அங்கே என்ன சத்தம் -3
ஒரு பாய் பெஸ்டிக்கு வேண்டிய முதல் தகுதி பொறுமை. நிதானமாக நீண்ட நேரம் செவிமடுக்கும் திறன் வேண்டும். என்னால் குறுக்கிடாமல் மதிப்பிடாமல் பெண்கள் பேசுவதை கேட்டிருக்க முடியும் என்பதாலே பதின்வயதில் இருந்தே நான் ஒரு நல்ல பெஸ்டியாக பெண்களுக்கு இருந்திருக்கிறேன். என்னுடைய தனிமை நாட்டம் காரணமாய் நான் தொடர்ந்து எல்லாரிடமும் உறவைப் பேண முயன்றதில்லை என்பதால் நான் இந்த பெண்கள் பட்டியலை வளர விட்டதில்லை. இருந்தாலும் பாய் பெஸ்டிகள் சார்பில் பேசும் தகுதி எனக்கு உண்டென்றே நம்புகிறேன்.
பாய் பெஸ்டிகள் குறித்த மனுஷ்ய புத்திரனின் கவிதை “பாய் பெஸ்டிகளின் கதை” எனக்கு மிகவும் பிடித்திருந்தது (அவர் என் நண்பரால் மட்டும் அல்ல நான் இதை சொல்வது) – கவிதை சற்று அதிகம் நீண்டு விட்டிருந்தது என்றாலும் கச்சிதமாக முடித்திருந்தார். அதாவது பாய் பெஸ்டியாக இருப்பதன் அவலங்களை நகைமுரணுடன் சொல்லி வந்து விட்டு
“யாரும் பிறக்கும் போதே
பாய் பெஸ்டியாக பிறப்பதில்லை
விதி எங்கோ தடம் மாற்றி விடுகிறது
பசித்த மனிதர்களின் கையில்
ஒரு மலரைக் கொடுத்து அனுப்பி
வைக்கிறது”
என முத்தாய்ப்பாக முடிக்கும் போது பாய் பெஸ்டியின் நிலையை உலகில் உள்ள மொத்த மனிதர்களின் இருத்தலியல் அவலமாக மாற்றி விடுகிறார். இது பாய் பெஸ்டியின் கைவிடப்படலாக அல்லாமல் பசித்தவர்களுக்கு கையில் மலரைக் கொடுத்து அனுப்பின் கடவுள் மீதான ஒரு சாடலாக முடிகிறது; இந்த பசி அன்பின் பசியாக, வாய்ப்புகளுக்கான பசியாக, சமத்துவத்துக்கான பசியாக, கௌரவத்துக்கான பசியாக எப்படி வேண்டுமெனிலும் இருக்கலாம். ஒரு நல்ல கவிதையின் பண்பு என்பது அது பேசுபொருளை குறிப்பிட்ட சந்தர்பத்தில் இருந்து ஒரு பெரிய விசயத்துக்கான குறியீடாக உயர்த்தும் என்பது. தமிழின் பல உன்னத கவிதைகளில் நாம் இந்த பண்பைப் பார்க்க முடியும். பாய் பெஸ்டிகளின் அத்தனை பரிமாணங்களையும் அவர் இதில் கொண்டு வந்து விட்டாரா என்றால் இல்லை, ஆனால் அதற்கு அவசியமில்லை என்பேன் – அது கவிதையின் பணி அல்ல, கட்டுரையின் பணி.
இந்த கவிதை பெண்களில் சிலரை சங்கடப்படுத்துவதை நான் புரிந்து கொள்கிறேன் – இயல்பாகவே தம்முடன் நட்புறவில் இருக்கும் ஆண்களின் பொது இடத்தை இது அசைக்கிறது; சின்ன குற்றவுணர்வை பெண்களின் பால் தூண்டுகிறது. குற்றவுணர்வு மிகும் போது அவர்கள் இக்கவிதையை சாடுகிறார்கள்.
பெண்கள் எதிர்பாலினத்தவரின் அங்கீகாரத்தை நாடுவது இயற்கை, அதே வேளையில் பாலுணர்வற்ற பரிசுத்தமான ஆண் நட்பையும் விழைகிறார்கள் – பாய் பெஸ்டிகள் இந்த இரண்டுக்கும் இடையிலான ஒரு வெளியில் வசிக்கிறார்கள். அப்படித் தான் பாய் பெஸ்டிகளே தோன்றுகிறார்கள். அவர்களால் வெறும் நண்பனாக மட்டுமே எப்போதும் இருக்க இயலாது; அப்போது ஒரு பெண்ணை ‘ஆணாக’ நடத்தும் சங்கடம் ஒரு ஆணுக்கு நேரும். “அலை பாயுதே” படத்தில் மாதவனின் குழுவில் இருக்கும் அந்த ஒல்லியான பெண்ணைப் பற்றி சொல்லும் போது “அவ பாதி ஆம்பளை மாதிரி” என மாதவன் குறிப்பிடுவாரே அப்படி சில ஆண்கள் “பாதி பொம்பளை மாதிரி” பெண்களிடத்து இருப்பதுண்டு. இது முழுமையான ஒரு பெஸ்டியின் இயல்பு அல்ல. அந்த வகையான பெஸ்டி உறவும் இங்கு உண்டு எனிலும் பெரும்பாலான பெண்களுக்கு தம் பாய் பெஸ்டிகள் ஆண்களாக இருந்து தம்மை சற்று ‘உயர்வு நவிற்சியுடன்’ நடத்துவதையும் விரும்புகிறார்கள் என்பது உண்மை தான்.
