வா.மு. கோமு எழுதும் புதிய தொடர்

…………………………………………………………………

கூரைக்கொட்டகைகளில் திரைப்படங்களை கண்டு களித்தவர்கள் பாக்கியவான்கள் என்றே தோன்றுகிறது. அந்த பாக்கியவான்களில் அடியேனும் ஒருவன். தரை டிக்கெட் என்று 50 பைசாவுக்கு வாங்கிக் கொண்டால் திரை முன்பாக மணல் தரையில் அமர்ந்து கொள்ளலாம். பெரும்பாலும் இரவு இரண்டு காட்சிகள் தான். பீடி,சிகரெட்டுகளின் புகை அரங்கினுள் மிதந்து கொண்டேயிருக்க தட்டுவடை முறுக்கு ஏந்திய சிறுவர்கள் திரையில் வரும் உருவங்களை பார்வையாளர்கள் பார்க்க இடைஞ்சலாய் சுற்றிக் கொண்டேயிருப்பார்கள். திரையரங்கில் தயாரிக்கப்படும் தட்டுவடைகளுக்கான ருசி வேறு அலாதியானது.

நான் சிறுவனாயிருந்த காலங்களில் தொடர்ந்து எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்த படங்களை மட்டுமே பார்ப்பதில் அவா கொண்டிருந்தேன். அவர் தன் அம்மாவைக் காப்பதற்காக படும் துயரங்களை திரையில் கண்டு அம்மா மீது அதீத பாசம் கொண்டு திரிந்தேன். எந்த வில்லனும் அம்மாவை அபேஸ் செய்து போய்விடலாகாது என்பதில் என் தந்தையாரை விட கவனத்தில் கொண்டு திரிந்தேன்.

அம்மாயி சிவாஜி கணேசனின் ரசிகை. என்னை கூட்டிப்போய் மணலில் தன்னோடு அமர்த்திக் கொள்ளும். திரையில் சிவாஜிகணேசன் அழுதால் இதுவும் அழுது மூக்கைச் சிந்தி மணலில் வீசும். என் அப்பிச்சி அடித்தால் கூட அதுபோல அழாது. பெரும்பாலும் எனக்கு அழும் காட்சிகள் நிரம்பிய திரைப்படங்களைக் காண சிறுவயது முதலே பிடிப்பதில்லை. அப்போதெல்லாம் இப்போது போலவே வாரம் ஒருமுறை திரைப்படங்கள் கொட்டாய்களில் மாற்றப்படும். இன்றே கடைசி ஸ்லிப் வேறு தனியே போஸ்டர் மீது ஒட்டப்படும். டீக்கடை முகப்பிலும் மளிகைக்கடை முகப்பிலும் ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கு கடைசி நாளன்று ஃப்ரீ பாஸ் கொடுக்கப்படும். ஃப்ரீ பாஸ்காரர்கள் கடைசி நாளில் கொட்டாயில் குவிந்து விடுவார்கள். இது பண்ட மாற்று முறையில் வராது போலிருக்கிறது.

அடுத்த நாள் கூட்டு வண்டியொன்றில் இருபக்கமும் புதிய படத்தின் தட்டி வைக்கப்பட்டு தப்பட்டையடித்தபடி ஒருவர் வருவார். வண்டியை இழுத்து வரும் அந்த காளைமாட்டுக்கு எங்கு எங்கு நிற்க வேண்டுமென்பது கூட பழகிப்போயிருக்கும். தப்பட்டை சப்தம் கேட்டாலே நாய்கள் குரைக்கத்துவங்கி விடும். சிறுவார்கள் அந்த வண்டியின் கூடவே பக்கத்து ஊர்வரை செல்வதெல்லாம் நடந்தது. அப்போதைய நட்பாளர்கள் என்னையும் பக்கத்து ஊர்வரை போய்வரலாமென கூப்பிடுவார்கள். மளிகைக் கடை முன்பாக தட்டியில் ஒட்டப்பட்ட திரைப்படம் சிவாஜி கணேசனுடையது என்பதை அறிந்ததும் என் முகம் செத்து விடும். பின் எங்கே மகிழ்ச்சியாய் அவர்களோடு பொறவுக்கே செல்வது? இதுவெல்லாம் சிறுவயதில் அப்பிச்சி வீட்டுக்கு வருட பரிட்சை லீவில் கோவையில் வடமதுரை சென்ற போது நடந்தவைகள். ஒரு மாத விடுப்பில் நான்கு திரைப்படங்களைத்தான் காணமுடியும் என்கிறபோது செலக்ட் செய்வதற்கு முடியாது என்பது இப்போது நினைக்கையில் உலகக் கொடுமை.

