அசைவறு மதி 18

அசைவறுமதியின் 17ம் பாகத்தில் நாம் என்ன வேலை செய்கிறோம் எப்படி வேலை செய்கிறோம் என்று அறிவியல் சூத்திரப்படி ஒப்பீடு செய்திருந்தேன். ஒரு விசயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றால் அங்கு வேலை நடைபெறவில்லை என்று அறிவியல் சூத்திரம் ஒன்றைக் கூறி அதன் மூலம் நிறுவியிருந்தேன்.  பல எதார்த்தச் சம்பவங்களை அந்த அறிவியல் விதியில் அமர்த்தி ஒப்பிட்டுக் கூறுகையில் பல நண்பர்கள் கொதித்துவிட்டார்கள். உரையாடலை நிகழ்த்தினார்கள். நிகழ்த்திக்கொண்டும் இருக்கிறார்கள். ஒரு நண்பர் , “இது கம்யூனிஷ சிந்தனையில் பார்த்தால் , இது ஒரு முதலாளித்துவச் சிந்தனை” என்று கூறியிருந்தார். பல விமர்சனங்கள். பல ஆலோசனைகள். ஒரு கட்டுரை படித்துவிட்டு அப்படியே கலைந்து போவதற்கும், அந்தக் கட்டுரை எதையாவது கிளப்பிவிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது தானே. நண்பர்கள் பலர் இந்தத் தொடரை உயிர்ப்புடன் அணுகுகிறார்கள்.

நிகழ்ந்த உரையாடல்களின் சாரத்தில் சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

ஒரு மாணவன் ஒரு பரீட்சைக்குப் படிக்கிறான். அவன் தேர்வில் தேர்ச்சிபெறவில்லை. இப்பொழுது அவன் படிக்கவே இல்லை என்று எப்படி கூறுவது. அவன் தேர்ச்சி அடையும் அளவிற்குச் சரியாகப் படிக்கவில்லை என்று தானே சொல்லவேண்டும் என்று ஒருவர் கூறினார்.

ஒரு விசையும் அது சார்ந்த இடப்பெயர்வும் நிகழ்ந்தால் தான் அது வேலைத்திறன் என அறிவியல் சொல்கிறது. ஒரு விசை இல்லாவிட்டால் அல்லது இடப்பெயர்வு இல்லாவிட்டால் அங்கு வேலை நடக்கவில்லை என ‘அசைவறுமதி’ சொல்லவில்லை. அறிவியல் சொல்கிறது. அந்தச் சூத்திரத்தில் வாழ்வியல் முறைகளைப் பொருத்திப்பாருங்கள் என்று சொல்வது அறிவியல் அல்ல. நமது அனைவருடைய அசைவறு மதியும்தான்.

ஒரு மாணவன் படித்துத் தேர்வில் தோல்வியுற்று மூன்று வருடங்கள் கழித்து அந்த மாணவனைச் சூழ்ந்திருக்கும் சமூகம் , பாவம் பையன் நன்றாகத்தான் படித்தான் , ஆனால் தேர்ச்சி தான் அடையவில்லை என்று மயில்தோகையால் வருடிக்கொடுத்து சொல்லப்போவதில்லை. நாம் எதார்த்தத்தில் என்னென்னச் சந்திக்கிறோமோ அதைத்தான் பார்க்கவேண்டும்.

ஒரு மன நல ஆலோசகர், இப்படி ஒட்டுமொத்தமாக வேலையே நடக்கவில்லை என்றால் தோல்வியுற்றவர்களுக்குத்  தாழ்வுமனப்பான்மை வந்துவிடாதா என்றார். ஒரு நிகழ்வு நடக்கிறது, அதன் பின்விளைவுகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அந்த நிகழ்வைச் சரியாக நடத்தவேண்டும் என்பதே இலக்கு.

ஓர் இலக்கு வைத்திருக்கிறீர்கள். அதை நிறைவேற்றினீர்களா என்பது தான் கேள்வியாகிறது. போகும் வழியில் வரும் தடைகளைப் பற்றிப் பேசுதல் அல்லது இடையில் தேங்கி நிற்பது எல்லாம் தீர்வாய் இருப்பதில்லை.

பொதுவாய், நாம் ஒரு விசயத்தில் வென்று காட்டுகிறோம் என்றால் அதற்குக் காரணம் நாம் தேடுவதே இல்லை. ஆனால் தோற்றுப்போனால் தான் ஆயிரம் காரணங்கள்  தேடுவோம்.

