5. அங்கே என்ன சத்தம்

எனக்கு ஒரு நீண்ட கால நண்பர் இருக்கிறார். அவருடன் தற்காலிக நட்பைப் பேணினவர்கள், அற்ப நோக்கிற்காக உறவை முறித்தவர்கள், அடிக்கடி என் வாசல் கதவைத் தட்டி நண்பருடனான நட்பைக் கேள்வி கேட்பார்கள், அவரைப்பற்றி தவறாகப் பேசுவார்கள், அவர் என்னைப் பற்றி தவறாகப் பேசியதாக போட்டுக் கொடுப்பார்கள். அவர்களுடைய நோக்கம் ஒன்றே ஒன்றுதான்: நண்பரிடம் இருந்து என்னைப் பிரிப்பது. இவர்கள் தம் உறவை முறித்தபின் ஏன் என்னுடய நட்பை கலைக்க இவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என நான் மண்டயைப் போட்டுக் குழப்புவேன்.

நட்புக்கும் நட்பு முறிவுக்கும் உள்ள அடிப்படையான வித்தியாசம் எனக்குப் புலப்பட்டது அப்போதுதான் – ஒருவருடன் இணக்கமான நட்பில் இருக்கும்போது அவரைப்பற்றி நாம் பிறரிடம் அதிகம் பேச முனைவதில்லை; அது வெகு அந்தரங்கமாக, கிட்டத்தட்ட காதலைப்போல, பிரகடம் செய்யாமலே மதிப்புமிக்கதாக இருக்கிறது. ஆனால் விரோதம் எப்போதுமே பிரகடனம் செய்ய ஒருவரைத் தூண்டுகிறது – தான் ஏமாற்றப்பட்டத்தை, கைவிடப்பட்டதை, தனக்கு அநீதி இழைக்கப்பட்டதை திரும்பத் திரும்ப அவர் ஒலிபெருக்கியில் அறிவிக்கிறார். ஒரே உறவு இனிக்கையில் அந்தரங்கமாகவும் கசக்கையில் பகிங்கரமாவதும் ஏன்? கசந்த பின் ஏன் தன் முன்னாள் நண்பனின் நண்பர்களைப் பிரித்து நண்பனின் விரோதியாகவும் தன் நண்பனாகவும் ஏன் மாற்ற விழைகிறோம்? நட்பில் தேவைப்படாத அணிசேர்க்கை விரோதத்தில் ஏன் தேவையாகிறது? விரோதம் ஏற்பட்ட பின்னர் ஒருவர் தனியாக உணர்கிறார் என்பது பதில் எனில் அவர் நட்பில் இருக்கையில் தனிமை ஏற்படவில்லையா? தனிமை என்பது ஒருவர் ஆட்கள் மத்தியில் இல்லாமல் இருப்பதா அல்லது தனியாக உணர்வதா? நட்பு முறிகையில் ஒருவர் தனியாக உணர்கிறார் எனில் நட்பில் இருக்கையில் அவர் அப்படி உணர்வதில்லையா? அப்படி உணராதபடிக்கு நட்பு செய்கிற மாயம் என்ன?

இன்னொரு பக்கம், முன்னாள் நண்பர்கள் விரோதம் பாராட்டுகையில் கடுமையான குரோதங்களுக்கு நடுவிலும் தம் ஆரம்பகால நட்பின் தடயங்களைக் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம். உ.தா., ஒரு படைப்பாளியை அவரது முன்னாள் எழுத்தாள நண்பர் சாடுகிறார் என்றால் “அவர் ஒரு காலத்தில் தமிழின் முதன்மையான படைப்பாளி, ஆனால் இப்போது சீரழிந்து விட்டார்” எனக் கோருவது வழமை. ஏன் அந்த முன்பகுதி வாக்கியத்தில் பாராட்டு ஒளிந்திருக்கிறது? ஏன் அவர் ஒரு மட்டமான படைப்பாளி என நேரடியாக ஒரேயடியாக சபித்து மண்ணையிட்டு மூட முடியவில்லை? ஏனெனில் அது ஒரு மதிப்பீடு அல்ல, அது தன் நட்பின்மீது அவர் எழுதும் இரங்கல் சேதி. அவர் ஒரு காலத்தில் என் நண்பராக இருந்தார் என்பதையே “அவர் ஒரு காலத்தில் தமிழின் முதன்மையான படைப்பாளி” என இவர் மறைமுகமாய் சொல்கிறார். அந்த முன்கூறல் இன்றி தன் வெறுப்பை வெளிப்படுத்த முடியாத அளவுக்கு எப்படி நட்பு ஒரு பிரத்யேக நிறத்தை அவரது விரோதத்துக்கு அளிக்கிறது?

இந்தக் கேள்விகளை நாம் ‘நண்பன் ஒருவன் உங்களுக்கு விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்?’ என சுருக்கலாம். இதற்கு விடை காண நாம் மற்றொரு அடிப்படை கேள்வியை எழுப்ப வேண்டும்.