தியேட்டரினுள் எக்கோ சப்தமுடன் திருட்டு பிரிண்ட்டுகளை என்னவானாலும் சரியென அலைபேசியில் இரண்டாம் நாளே டவுன்லோடி, முகநூலில் குப்பை என்று ஒரு ஸ்டேட்டஸ் போட்டு விருப்பக்குறிகள் விழுகின்றனவா? என விழி வைத்து பார்த்திருக்கிறார்கள். அந்தத் திரைப்பட்த்திற்கான தயாரிப்புச் செலவில் கால்வாசி அளவேனும் போட்டவராக அந்த நபர் இருந்திருந்தால் ராக்கர்ஸ்காரர்களை இழுத்து உள்ளே போடச் சொல்லி கொந்தளிப்பாய் ஒரு ஸ்டேட்டஸ் போட்டு விட்டு தொடுதிரையில் பார்வையை வைத்திருப்பார். தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி வசனம் நியாபகம் வருகிறது.

அப்போது நான் சென்னிமலையில் பத்தாவது வாசித்துக் கொண்டிருந்திருக்கலாம். பள்ளிக்கு மட்டமடித்து மதியக்காட்சிக்கு சென்று எங்கள் கிராமத்திற்கு வரும் பேருந்தை பிடிப்பதற்காக எல்லாப் படங்களையும் சென்னிமலையில் கடைசி அரைமணி நேரங்களை தவற விடுவதே வாடிக்கையாக இருந்தது. பின்பாக படம் பார்த்த நண்பர்களிடம் முடிவுக்காட்சிகளை விசாரித்து அதை மனக்கண்ணால் ஓட்டிப் பார்க்கும் வழக்கமிருந்தது. சனிக்கிழமை என்றால் மதியம் பள்ளி ஒருமணியோடு அரை நாளில் விடுப்பு என்பதால் சைக்கிளில் சென்று வந்து கொண்டிருந்தோம். எந்த சனிக்கிழமையும் நான் பள்ளி சென்றதில்லை. நண்பனோடு காலைக்காட்சி மற்றும் மதியக்காட்சி முடித்து விட்டுத்தான் பதிமூன்று மைல்கள் வந்து கொண்டிருந்தேன்.

சிவாஜிகணேசனின் பையன் பிரபு, சங்கிலி படத்தில் பயங்கரமாய் வருகிறார், என்று பள்ளியில் பேச்சாக இருந்தது. நண்பர்கள் ஓடி ஓடிப் பார்த்தார்கள். எனக்கு ஏனோ அதில் விருப்பமில்லை. ஒரு நடிகரின் மகன் திரையில் தோன்றுவதில் என்ன அதிசயம் இருந்துவிடப் போகிறது எனக்கு?

தைப்பூசத் தேர்த்திருவிழாவுக்கு சென்னிமலை முழு ஊரும் மக்கள் கூட்டமாய் நிரம்பியிருக்கும். விடியும் வரை மூன்று தியேட்டர்களில் காட்சிகள் ஓடும். சகலகலா வல்லவன் திரைப்படத்தை பார்த்த சனம் அளவில்லாதது.காட்சியின் போது தியேட்டரின் கதவுகள் விரியத் திறக்கப்பட்டு அங்கெல்லாம் அமர்ந்து திரையை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது சனம். கால மாற்றத்தில் கமல் கட்சி ஆரம்பித்து ‘நான் தான் சகலகலாவல்லவன்’ என்று நிருபணம் செய்ய முயல்கிறார். அவருக்கு இப்போது கற்பனையில் குஞ்சுத் தாடியும், மினுக்கட்டான் பனியனும் அணிந்து பார்த்து சும்மாவுக்கேனும் ரசிக்கிறேன். இன்று சென்னிமலையில் ஒரே திரையரங்கு தான். அதற்கும் சனத்தைக் காணோம்.