கடந்த வருடத்தில் கிரிக்கெட் உலக கோப்பை யார் வென்றது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்லிவிடுவோம். அது தான் வரலாறாகி நிற்கும். செமி ஃபைனலில் யார் யார் மோதினார்கள், யார் ரன்னராக வந்தார்கள் என்றால் அது வரலாற்றில் நிற்பதில்லை. இலக்கு என்பது உலக கோப்பை, அதில் திறமையைக் காட்டி வென்ற அணியே வெளியில் தெரியும். இன்னொரு அணியும் போராடினார்கள், அவர்களும் நன்றாகத்தான் விளையாடினார்கள், அன்று மழை பெய்தது, வெயில் அடித்தது, குறுக்கே ஒரு நாய் ஓடியது., மேலே ஒரு புறா பறந்தது ஆதலால் அவர்களால் வெல்ல முடியவில்லை. இப்படியானக் காரணங்களை வரலாறு கேட்பதில்லை. பதிவதும் இல்லை.

உங்களிடம் ஒரே கேள்வி, நீங்கள் ஜெயித்தீர்களா, இது தான்.

பள்ளி முடிக்கிறீர்கள், அடுத்து என்ன  என்று கேட்பார்கள்

கல்லூரி முடிப்பீர்கள், அடுத்து என்ன  என்பார்கள்,

வேலைக்குச் செல்வீர்கள், ஊன்றிவிட்டாயா என்று பார்ப்பார்கள். நீங்கள் ஒவ்வொரு விசயத்திலும் காணும் வெற்றியை அடிப்படையாக வைத்தே இந்தச் சமுகம் உங்களுக்கு மதிப்பெண் கொடுத்து அதற்கேற்றபடி உங்களுக்கான இடத்தைத் தரும்.

பள்ளி முடிக்கவில்லை என்றால், சமூகம் அதே கேள்வியைத்தான் கேட்கும். அடுத்து என்ன?

கல்லூரிக்குச் செல்லவில்லை, அப்பொழுதும் அடுத்து என்ன என்று கேட்பார்கள். இது எல்லாம் வாய்ப்பு.

உங்களால், கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் ஜொலிக்கமுடியவில்லை என்றால் மறுபடியும் மறுபடியும் வாழ்க்கை வாய்ப்புகளை வழங்குவதில்லை.உங்களுக்கான வாய்ப்பு முடிந்தாகிவிடும். தோற்பவர்களுக்கு இந்தச் சமுகம் காட்டும் எதிர்வினைகள் கொடூரமானவை.

நீங்கள் ஜெயித்தால் மட்டுமே பேசப்படுவீர்கள், இங்கு ஓடுபவர்களின் உலகம் தான் இருக்கிறது. ஓடுபவர்கள் மட்டும் தான் பேசப்படுகிறார்கள். ஓடுபவர்களுக்கு நடுவில் நடப்பவர்களையும் உருளுபவர்களையும் இந்த உலகம் கண்டுகொள்வதே இல்லை.

இந்த உலகம் ஓர் ஓட்டப்பந்தயம் வைத்துத்தான் பார்க்கிறது.

நீங்கள் பந்தயத்தில் உயிர்ப்புடன் இருக்கவேண்டுமானால் உங்களுக்குள் விசை செயல்படவேண்டும், எந்த ஒரு விசயத்திலும் ஓர் இடப்பெயர்வு நடந்திருக்கவேண்டும். ஒட்டுமொத்தமாக வேலை நடந்திருக்கவேண்டும். நீங்கள் நிகழ்த்தியிருக்கவேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால், ஆம், நீங்கள் செயல்படவில்லை என்று தான் அர்த்தம்.

எனக்கு விற்பனைத்துறையில் பிரதிநிதியாக இருக்கும்பொழுது பலதரப்பட்ட மேலாளர்களைப் பார்த்திருக்கிறேன். மூன்று மாதங்களாக ஒரு மருத்துவரைப் பார்க்கிறோம். எங்கள் மருந்தை நோயாளிகளுக்கு ப் பரிந்துரைக்கும்படி தொழில்ரீதியானச் சந்திப்புகளை மேற்கொள்கிறோம். ஆனால் அவர் எங்களுக்கு எங்கள் மருந்தை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கவே இல்லை. கம்பெனியில் மாதாந்திர விற்பனை கூட்டம்(monthly sales meeting) நடந்தது. கூட்டத்தின் நடுவே , ஏன் அந்த மருத்துவரைப் பார்ப்பது இல்லை என்று எடுத்த எடுப்பில் அந்த மேலாளர் கேட்டார்.