‘நட்பு என்றால் என்ன ?’ இதன் பிறகு ஒவ்வொரு துணைக்கேள்வியாக விடை காண முயலலாம். முதலில் வள்ளுவப் பெருந்தகை நட்பை எப்படி விளக்குகிறார் எனப் பார்ப்போம்.

‘உடுக்கை இழந்தவன் கைபோல’ என ஆரம்பிக்கும் குறளில் வள்ளுவர் நட்பின் அடிப்படையான இயல்பு குறித்து ஒரு அழகிய உவமை தருகிறார் – என் வேட்டி அவிழும்போது என் கை உடனே அதைப் பிடித்து திரும்பக் கட்ட முயலும். எந்தளவுக்கு கை அப்போது உடனே செயல்படும் என்றால் அவிழ்வதும் அதைப் பிடிப்பதும் ஒரே சமயத்தில் நிகழும். நட்புறவில் ஒருவன் அடுத்தவனின் துயரத்தைப் போக்குவது இப்படியான நிகழ்வுக்கும் அதன் துணை நிகழ்வுக்கும் கால இடைவெளியே இல்லாத வகையில் இருக்க வேண்டும். கிட்டத்தட்ட சிந்திக்கவே நேரம் கொடுக்காமல்.

நான் வருத்தத்தில் இருக்கையில் என்னை நோக்கி வரும் என் நண்பனிடம் நான் என் துயரத்தைப் பகிர்ந்துகொள்ள எண்ணலாம், அல்லது அவனிடம் சொல்ல வேண்டுமா வேண்டாமா என குழப்பத்தில் ஆழலாம். அல்லது அதைப் பகிர நினைத்து பின்னர் முடிவை மாற்றலாம். அல்லது நண்பனைப் பார்த்ததும் அவன் பேச ஆரம்பிக்கிற ஒரு விசயம் எனது அந்தரங்க விசயத்துக்கு தொடர்பற்றதாக இருப்பதால் உரையாடலின் தொனியே மாறிவிடும், ஆகையால் நான் சொல்ல நினைத்ததை சொல்லாமலே போய்விடலாம். ஆனால் ஒன்று, நண்பன் வந்ததும் எனக்கு ஆறுதல் கிடைக்கிறது, துயரத்தை மறந்து இன்பத்தில் திளைக்கிறேன்,

கண்ணீர் அரும்பிய கண்களில் சிரிப்பு வழிகிறது, உள்ளுக்குள் விம்மிக்கொண்டிருக்க வெளியே சிரித்து தளும்பிக் கொண்டிருக்கிறேன். அவன் போனதும் மீண்டும் என் மனம் வாடுகிறது; சோர்ந்து போகிறேன். மழையில் உயிர்பெற்று எழுந்துகொள்ளும் ஒரு சிறு தாவரத்தைப் போல நண்பன் வந்ததும் நான் உயிர்கொள்கிறேன். என் நண்பனின் துணை மற்றும் அவனது இருப்பு நினைக்காத வேகத்தில் என் துயரத்தைத் துடைத்து நீக்குகிறது.

இது தற்காலிகமானதா என்றால் ஆம் தற்காலிகமானதே. வள்ளுவன் அதனாலே “இடுக்கண் களைவதாம் நட்பு” என்று சொல்லிவிட்டு அதை ஒரு புண்ணுக்கு இடப்படும் மருந்துடன் ஒப்பிடுவதில்லை என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். துணி நழுவிடுகையில் நம் அம்மணமே அங்கு ‘இடுக்கண்’. அம்மணம் என்றும் இருப்பது. துக்கம் என்பதும்கூட நிதமும் இருப்பதே. அது ஒரு நிரந்தர மானுட நிலை (human condition).

பற்றில்லாமல் இருக்கும் ஒருவர் தனது துக்கத்தைப் பற்றிக் கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் யாராலும் துக்கத்தை அழிக்க முடியாது (இந்த குறளினுள் இருக்கும் பௌத்த தாக்கத்தை கவனியுங்கள்). இந்த ‘தற்காலிகம்’ குறளின் இந்த உவமைக்குள்ளே மறைந்திருக்கிறது – அந்த கணம் ஆடை அவிழாமல் அவன் பற்றிக் கொள்கிறானே ஒழிய அவன் நிரந்தரமாய் இடுப்பில் ஒரு பெல்டாய் இருந்து உத்தரவாதம் தருவதில்லை.

இங்கு மற்றொரு கேள்வி வருகிறது – இயல்பு நிலையில் நமது ‘உடுக்கை’ அவிழ்வதில்லை. எப்போதெல்லாம் அவிழும்? தன்னை மறந்து ஒருவன் விளையாடும் போதோ கள்ளுண்டு அதிக போதையில் இருக்கும் போதோ அது நடக்கும். சமநிலையை ஒருவன் இழக்கும்போது அது துக்கத்தை (இடுக்கையை) கொண்டு வருகிறது. அப்போது நண்பன் அங்கு தோன்றி சமநிலையை மீட்டளிக்கிறான். எப்படி?

