வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வங்கதேச வீரர்கள் தங்களை சிறப்பாக வெளிப்படுத்திக் கொள்வது உலக கோப்பை வரலாற்றில் அவ்வப்போது நிகழ்வந்தவண்ணம் உள்ளது. அதேபோல் நேற்றைய போட்டியில் வங்கதேச அணி ஒரு வலுவான இலக்கை மிக சுலபமாக எட்டி கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் உலகக்கோப்பை அரங்கில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக துரத்திய ஆசிய அணி என்ற வரலாறு படைத்தது.
உலகக்கோப்பை தொடரின் 23வது போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வங்கதேசம் அணி மோதியது. இப்போட்டியில் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹாசன் சதம் விளாசினார், ஒரு மாபெரும் இலக்கை எளிதாக எட்டி இறுதியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் ‘பேட்டிங்’ செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எவின் லீவிஸ் (70), ஹோப் (96), ஹேட்மேயர் (50) ஆகியோர் அரைசதம் அடித்து கைகொடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள் தமீம் இக்பால் (48), சவுமியா சர்கார் (29) நல்ல துவக்கம் அளித்தனர். அடுத்து வந்த முஸ்புகுர் ரஹீம் (1) நிலைக்கவில்லை. பின் ஷாகிப் உடன் இணைந்த லிடன் தாஸ் மிகப்பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வங்கதேச அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். இதன்மூலம் வங்கதேச அணி 41.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.