பார்க்கிறேன் சார் , என்றேன்.

பிறகு ஏன் ஆர்டர் வரவில்லை என்றார்,

டாக்டரைப் பார்க்கிறேன். ஆனால் அவர் எழுதவில்லை என்றேன்.

அதான் ஏன் என்றார்.

இந்தக் கேள்விக்கு எந்த விற்பனை பிரதிநிதியாலும் பதில் சொல்லமுடியாது. ஆனால் அது தான் அழுத்தம் தரும் முறை என கார்ப்பரேட் கம்பெனிகள் அழுத்தங்களைத் தரும். அதன் உச்சக்கட்டம் அங்கு ஆர்டர் வந்தால் நாம் வேலைசெய்தோம் என்று அர்த்தம். அங்கு ஆர்டர் வராவிட்டால், நாம் வேலைசெய்யவில்லை என்று அர்த்தம். இப்படித்தான் அந்தத்தொணியில் கூட்டம் நிகழ்ந்தது. கூட்டம் முடிந்து தேநீர் சாப்பிடும் வேளையில் தனிப்பட்ட முறையில் அந்த மேலாளரிடம் , அதெப்படி சார், வேலைக்குப்போகவில்லை என்று சொல்கிறீர்கள் எனக் கேட்டேன்.

அவர் சொன்னது தான் ட்விஸ்ட்.

நான் ஏற்கனவே பார்க்கும் இரு மருத்துவர்களைப் பற்றி உரையாடலைத் துவக்கினார்.

“அவர்களைப் பார்க்கிறாய் தானே,?”

“ஆமா சார். சப்போர்ட் பண்றாங்க, “என்றேன்.

“அவர்கள் எப்படி சப்போர்ட் பண்றாங்க “எனக் கேட்டார்.

“நான் பாக்குறேன். எழுதுறாங்க சார் “என்றேன்.

பிறகு எழுதாத டாக்டர் பெயரைச் சொல்லி, இவர் எழுதாதற்கு நீ சரியாய் பார்க்கவில்லையா என்றார்.

“ஒரு வாடிக்கையாளர் நமக்கு நம் விற்பனையை ஆதரிப்பதும் ஆதரிக்காததும் அவரவர் மனநிலையைப் பொறுத்தது. இதில் எப்படி ஆதரிக்காததற்குக் காரணத்தைச் சொல்லமுடியும் “என்றேன்.

“உனக்கு சப்போர்ட் செய்யும் மருத்துவர்களின் மனநிலையை நீ கையகப்படுத்தும்பொழுது சப்போர்ட் செய்யாத மருத்துவர்களின் மனநிலையை நீ சரியாய் கையகப்படுத்தவில்லை என்று தானே அர்த்தம்” என்றார்.

என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை, அவர் தொடர்ந்தார்.

பழனிக்குமார், நீ ஒரு வெற்றி பெறுகிறாய் என்றால், எப்படி வெற்றி பெற்றாய் என இந்தச் சமுகம் கேள்வி கேட்காது, நீ தோல்வி அடைந்தால், பல கேள்விகளை உன் முன் கொடுக்கும். நீ வெற்றி பெறும் பொழுது உன் மேலதிகாரிகள் கண்களை மூடிக்கொள்வார்கள், நீ எப்படி எல்லாம் வெற்றி பெற திட்டம் போடுகிறாய் நேர்வழி, குறுக்குவழி எதையும் பார்க்கமாட்டார்கள், ஆனால் நீ தோற்றுப்போய் நின்றால், உன் முன் பல சவால்களைத் தருவார்கள்.

இந்த உலகம், எப்பொழுதும் நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கைப் பார்க்கும் மனிதர்களை மதிப்பதே இல்லை.

நிகழ்வுகளை நிகழ்த்தும் மனிதர்களைத்தான் எந்த நிர்வாகமும் விரும்பும், வாழ்க்கையின் சூத்திரமும் அது தான் . ( we dont want people to see things happen, we want people to make things happen) என்றார்.

ஒரு முழு கிணறையும் தாண்டவேண்டும் என்றால் தாண்டித்தான் ஆகவேண்டும். பாதி தாண்டிவிட்டு பாதி வரை தாண்டியதற்குப் பாராட்டுப்பத்திரம் கொடு என்றால் இந்தச் சமூகம் உங்களை எள்ளி நகையாடும்.

சுருங்கச்சொன்னால், “நீங்க நம்பலாட்டியும் நெசம் அது தான்”