திரையரங்கிற்குச் செல்வதே மறந்து போன நிலையில் சென்னிமலையில் ‘சதுரங்க வேட்டை’ படத்தைக் காண திரையரங்கிற்கு எட்டு வருடங்களுக்குப் பிற்பாடு சென்றோம் நானும் நண்பனும். மதியக்காட்சி அது. பதினொரு பேர்கள் அமர்ந்திருக்க இன்று படம் காட்ட மாட்டார்கள், டிக்கெட் விலையை திருப்பிக் கொடுத்து அனுப்பி விடுவார்கள் என்றே நினைத்து அமர்ந்திருந்தோம். ஆனால் முப்பது வருடம் முன்பாக கடைசிப் பாடலாக, ‘வரவேண்டும் மகராஜா..’ பாடல் அத்திரையரங்கில் ஒலிக்கும். அது இப்போதும் ஒலிக்கவே கண்டிப்பாக படம் உண்டென முடிவெடுத்தேன். இடைவேளையில் கேண்டீன்காரரிடம் கேட்டேன். ‘கூட்டம் இப்படித்தானா எப்போதும்? என. ‘அப்படியல்ல.. வெள்ளி சனி ஞாயிறே படத்தை பார்த்துடுவாங்க! நீங்க வெசாழக்கிழமை வந்திருக்கீங்க!’ என்றார்.

இந்தத் தியேட்டரில், ’தென்றலே என்னைத் தொடு’ ஓடிய 7 நாளும் என் நண்பனொருவன் தொடர்ந்து மதியக்காட்சி பார்த்து முடித்தான். அவன் இன்று நேவியில் இருக்கிறான். பணி முடித்து திரும்பவும் ஊர் வந்து சேர்ந்து விட்டான். அப்படி அவன் தொடந்து காண பத்தாவது படிக்கையில் எது ஈர்த்தது? என்று இன்னமும் எனக்கு தெரியவில்லை. எனக்கென்னவோ மோகன் துரத்த படத்தின் நாயகி ஆண்பிள்ளை போல அங்குமிங்கும் நடந்தது கூட காரணமாய் இருக்கலாம். நிச்சயமாக பாடல்களுக்காக அவன் சென்றிருக்க வாய்ப்பில்லை. இதே போல் முரளி நடித்த ’இதயம்’ படத்தினை திருப்பூரில் நண்பனொருவன் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் இப்போது ஆசிரியராக பணியில் இருக்கிறான். நானும் 1971-ல் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கி வெளிவந்த Duel திரைப்படத்தை எனது லேப்டாப்பில் வைத்துக் கொண்டு வருடக்கணக்காக பார்த்துக் கொண்டேயிருக்கிறேன் நண்பர்களுக்கும் காட்டிக் கொண்டு! ஏன் என்ற கேள்விகளுக்கெல்லாம் சில சமயம் விடை கிடைப்பதேயில்லை.

விசயத்திற்கு வருவோம். சதுரங்க வேட்டை படத்தின் இயக்குனர் நண்பர் வினோத்திற்கு ஒரு போனைப் போட்டேன். அவரோ சிரித்தபடி, ‘ஏனுங் கோமு, எல்லாப்பக்கமும் ஓடி எடுத்துட்டாங்க! லேட்டா சென்னிமலையில போட்டிருக்காங்க!’ என்றார். பின்பாக மாதம் ஒருமுறையேனும் ஒரு திரைப்படத்தை கூட்டத்துடன் காண திரையரங்கிற்கு அந்த சனி ஞாயிறு சமயங்களில் சென்று வந்து கொண்டிருக்கிறேன்.

