கரையாத நிழல்கள் – 4

பெரும்பாலான தருணங்களில் நாம் யார் என்பதைவிட நமது பண்புகளைவிட நமது ஆளுமையைவிட, நாம் உதிர்க்கும் ஒற்றைச் சொல்லைவைத்து நம்மைபற்றிய ஒரு முடிவுக்கு நமது அன்புக்குரியவர்கள் வந்துவிடுகிறார்கள். சில மோசமான சந்தர்ப்பங்களில் அதுவும் நிதானமற்ற தருணங்களில் உதிர்க்கும் ஒரு சொல்லைவைத்து நம்மைப்பற்றியான ஒரு மதிப்பீட்டிற்கு அதுவும் கறாரான மதிப்பீட்டிற்கு ஒருவர் வருவது உண்மையில் துரதிஷ்டவசமானது. இரண்டு மனிதர்களுக்கிடையேயான உறவு நெருக்கமாக நெருக்கமாக சொற்கள் அத்தனை நுட்பமாக அங்கு கவனிக்கபடுகின்றன.

“அந்தச் சொல்லை நான் எனது மோசமான மனநிலையின் விளைவாக சொல்லிவிட்டேன், உண்மையில் நான் அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது. அப்படிச் சொல்லக்கூடியவனும் அல்ல. இதையெல்லாம் நீயே புரிந்துகொண்டிருக்க வேண்டும், இதை உனக்கு விளக்கும் நிலைக்கு வந்ததில்கூட எனக்கு வருத்தம் உண்டு. ஏனென்றால் நாம் ஒருவரையொருவர் பரஸ்பரமாக புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை நாம் நம்பிக்கொண்டிருந்தேன்” என்று அதற்குப்பிறகு என்னதான் அதற்கு சமாதானம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஏனென்றால் சொன்னச் சொல்லை இல்லையென்று எப்படி நிரூபிக்க முடியும்?

ஒற்றைச் சொல்லிற்கு என்ன வலிமை இருக்கிறது? அது ஒரு சொல்தானே? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஒரு ஆழமான உறவில் சொற்களுக்குப் பெரிய பங்கிருக்கிறது, ஒரு சொல்லை வைத்து நாம் மறுமதிப்பீடு செய்யப்படுவோம். அந்தச் சொல்லில் கிடைத்தப் புரிதலைக்கொண்டு நமது கடந்த கால நடவடிக்கைகளுக்குப் புதிய விளக்கங்கள் கொடுக்கப்படும், நமது அன்பு மறுவிசாரணை செய்யப்படும், உறவிற்குப் புதிய நோக்கங்கள் கற்பிக்கப்படும், இறுதியிலும் இறுதியாக நம்முடனான உறவே மறுபரிசீலனை செய்யப்படும்.
அந்த உறவில் நீங்கள் ஆயிரம் அழகான சொற்களைச் சொல்லியிருக்கலாம் “நீ மட்டும்தான் எனது வாழ்க்கையை முழுமையடைய செய்கிறாய், உன்னோடு இருக்கும் நேரங்களில்தான் உண்மையில் நான் நானாக இருக்கிறேன்” என்பதுபோல பல கவித்துவமான சொற்களை உங்கள் உறவின் நிமித்தம் நீங்கள் பலமுறை சொல்லியிருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட சொற்களுக்கெல்லாம் நெருக்கமான உறவில் எந்த மதிப்புமில்லை. ஒரு உறவின் பிணைப்பை பலப்படுத்துவதில் சொற்களுக்கு எந்த வேலையும் இல்லை. சொற்களையும்தாண்டி நாம் மற்றவரைப் புரிந்துகொள்ளும்போதுதான் அது முதிர்ச்சியான, ஆழமான உறவாக மாறுகிறது. ஆனால் உறவின் பிணைப்பை சிதைப்பதில் சொற்களுக்கே முதன்மையான பங்கிருக்கிறது. ஒரு சொல்லின்வழியாகவே எந்த ஒரு உறவும் உடைய தொடங்குகிறது.

“நீயும் எல்லா பசங்கமாதிரிதானே” என்ற சொல் எவ்வளவு சாதாரண சொல்? எத்தனை பொதுவான சொல்? ஒரு உறவை உடைக்கும் அளவிற்கு இதில் என்ன இருக்கிறது? ஆனால் பல வருடங்களாக தான் காதலிக்கும் பெண் இப்படிச் சொன்னதால் அதே கணத்திலேயே பிரேக் அப் சொன்ன ஆணை எனக்குத் தெரியும்.