இறுதியாக ஒரு பாய் பெஸ்டியாக வாழ்வதன் சிக்கல்களை ஒரு ஆணின் பார்வையில் இருந்தும் பேச விரும்புகிறேன் – ஒரு பாய் பெஸ்டி தன் தோழியின் காதலனோ கணவனோ பால் சற்றே பொறாமை கொள்ளலாம். அதே நேரம் அவள் தன் காதலன் / கணவனை விட்டுப் பிரியக் கூடாது என ஒரு சகோதரனைப் போல பிரார்த்திக்கவும் செய்வான். இது பாலியல் சார்ந்த சிக்கல் அல்ல – மாறாக பாலியலின் இறுக்கத்தில் இருந்து, நிர்பந்தங்கள், நிபந்தனைகளில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக இருப்பதற்கான விருப்பம் ஒரு ஆணுக்குள் உண்டு. அப்போது ஒரு பாய் பெஸ்டியாக அவன் மாறுகிறான். தன்னுடைய இந்த ‘பதவிக்கு’ ஆபத்து வருவதை அவன் சற்று அச்சத்துடனே எதிர்கொள்கிறான். அவனுடைய இந்த நெருக்கடி ஒரு சாதாரண தோழனுக்கோ சகோதரனுக்கோ நேர்வது அல்ல. இது ஒரு தனித்துவமான நெருக்கடி.
ஒரு ஆணுடல் இயல்பாகவே பெண்ணை அடையும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது – அந்த பெண்ணுடல் யார், எந்த சமூக நிலையில், குடும்ப உறவில் இருக்கிறது என்றெல்லாம் அந்த ஆணுடல் கவலைப்படாது. ஆகையால் ஒரு பாய் பெஸ்டி தன் தோழி மீது சஞ்சலம் கொள்ளும் தருணமும் ஏற்படலாம் தான். ஆனால் அதை மீறிச் செல்லவே அவன் விரும்புவான். இதை பிராயிட் சொன்னதைப் போல பாலுணர்வு அடக்கப்படுதல், அதில் இருந்து அடக்கப்பட்ட உணர்வை உன்னதமாக்கல் (repression – sublimation) என நான் பார்க்க விரும்பவில்லை. மாறாக லக்கான் சொல்வதைப் போல நவீன வாழ்வை செக்ஸ் விழைவுகளைக் கடந்து (மறுத்து அல்ல) முடிவிலி ஒன்றை நோக்கிய நாட்டமாகவே பார்க்க விரும்புகிறேன். பாய் பெஸ்டியாக வாழ்வது இந்த நாட்டங்களில் ஒன்று.
நவீன மனிதன் தனக்கு விதிக்கப்பட்ட பாலியல் இச்சையைக் கடந்து கட்டற்ற அனுபவங்களை உறவுகள் வழி நாடுகிறான். நவீன மனிதனின் பெரிய சாதனையே உடல் இச்சையை மொழி மீதான, பண்பாட்டு வடிவங்கள் மீதான, சந்தையில் கிடைக்கும் பண்டங்கள் மீதான, அரசியல் சமூக கருத்தியல் உரையாடல்கள் மீதான, சமூகமாக்கல் மீதான இச்சையாக உருமாற்றியதே. உடல் சுகத்தை விட இது நீடித்த மேலான அனுபவமாக இருப்பதை அவன் உணர்ந்து கொண்டான். பாலியல் நாட்டம் ஏற்படுத்தும் நெருக்கடிகள் தரும் பயங்களும் மூர்க்கமும் அவனுடைய உலகை மீண்டும் மீண்டும் ஒரு சின்ன சதுரத்துக்குள் அடக்கி விடுகிறது. அசல் ஜெஸ்ஸியை விட ஜெஸ்ஸி குறித்து ரஹ்மான் உருவாக்கிய இசை, கௌதம் மேனனின் காட்சிகள், த்ரிஷாவின் நளினமான தோற்றமும் தவிப்பான கண்களும் கட்டற்றவை. இதை நடைமுறையில் துல்லியமாக உணர்ந்தவர்கள் பாய்பெஸ்டிகளே.
ஆண்களுக்கு பாய் பெஸ்டி உறவில் உள்ள பயன் அவன் காதலனாக, கணவனாக இருக்க வேண்டியதில்லை, சுதந்திரமாக ஒரு பெண்ணுடன் உறவாடலாம் என்பதே. ஒரு அசலான பாய் பெஸ்டி தனக்கு ஒரு தகுந்த சந்தர்ப்பமும் வாய்ப்பும் அமைந்தால் கூட தன் தோழியுடன் படுக்கையை பகிர மாட்டான். ஆனால் இதில் விதிவிலக்குகளும் உண்டு என்பதே இந்த உறவை சிக்கலாக சுவாரஸ்யமாக மாற்றுகிறது.
முந்தைய தொடர்கள்:
2.தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர்https://bit.ly/2Qsg1jn
1.யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன்https://bit.ly/33AmePx
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- காதலர்களுக்கு பத்து பரிந்துரைகள்- ஆர். அபிலாஷ்
- எனது நண்பன் எனது நண்பன் அல்ல- ஆர். அபிலாஷ்
- ஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்?- ஆர். அபிலாஷ்
- நிழல் நிஜமாகிறது - ஆர்.அபிலாஷ்
- சத்யன் அந்திக்காடு: தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர் - ஆர். அபிலாஷ்
- யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன் - ஆர்.அபிலாஷ்