரு மனநல மருத்துவனின் டயரிக் குறிப்பிலிருந்து) 

உறவின் நிமித்தம் மனிதர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகளும், எதிர்பார்ப்புகளும், உணர்வுகளும் எவ்வளவு வேடிக்கையானது என்பதை ஒரு மனநல மருத்துவனின் சாய்வு நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் தருணங்களில் நம்மால் உணர முடியும். அந்த வகையில் மனநல மருத்துவனாய் எனது இந்த அலுவல் சுவாரசியமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. எல்லா சுவாரசியங்களின் பின்னாலும் மறைந்திருக்கும் ஆபத்தைப்போலவே அதுவும் நம் கவனத்தில் படாமலேயே தப்பித்துக்கொள்ளும். எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அது தனது விஷ கொடுக்குகளை நீட்டி நம்மை தீண்டிவிடுவதற்கான முகாந்திரம் இருக்கிறது.

மனித உறவுகளின் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நிகழும் உணர்வின் தலையீடுகள் அந்த உறவுசார்ந்து அவர்கள் கொண்டிருக்கும் மேன்மையான விழுமியங்களைப் பற்றியான அபிப்ராயங்களையெல்லாம் கலைத்துப்போட்டுவிடும் நீண்ட உரையாடல்களுக்குப் பிறகு என்மீது போர்த்தியிருந்த மருத்துவ அங்கியைக்கழட்டி எறிந்துவிட்டு ஒரு சக மனிதனாய், ஒரு வழிப்போக்கனாய், உறவுகளை நம்பும் சாதாரண மனிதனாய் இரைச்சல் மிகுந்த சாலையில் நான் நடந்து செல்லும்போது என்னையும் அந்தக் கூட்டத்தில் ஒருவனாய் நான் உணர்ந்துகொள்ள அத்தனை சிரமப்பட வேண்டியிருக்கிறது. என்னைக் கடந்து செல்லும் குழந்தையின் முகத்தில் இருக்கும் குதூகலத்தை, அந்த குழந்தையின் சுண்டு விரலை இறுக்கமாய் பற்றிக்கொண்டு சாலையை கடக்க முற்படும் அவளின் தாயிடம் தெரிந்த வெறுமையை, சாலையின் நடைமேடையில் அடுக்கி வைத்த பழங்களையே மீண்டும் மீண்டும் எண்ணிக்கொண்டிருக்கும் அந்த கிழவியின் தனிமையை என மனிதர்களின் அகத்தை துளைத்துக்கொண்டு பார்க்கும் எனது கண்களை கழட்டி போட அத்தனை பிராயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது

மனிதர்களுக்கிடையேயான கசப்புகளும், வேதனைகளும், ஏமாற்றங்களும், துரோகங்களும், பொய்க்கும் எதிர்பார்ப்புகளும் எனது மேசையின் அடியே நாள் முழுக்க சேர்ந்து கொண்டேயிருக்கின்றன. அன்றாட வாழ்வில் நான் என்னை நுழைத்துக்கொள்ள முயலும் போதெல்லாம் அவை எனது கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு என்னை நகரவிடாமல் செய்கின்றன. ஆனால் எனது அன்றாட வாழ்க்கையைப் பூர்த்தி செய்யும் மனிதர்களிடம் நான் திரும்ப வந்தே ஆக வேண்டும். எனது நிபுணத்துவம் சார்ந்து நான் சந்திக்கும் மனிதர்களின் பலவீனங்களைப் பற்றி, அவர்களின் கீழ்மைகள் பற்றி, அவர்களின் மாறிக்கொண்டிருக்கும் சுபாவங்களை பற்றி எந்த ஒரு பிரக்ஞையும் இல்லாமல், முன்முடிவுகளும் இல்லாமல் நான் எனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது அத்தனை சுலபமானதல்ல