திரைப்படத்தை திரையரங்கில் மக்கள் கூட்டமுடன் காணவேண்டுமென்பதே அவாவாக இருக்கிறது. ரஜினிமுருகன் படத்திற்கு டிக்கெட் கிடைப்பதே பெரும்பாடாக இருந்தது. பையன் வேறு கூட்ட நெரிசலில் நசுங்கி விடுவானோ? என்ற கவலை வேறு ஒருபக்கம். படம் ஆரம்பிக்கையில் அவனுக்கு மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை அந்த இருளிலும் காண முடிந்தது. ‘என்னாப்பா இவ்ளோ கூட்டம்? விசிலெல்லாம் போடறாங்கப்பா!’ முன்பாக இருபது பேர் அமர்ந்து பார்க்கும் நாட்களில் அவனை அழைத்து வந்து கொண்டிருந்தேன். சனத்தைக கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சியாகி விட்டது.

திருப்பூர், கோவை, இப்போது ஈரோடு மாவட்டங்களில் மல்டிஃப்ளக்ஸ் காம்ப்ளெக்ஸ்கள் உதயமாகி விட்டன. ஒரே இடத்தில் நான்கைந்து புதிய திரைப்படங்கள். நம்பி சனம் அங்கு செல்லலாம். எப்படியேனும் ஒரு புதிய படத்தை அங்கு கண்டு விடலாம். உள்ளே செல்பவர்களின் வாயை ஊதிக் காட்டச் சொல்கிறார்கள். மது வாடை வருகையில் அவர் வெளியே அனுப்பப்படுகிறார். அலைப்பேசிகள் அணைத்து வைக்கப்பட வேண்டும். குட்டிக்குட்டி அரங்குகள். இப்படியான அரங்குகள் இனி இங்கே அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இப்படியிருக்க, நான் முதலாக தனித்து டிக்கெட் எடுத்து திரையரங்கில் சென்று இமைக்க மறந்து பார்த்த படம் ‘ஒரு கை ஓசை’. கொங்குமண்ணின் பேச்சு வழக்குகள் அதில் இருக்க அப்படி ஒட்டிக்கொண்டேன் அதனுடன். ‘அது அப்பிடியில்லீங்கெ’ என்று பாக்கியராஜ் வசனம் ஆரம்பிப்பது அவரது படங்களை தொடர்ந்து காண ஆவலைத் தூண்டிவிட்டது. முன்பாக வில்லனுக்கு அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கன்னத்தில் பெரிதாக மருகு வைத்துக் கொண்டு வில்லனின் கூடாரத்திற்கே சென்று பாட்டுப்பாடி ஆடி கடைசியில் மருகை எடுத்து வில்லனிடம், ‘நான் தான் ராஜா!’ என்று முகம் காட்டி அடிதடியில் இறங்கும் நாயகர்களை பார்த்தே வந்திருந்தேன்.

ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு படத்தில் கூட அப்படித்தானே! மீசை வைத்தால் ஒரு ரஜினி. மீசையை எடுத்து விட்டால் ஒரு ரஜினி. போக என் தந்தையார் ஆசிரியர் என்பதால் ஏகப்பட்ட கெடுபிடிகளை என்மீது திணித்தவர் அவர். கெடுபிடிகள் அதிகமாகும் போது எதிர்க்கும் எண்ணம் வருவது இயல்பு தானே! பிஸ்கெட்டை வேணாமென ஒதுக்கி விடும் குழந்தையிடம், தின்னு தின்னு எனத் திணித்தால் மறுபடியும், வேணாம்போ! என்று ஒதுக்குவதிலேயே பிடிவாதமும் மூர்க்கமும் அங்கே தோன்றி விடுகிறது. அது தொடர்கிறது காலம் முழுக்க! ஒன்றைச் செய்யாதே என்றால் செய்யத் துணிவது.

சினிமா என்னைச் சீரழித்து விடுமென என் தந்தையார் நம்பியிருக்கலாம். அவரை ஏமாற்றுவது வெகு சுலபம். ஆசிரியர்களை மாணவர்கள் எல்லாக்காலங்களிலும் ஏமாற்றிக் கொண்டேயிருக்கிறார்கள் சுலபமாக. விஜயமங்கலம் டெண்ட்டு கொட்டாயில் இரவு இரண்டாம் காட்சிக்கு அவரை ஏமாற்றிச் செல்வது சுலபம். வீட்டின் அருகாமையுள்ள பழைய வீட்டில் என் அப்பாரு கட்டிலில் கிடப்பார். டியூசனுக்கு வரும் உள்ளூர் நண்பர்கள் இரவு எட்டரை ஆனதும் போய் விடுவார்கள்.