அவன் உங்கள் கையாக மாறுகிறான். அவன் உங்கள் உடம்பின் ஒரு உறுப்பாகிறான். அவன் உங்கள் உடல் அளவுக்கு உங்கள் இருப்பின் நீட்சியாகிறான். அவன் நீங்களாகிறான். இங்கு சமநிலை இழப்பைப் பிரக்ஞையில் நிகழும் சமநிலையின்மையாக நாம் பார்ப்போமெனில் கள்ளுண்ட நிலையும் ஒரு உருவகம் என்பதை அறிவோம். நீங்கள் ‘தான’ எனும், ‘சுயம்’ எனும் கள்ளை மிதமிஞ்சி உண்டு தடுமாறுகிறீர்கள், அப்போது நண்பன் அங்கு தோன்றி உங்களிடத்தை எடுத்துக்கொள்கிறான்,

நீங்கள் நண்பனின் முகத்தை எடுத்து அணிகிறீர்கள். நீங்கள் அவன் வழி உங்களிடத்தும், அவன் உங்கள் வழி அவனிடத்து பேச வாய்ப்பு அமைகிறது. அவன் கண்களின் ஊடாக உங்கள் முகத்தை நோக்குகிறீர்கள், அவன் உங்கள் கண்கள் வழி தன்னையே நோக்கிக் கொள்கிறான். அப்போது அவன் சற்று நேரம் அவன் அல்லாமல் ஆகிறான், நீங்கள் சற்று நேரம் நீங்கள் அல்லாமல் ஆகிறீர்கள். சுயத்தின் / அகங்காரத்தின் போதை குறைந்து நிதானமாகிறீர்கள். பிறகு தத்தமது முகங்களை அணிந்து விடைபெறுகிறீர்கள்.

கிட்டத்தட்ட இதே கோணத்தில் நட்பை நோக்கியவர் என பிரஞ்சு தத்துவவியலாளர் ழாக் தெரிதாவைச் சொல்லலாம். அதைப் பற்றி அடுத்த பத்தியில் நாம் காணலாம்.

முந்தைய தொடர்கள்:

4.நிழல் நிஜமாகிறதுhttps://bit.ly/3a3P9xM

3.பாய் பெஸ்டிகளின் தர்மசங்கடம்https://bit.ly/2QuC09r

2.தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர்https://bit.ly/2Qsg1jn

1.யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன்https://bit.ly/33AmePx

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. திரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்
 2. கிளைமேக்ஸை எப்படி அமைக்க வேண்டும்? - மணிரத்னத்திலிருந்து மிஷ்கின் வரை - ஆர். அபிலாஷ்
 3. ’காட்ஃபாதரி’லிருந்து ’தேவர் மகன்’ மற்றும் ’நாயகன்’: கமல் எனும் மேதை - ஆர். அபிலாஷ் (பெங்களூர்)
 4. கொரோனோ பயங்கரமும் பா.ஜ.க அரசின் கார்பரேட் பயங்கரவாதமும் - ஆர். அபிலாஷ் 
 5. முராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது?- ஆர். அபிலாஷ்
 6. காட்ஃபாதர் முதல் முள்ளும் மலரும் வரை: கதைக்குள் இருக்கும் கதை- ஆர். அபிலாஷ்
 7. சினிமாவில் போதனை இருக்கலாமா?- ஆர். அபிலாஷ்
 8. பொறுப்பைத் துறக்கிற அவலமான அரசியல் - ஆர். அபிலாஷ்
 9. ‘அலைபாயுதே’ - திரைக்கதை நுணுக்கங்கள் - ஆர். அபிலாஷ்
 10. தனிமையின் காதலே நட்பு- ஆர். அபிலாஷ்
 11. ஏன் சமத்துவம் இதயங்களைக் கல்லாக்குகிறது?- ஆர். அபிலாஷ்
 12. பாய் பெஸ்டியும் கவிதைக்குள் நிகழும் விமர்சன வன்முறையும்- ஆர். அபிலாஷ்
 13. அஞ்சலிக் கட்டுரையில் வாழும் நண்பன்- ஆர். அபிலாஷ்
 14. காதலர்களுக்கு பத்து பரிந்துரைகள்- ஆர். அபிலாஷ்
 15. எனது நண்பன் எனது நண்பன் அல்ல- ஆர். அபிலாஷ்
 16. நிழல் நிஜமாகிறது - ஆர்.அபிலாஷ்
 17. சத்யன் அந்திக்காடு: தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர் - ஆர். அபிலாஷ்
 18. யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன் - ஆர்.அபிலாஷ்