இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான உலகக் கோப்பை ஒருநாள் போட்டி நேற்று(16.06.2019) மான்செஸ்டரில் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல், ரோகித் சர்மா மற்றும் கோலியின் சிறந்த பேட்டிங்கால் இந்திய அணி 336 ரன்கள் எடுத்தது. பின்பு களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் மடமடவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மேலும் மழையின் காரணமாக நிர்ணியிக்கப்பட்ட 40 ஓவர்களில் 212 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
இந்த தோல்வி பற்றி கருத்துக் கூறியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர், “இந்தப் போட்டியில் டாஸ் வென்றது முக்கியமான விஷயம். அது அதை வென்றதும் பந்துவீச்சை தேர்வு செய்தது, மூளையில்லாத கேப்டன்சியைதான் காட்டியது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 260-280 ரன்கள் எடுத்திருந்தாலும் சேஸிங் செய்யும்போது அது இந்தியாவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்திருக்கும். பாகிஸ்தான் வெல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சும் சரியில்லை. ஹசன் அலி சரியாக வீசவில்லை. வாஹா எல்லையில் போய் சல்யூட் அடிக்கத் தெரிகிறது. (கடந்த 2018 ஆம் ஆண்டு வாஹா எல்லையில், இந்திய பாதுகாப்பு வீரர்களை அவமதிக்கும் வகையில் ஹசன் அலி நடந்துகொண்டார். இது சர்ச்சையானது) இங்கு திறமையை காண்பிக்க வேண்டியதுதானே? முகமது ஆமீர் முக்கியமான கட்டத்தில் விக்கெட் எடுக்கத் தவறிவிட்டார். மூத்த வீரர்கள் இந்தப் போட்டியில் சரியாக விளையாடவில்லை; என்று அனைத்து வீரர்களையும் விமர்சித்துள்ளார்.