சற்று தூரத்திலிருந்து வரும் நண்பன் அப்பாரு வீட்டில் தங்கி விட்டு காலையில் நேரமே சென்று விடுவான்,. அவனுக்குத் துணையாக நான் கிடப்பேன். இரவு ஒன்பதரை என்கிறபோது அப்பாவின் சைக்கிளை நேக்காக தூக்கி வெளியில் கொண்டு வந்து விடுவோம். அப்பாரு பொக்கை வாயில் காற்றுப்போக ஒன்பது மணிக்கே தூங்கி விடுவார். கதவை தாழிடாமல் சாத்தி விட்டு டபுள்ஸ் கிளம்பி விடுவோம். அப்பாரு தூங்கினால் ஒரே தூக்கம் தான் விடியும் வரை.

அப்படி பல படங்கள். அவற்றில், ’சந்திப்பு’ என்கிற படத்தை மறந்து விட முடியாது. சிவாஜிகணேசன், ஸ்ரீதேவி, ராதா, பிரபு என பெரும் கூட்டம் நடித்திருந்தது. டெண்டு கொட்டாயில் திரையைச் சுற்றிலும் சீரியல் பல்ப்புகள் வேறு. ’சோலாப்பூர் ராணி.. சோலாப்புர் ராஜா’ என்று பாடல் ஆரம்பித்ததும் சீரியல் பல்புகளும் எரிய ஆரம்பித்து விடும். திருப்தியோடு வெளியே வருகையில் சைக்கிள் டயர் செத்த தவளையாக கிடக்க இருவருக்குமே பயம் பிடித்துக் கொண்டது. எவன் ஆறு கிலோ மீட்டர் உருட்டிச் செல்வது சாமத்தில்?

எப்படியோ கேண்டீன்காரன் காற்றடிக்கும் பம்ப் வைத்திருக்க அதை வாங்கி அடித்துக் கொண்டு காற்றிருக்கும் வரை செல்லாமென அழுத்தோ அழுத்தென அழுத்தி வந்தோம். நல்லவேளை காற்று வழியில் எங்கும் குறையவில்லை. வீடு வந்து பார்க்கையில் அன்று கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது! அன்று எங்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான். பக்கத்து விட்டுக்காரர் திண்ணையில் படுத்துக் கொள்ளும் யோசனை தான் ஓடிற்று எனக்கு. ஏனென்றால் அப்பாருக்கு காது செவிடு. கூப்பிட்டு கத்தி கதவை தட்டினால் பக்கத்து வீட்டிலிருந்து அப்பா எழுந்து வந்தாரென்றால் சாமம் ஏமாம் பார்க்காமல் தடியெடுத்து விளாசுவார்.

திடீரென ஒரு ஐடியா உதித்தது. வீட்டின் பக்கத்திலேயே ரயில்வே ட்ராக் என்பதால் விரைவு ரயில்கள் செல்கையில் கதவை குலுக்கி அசைப்பது என்று முடிவானது. இரவு நேரத்தில் அன்று பார்த்து விரைவு ரயில்களின் வரவு பத்து நிமிடத்திற்கு ஒன்றாக இருந்தது. விரைவு வண்டி தடதடத்து செல்லும் சமயங்களில் கதவைக் குலுக்கினோம். எட்டாவது மெயில் ஊரைக் கடக்கையில் கதவின் உள் நாதாங்கி விலகி கதவு திறந்தே விட்டது. அந்த அளவுக்கு தடதடவென வெறியாய் குலுக்கியிருந்தேன். பின்பாக இரவுக் காட்சிக்கு செல்வதை அன்றோடு நாங்கள் மறந்தே போனோம். அப்பாரு இத்தாப்பெரிய கலவரம் கதவு நீக்கப்படுவதற்காக நடந்தது அறியாமல் கயிற்றுக் கட்டிலில் சின்னக் குறட்டையொலியுடன் பொக்கை வாயை திறந்தபடி தூங்கிய வண்ணமிருந்தார்.