மனிதர்கள் என்றாலே அவர்களின் இந்த அந்தரங்க பலவீனங்களும், எதிர்மறை உணர்வுகளும் தானா? என்ற கேள்விக்குஇல்லைஎன்பதே எனது பதிலாக இருக்கும். ஆனால் அந்தப் பண்புகளை எப்போதும் கண்களைத் திறந்தவைத்து பார்க்கக்கூடிய இடத்தில் நான் இருக்கிறேன் அதனாலேயே எனக்கு அதைப்பற்றி சிறிது தெளிவும் இருக்கிறது. மனிதர்களை அவர்களின் இந்த பண்புகளை மட்டும் வைத்துக்கொண்டு எடை போடுவது நியாயமானதல்ல ஆனால் அதைத்தான் அன்றாட வாழ்வில் நாம் செய்து கொண்டிருக்கிறோம். இயற்கையைப் புரிந்து கொள்வதில் இருக்கும் அதே போதாமைகள் தான் மனிதர்களை புரிந்துகொள்வதிலும் இருக்கிறது. மாறிக்கொண்டிருக்கும் புற, அக சூழல்களை கணக்கில் கொள்ளாமல் ஏதோ ஒரு சந்தர்ப்பவாத நிலையினை மட்டுமே வைத்துக்கொண்டு நாம் மனிதர்களை புரிந்து கொள்கிறோம், ஏனென்றால் அது தான் சுலபமானதாக இருக்கிறது அது தான் நமக்கு தேவையானதாகவும் இருக்கிறது

என்னைப் பொறுத்தவரையில் ஒரு மனிதனை முழுமையாகப் புரிந்துகொள்ளலுக்கு எதிரான மிகப்பெரிய தடை புரிந்துகொள்ள நினைக்கும் மனிதரின் மனநிலையே. ஆம். நாம் நமது மனநிலையை சார்ந்தே இன்னொருவரை புரிந்துகொள்கிறோம். இது எவ்வளவு பெரிய அநீதி? அந்தவகையில் குறைந்தபட்சம் ஒரு மனநல மருத்துவனாகவாவது நான் பிற மனிதர்களிடம் உள்ள இந்தப் போதாமைகளற்று முடிந்தவரை எந்த முன்முடிவுகளும் இல்லாமல் திறந்த மனதுடன் மனிதர்களைக் காண்கிறேன். அப்படி நான் பார்த்த மனிதர்களின் கதைகளின் வழியாக வாழ்க்கையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்கிறேன்

இந்த உலகத்தின் அத்தனை திசைகளில் இருக்கும் எல்லா மனிதர்களுக்கிடையேயும் ஒரு ஒற்றுமை இருக்கிறது என்றால் அது வாழ்தலின் நிமித்தம் அவர்களுக்குள்ளே இருக்கும் போராட்டமே. அன்றாட வாழ்வில் நாம் கொண்டிருக்கும் முரண்களுக்கிடையேயான விசையே பெரும் ஆற்றலாக நம்மை இயக்கிக்கொண்டிருக்கிறது. ஒரு உடைந்துபோன தருணத்தில்தான் நம்மை நம்மால் முழுமையாக உணர்ந்துகொள்ள முடியும். அப்படி நான் பார்த்த மனிதர்களின் வாழ்வில் நிகழ்ந்த சில தருணங்களின் வழியாக அந்த சூழலுக்கு பின்னால் உள்ள அவர்களின் பதட்டங்களை, அச்சங்களை, தீராத ஏக்கங்களை இந்த தொடரின் வழியாக உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அதே தருணங்கள் உங்களது வாழ்க்கையிலும்கூட எப்போதோ நடந்திருக்கலாம் அல்லது இனி நடக்க இருக்கலாம்.

அப்போது அந்த தருணங்கள் உங்களுக்கு ஏற்படுத்திய அல்லது ஏற்படுத்தபோகும் அனுபவங்கள் என்னவாக இருக்கிறது என்பதனை உங்களால் உணர முடியும். மனித மனதின் சிக்கலான முடிச்சுகள் அவிழும் அந்தத் தருணங்களில் வெளிப்படும் நமது கீழ்மைகளை மறைத்துக்கொள்ள அந்த அனுபவங்கள் பயன்படலாம் அதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இந்த உரையாடலை உங்களுடன் தொடங்குகிறேன். இந்த உரையாடல் எனக்கும் உங்களுக்குமானதல்ல, உங்களுக்கும் மற்றவர்களுக்குமானதல்ல, உங்களுக்கும் உங்களுக்குமானது, அகத்திற்கும், புறத்திற்குமானது. மனிதர்களைப்பற்றியான நமது புரிதல்களைச் செலுமைப்படுத்திக்கொள்ள அப்படி ஒரு உரையாடல் இங்கு தேவையானதாகத்தான் இருக்கிறது

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. உள்ளதை உள்ளபடி ஏற்க முடியுமா? - சிவபாலன் இளங்கோவன்
  2. ‘ஒற்றை சொல்’: உறவுகள் முறியும் தருணம் - சிவபாலன் இளங்கோவன்
  3. உடம்பார் அழியின்... - சிவபாலன் இளங்கோவன்
  4. அந்தியின் இருளில் நடப்பவர்கள்- டாக்டர் சிவபாலன் இளங்கோவன்