அப்போது ஒரு உறவில், சொல் என்பது அதன் நேரடி அர்த்தத்தை மட்டும் வைத்து கணிக்கப்படுவதில்லை அது சொல்லாமல்விட்ட அர்த்தங்களையும், மறைமுகமாகச் சொல்ல விரும்பும் அர்த்தங்களையும் அதுசார்ந்த உணர்வுகளையும், ஏமாற்றங்களையும், நிராகரிப்பையும், புரிதலின்மையும் சேர்த்தே புரிந்துகொள்ளப்படுகிறது. மற்றவர்களுக்கும் அவனுக்கும் வித்தியாசம் இல்லை என்பது பொதுவாக மற்ற சூழ்நிலைகளில் உண்மையாக இருக்கலாம்
ஆனால் அந்தக் குறிப்பிட்ட உறவில் அப்படியல்ல, அவனது தனித்துவத்தை மையப்படுத்திய, கவனப்படுத்திய தளத்திலேயே அது நிராகரிக்கப்படுவது அவனைப் பொறுத்தவரை பெருத்த ஏமாற்றமாக இருந்திருக்கக்கூடும். ஒரு உறவில் ஏமாற்றங்கள் வருவது ஒன்றும் அரிதானதல்ல, ஆனால் அது என்ன விதமான உணர்வின் பின்ணணியில் சொல்லப்படுகிறது, என்னவிதமான உணர்வை ஏற்படுத்துகிறது, அந்த உறவு தொடர்பாக என்னவிதமான அர்த்தத்தை, நோக்கத்தைக் கொடுக்கிறது என்பதெல்லாம் முக்கியமானது. ஒரு சொல்லை அது சொல் என்பதற்கும் மேலாகப் புரிந்துகொள்ளும்போது அது அதீத ஆற்றலையும், வலிமையையும் பெற்றுவிடுகிறது.

பொதுவாக நாம் பேசும் சொற்களை எல்லாம் நமது மூளை ஒன்றிரண்டு முறை சரிபார்த்துப் பிறகுதான் நம்மைச் சொல்லவிடுகிறது. ஒரு சொல் சொல்வதற்கு முன்னால் அதை யாரிடம் சொல்கிறோம், ஏன் சொல்கிறோம், அதன் தேவை என்ன, அதன் நோக்கம் என்ன, அது எப்படிப் புரிந்துகொள்ளப்படும், எப்படி உள்வாங்கப்படும், அது என்ன விதமான தாக்கத்தை கேட்பவரிடம் ஏற்ப்படுத்தும் என அத்தனையும் துரிதமாக யோசித்து அதற்குப் பிறகு அந்தச் சொல்லை வெளிப்படுத்த மூளை கட்டளையிடுகிறது.

மனிதர்கள் தங்களது சொற்களை உபயோகிப்பதில் பலவீனமானவர்கள் என்பதை உணர்ந்தே மூளை இந்த ஏற்பாட்டை செய்து கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். மனிதனின் இயக்கத்தை, அவனது நடவடிக்கைகளை, அவனது சொற்களைத் தீர்மானிக்கும் ஒன்றாக மூளையே இருக்கிறது. ஆனால் நாம் ஒரு அதீத உணர்வெழுச்சி கொள்ளும் தருணத்தில், உணர்வுக் கிளர்ச்சியடையும் நேரங்களில், திரண்டெழும் நமது உணர்வுகள் அத்தனையும் சேர்ந்து மூளையின் இந்த சரிபார்ப்பு வேலையை நிறுத்திவிடும். மூளையின் இந்த வடிகட்டலில் இருந்து தப்பித்து அந்த கணநேர உணர்வெழுச்சி உண்டாக்கும் சொற்கள் எல்லாம் எந்தவித சென்சார்களும் இல்லாமல் உமிழப்படுகின்றன. உண்மையில் இப்படிப்பட்ட சொற்களுக்கு எந்தவித மதிப்பும் கொடுக்க தேவையில்லை ஏனென்றால் பலவீனமான ஒரு தருணத்தில் நமது அறிவின் தடுப்பில் இருந்து தப்பிச்செல்லும் சொற்கள் இவை. நமது அறிவிற்கு அப்பாற்ப்பட்ட இந்த சொற்களில் இருந்து நமது அன்பையும், நமது நோக்கங்களையும் மதிப்பிடுவது நிச்சயமாக துரதிஷ்டவசமானது.

நம்மை புரிந்துகொள்ள வேண்டுமானால் இந்தச் சொற்களுக்கு அப்பாற்ப்பட்டு புரிந்துகொள்ள வேண்டும், இந்த சொற்களின் மூர்க்கங்களுக்குப் பின்னால் பயந்தபடியே மறைந்துகொண்டிருக்கும் நமது உண்மையான ப்ரியத்தை தேடிப்பார்த்து கண்டுபிடிப்பதில்தான் நம்மீதான அன்பு இருக்கிறது. அன்பு என்பது இவை அத்தனையையும் உள்ளடக்கியதுதானே!

முந்தைய தொடர்கள்:

3.உடம்பார் அழியின்… – https://bit.ly/33tdYRm
2.அந்தியின் இருளில் நடப்பவர்கள்- https://bit.ly/3952h4q
1.மனித விசித்திரங்களினூடே ஒரு பயணம் – https://bit.ly/3952418

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. உள்ளதை உள்ளபடி ஏற்க முடியுமா? - சிவபாலன் இளங்கோவன்
  2. உடம்பார் அழியின்... - சிவபாலன் இளங்கோவன்
  3. அந்தியின் இருளில் நடப்பவர்கள்- டாக்டர் சிவபாலன் இளங்கோவன்
  4. மனித விசித்திரங்களினூடே ஒரு பயணம் - சிவபாலன் இளங்கோவன்