எனது மங்கலத்து தேவதை நாவலின் நாயகி பிரேமாவுடன் பல திரைப்படங்களை பெருந்துறையில் கண்டு ரசித்திருக்கிறேன். முழுமையாக ஒன்றிரண்டு படங்களைத் தான் பார்த்திருப்போம். அவற்றில் பல அவளாக கோபத்தில் கொந்தளித்து எழுந்து ஓடும் படங்கள் அதிகம். பின் நான் எழுந்து ஓடி வந்து விடுவது. யார் ஓடினாலும் ஒருவர் முழுத் திரைப்படத்தையும் கண்டு தான் எழுந்து வருவோம். பிரேமாவுடன் ’உன்னாலே உன்னாலே’ திரைப்படத்தைக் கண்டது தான் அழகிலும் அழகு. அந்தப் படத்தின் நாயகி நாயகனுடன் தேவையின்றி கொந்தளித்துக் கொண்டே தன் வாழ்க்கையை இழந்து விடுவாள். சேம் பிரேமா தான்! அவள் வயிற்றெரிச்சலில் தான் முழுப்படத்தையும் கண்டாள். அவளையே பிரதிபலிப்பது அவளுக்கு கொடுமையாக இருந்தது எனக்கே தெரிந்தது. அன்று இருவரில் யாரும் கோபித்துக் கொண்டு எழுந்து ஓடவில்லை.

எம்பதுகளின் இறுதியில் கோவையில் எனக்கு மலையாளத் திரைப்படங்களை மட்டுமே காணும் தமிழ் நண்பன் அறிமுகமானான். சமயத்தில் மிருகயா, நாயர்சாப், சூரியாம்சம், நெம்பர் டொண்ட்டி மெட்ராஸ் மெயில், என்று மோகன்லால், மம்முட்டி படங்களாக பார்த்து வைத்தேன். நீண்ட இடைவெளிக்குப் பின்பாக இப்போது தான் பார்க்கத் துவங்கி இருக்கிறேன். இப்போது ஷட்டர், 1983, பிரேமம், திருவனந்தபுரம் லாட்ஜ், உஸ்தாத் ஹோட்டல், வடக்கன் செல்பி, என்று நண்பர்கள் சில படங்களை தட்டுக்கள் வாயிலாக அறிமுகப்படுத்துகிறார்கள். மலையாளப்படங்களின் நிதானமான நகர்வு மட்டுமே அன்றிலிருந்து இன்று வரை சிறப்பாகப்படுகிறது.

தமிழில் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் அனைத்துமே ஒருமுறை திரையரங்கில் காணலாம் என்கிற அம்சத்தோடு தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. எந்தப் படங்களுமே பார்வையாளனை ஏமாற்றமடையச் செய்வதில்லை. போக கதையம்சங்களில் மாற்றமான வேறு வடிவிலான படங்களும் வருகின்றன.

சமீபத்தில் பையனின் ஆசைப்படி எந்திரன் படத்திற்கு இரண்டாம் நாள் கூட்டிப்போக வெண்டி வந்தது. அந்த சமயத்தில் 4 மாதங்களாக இடது கண்ணில் வெந்திரை போன்றொரு தெரிய வண்டியோட்டுகையில், லேப்டாப் பார்க்கையில் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். இட்து கண் போய்விடும் என்ற வீணான நம்பிக்கை மனதில் நுழைந்து கொண்டேயிருந்தது. திருப்பூரில் கண் மருத்துவமனைகளில் ஒரே தகவலை சொன்னார்கள். ஏகப்பட்ட டெஸ்டுகள் மாத்திரை வில்லைகள். ஒரு ஆறு மாசத்துல தானா சரியாடுங்க! 4 மாதமாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை என்ற துக்கத்தில் இருந்தவன் அகன்ற திரையில் சினிமா பார்த்தால் சரிப்படுமா? என்ற சோதனை முயற்சிக்கு பையனோடு சென்றிருந்தேன். கண்ணாடி போட்டு பார்க்க இயலாத திரையரங்கு அது. பையன் முகம் செத்து விட்டது.

இருந்தும் காலைக்காட்சி 11 மணியளவில் 22 நபர்களுடன் ஓடியது. கண் பிரச்சனை பெரிய திரையிலும் தொடர்ந்தது. போக சிறாருக்கான பொம்மைப் படம் காண்பது போன்றொரு துக்கம் எனக்குள். சிறுவர்களுக்கான கதைகள் எழுதுகையில் அந்த மனநிலையை உருவாக்கிக் கொள்ள ஒரு மாதம் வரை சிறார்கதைகள் வாசித்து சிறுவனாகவே மாறி விடுபவன் நான். மீதி பத்து நாட்களில் ஐந்து கதைகள் எழுதி முடித்த பிறகு விடைபெற்று விடுவேன். பின்பாக சென்னிமலை கண்ணாடி கடையில் 1500 ரூபாய் செலவில் ஒரு கண்ணாடி மாட்டி எதிரே தெரியும் சுவர் விளம்பரத்தை பார்க்கச் சொன்னார் கடை முதலாளி. தெரிகிறது என்றேன் சுத்தமாக. வண்டி ஓட்டுகையில் துன்பமாய் இருந்தது. தூரத்தில் வரும் பேருந்து சின்னதாக தெரிந்தது. புத்தகம் வாசிக்க கண்களை கீழ் கொண்டு செல்ல வேண்டி துன்புறுத்தியது.

முக்கியமாக இங்கே சொல்ல வேண்டிய விசயம் என்னவென்றால் கடைக்கார முதலாளி சொன்ன ஒரு தகவல் தான். புகையிலையை வாயினுள் சொறுகி வைத்துக் கொள்பவரா நீங்கள்? அப்படியெனில் அதை விட்டொழியுங்கள். நேராக கண்நரம்பு மண்டலத்தை அது தாக்குகிறது. அதை விட்டொழித்த பத்து நாட்களில் என் பார்வைக் கோளாறு சரியாகிவிட்டது. அது அந்த வருடத்திற்கான உடல் பிரச்சனை.

திரைத்துறை வளர்ச்சியின் பாதையில் வெற்றிநடை போட்டுக் கொண்டு செல்கிறது. திரைத்துறையில் இருக்கும் எத்தனையோ இளைஞர்கள் கையில் பலவித சாமார்த்தியங்கள் நிரம்பியிருக்கின்றன. சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் அவர்களுக்கு அருகாமையில் இப்போது இருக்கின்றன. முன்பு எட்டாக்கனியாக இருந்த திரையுலகு கிட்டத்தில் வந்திருக்கிறது. சி செண்டர் பார்வையாளர்களை டிவிப் பெட்டிகள் வளைத்துப் பிடித்துக் கொண்டதால் சி செண்டரில் திரையரங்குகளே இல்லை. இருந்தாலும் பெரிய பாதிப்பொன்றும் இல்லை.

திரைப்படம் ஒட்டு மொத்த பணியாளர்களின் மாபெறும் உழைப்பு. திரைப்படம் சார்ந்த ஒவ்வொரு பிரிவினரும் உழைப்பையும், உடல் வருத்தத்தையும், வேர்வையையும் அங்கு சிந்தியே ஆக வேண்டும். வெய்யில் மழை அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல! எத்தனையோ கட்டங்களைத் தாண்டித்தான் ஒரு திரைப்படம் திரைக்கு வருகிறது. அது சின்ன வெற்றி என்றால் கூட அதன் உழைப்பாளர்கள் அனைவருக்கும் மாபெறும் வெற்றி மகிழ்ச்சி தான். அந்த வெற்றி தான் அவர்கள் தொடர்ந்து இயங்குவதற்கான, பணியாற்றுவதற்கான பலத்தையும் வைராக்கியத்தையும் கொடுக்கிறது.

குறிப்பிட்ட நாயகர்களையே தொடர்ந்து திரையில் பார்த்து வந்த பார்வையாளர்கள் தங்கள் பக்கத்து வீட்டுக்காரனைக் கூட திரையில் கண்டு ரசிக்கிறார்கள். எல்லாமே காலத்தின் வளர்ச்சி தான்.

 

-வா.மு.கோமு