மதம் கொண்ட மனிதர்கள் -3 

பன்னிரண்டு ஆண்டு கால ஆட்சியில் நீரோ அதிகம் கவனம் செலுத்தியது எல்லாம் விளையாட்டு, சிற்பக்கலை, இலக்கியம்தான் ஆகியவற்றில்தான். நாட்டில் உள்ள பொருளாதார மந்தத்தை,  யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் உள்ள பகையைப் பற்றி எல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் தன் ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தார்.

கேசியஸ் ஃபிளாரஸ் , நீரோவின் மனைவி போப்பியாவின் பணிப்பெணின் கணவன்.  போப்பியாவின் அன்பிற்குரிய பணிப்பெண்ணாக கேசியஸ் ஃபிளாரஸின் மனைவி உயர,  ஃபிளாரஸிற்கு பதவி தேடி வந்தது. மக்களின் சூழல் தெரியாத மன்னரின் ராஜிய வாழ்க்கை வாழ்ந்தவர் அல்ல ஃபிளாரஸ். சமகால மக்களுக்கு உண்டான பிரச்சனைகளும் மோதல்களும் மத வழிபாடுகளும் ஃபிளாரஸிற்கு நன்றே தெரிந்திருந்தது. கிரேக்க மத பற்றாளரான ஃபிளாரஸ் யூதர்கள் தங்கள் மதங்களை மேலோங்கி போற்றுவதும், கிரேக்கர்களும் சரி சமமாக வாழ்வதும் ஏற்புடையதாக கருதியதில்லை. இந்நிலையில் ஃபிளாரஸ் ஜூடியா மாகாணத்திற்கு முதல்வரானார். நிறைய யூதர்கள் இருக்கும் பகுதி. 

யூதர்களின் முக்கிய கோயிலான இரண்டாம் கோயில் இருக்கும் ஜெருசெலத்தை அடக்கிய மாகாணம். வணிகம் பொருளாதாரத்தில் என்றும் பரபரப்பாக இயங்கும் மக்கள். ஜெசியஸ் ஃபிளாரஸின் வருகையை மக்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஃபிளாரஸிற்கு இது பெரிய பாரமாக இருந்தது. யூதர்களைச் சகித்துகொண்டு வாழ்வது. அவர்களின் விழாக்களுக்குச் செல்வது. அவர்களிடம் வரிப்பணம் வாங்கி பிழைப்பது. ஃபிளாரஸ் ஒருவித மன உலைசலுடன் இதை அணுகினார். சீக்கிரமே தனக்கென சில கிரேக்க நண்பர்களை உருவாக்கினார். கிரேக்கர்களுக்கு என்று சிறப்புச் சலுகைகளை விதித்தார். போதவில்லை! யூதர்களுக்குத் தேவையில்லாத வரிகளை விதித்தார். யுதர்களுக்குள் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கிரேக்கர்கள் எள்ளி நகையாடத் தொடங்கினர். வேலை இடங்களில் தெருக்களில் யூதர்களைத் தாக்கத் தொடங்கினர் கிரேக்கர்கள். யூதர்கள் எல்லாவகையிலும் வீழ்ந்துகொண்டு இருந்தார்கள். கிரேக்கர்களின் கை ஓங்கியது. வெளிப்படையாக யூதர்களை விமர்சனம் செய்வதும் எள்ளாடல் செய்வதும் அதிகமானது. எல்லாவற்றுக்கும் உச்சமாக யூதர்களின் புனித கோயில் முன்பு ஒரு கிரேக்கர் கோழிகளைக் கழுத்தறுத்து வீசினார்.

கோயிலின் புனிதத்தைப் பறித்துவிட்டதாக கூச்சலிட்டார். யூதர்கள் ஒன்றுகூடி அவரைத் தாக்கி கையும் களவுமாகப் பிடித்து அரசவைக்கு அழைத்துச் சென்றார்கள். தங்கள் வழக்கை வாதிக்க அன்றைய ரோம ஆட்சியின் நியதிப்படி 8 காசுகளைத் தந்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தது. ஃபிளாரஸ் வந்தார். இருதரப்பையும் கேட்டுவிட்டு கோழியின் கழுத்தறுத்த கிரேக்கரை விடுதலை செய்து உத்தரவிட்டார். போதாதென்று அவரை அடித்த 6 யூதர்களுக்கு சிறையும், மன்னரின் வளர்ச்சிக்காக ஜெருசெலத்தில் யூதர்களின் கோயிலில் இருந்து 17 காசுகளைத் தரவேண்டும் என்றும் ஆணையிட்டார். யூதர்கள் கொதித்தனர். 

ஃபிளாரஸ் உருவ சிலையைப் பிச்சை எடுப்பதுபோல வடிவமைத்து வீதி வீதியாக எடுத்துக்கொண்டு சென்றனர். இந்த செய்தி ஃபிளாரஸிற்கு சென்று சேர்ந்தது. யூத மத தலைவர்களை அத்தனைப் பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். ஒவ்வொரு யூதர்களின் வீட்டிற்குள்ளும் சோதனை நடைபெற்றது. பெண்கள் குழந்தைகள் தெருவுக்குத் தள்ளப்பட்டனர். யூத மத குருக்கள் இறக்கம் இல்லாமல் சிலுவையில் ஏற்றப்பட்டுக் கொல்லப்பட்டனர். இந்த செய்தி ஜுடியா தாண்டி பரவியது. மக்கள் கலவரங்கள் ஈடுபட ஆரம்பித்தனர். ஜெருசலத்தில் உள்ள ராணுவ கிடங்கிற்கு தீ வைக்கப்பட்டது. 100 இராணுவத்தினருக்கு மேல் பலியானார்கள். யூதர்களை இனி அடக்க முடியாதென்று தெரிந்ததும் ஃபிளாரஸ் நாட்டைவிட்டு ஓட்டம் பிடித்தார். ஜெருசலேம் தீ பற்றி எரிந்தது. சுமார் 1.1 மில்லியன் அப்பாவி மக்கள் தீக்கிறையாகினர். மன்னருக்கு இச்செய்தி போய் சேர்ந்ததும் முடி இளவரசனாக இருந்த ஹரோட் அஃறிப்பாவை ஜெருசலேதிற்கு அனுப்பிவைத்தார்.  அரசவையில் இருந்த சிரியா நாட்டு இளவரசர் கள்ளிஸ் தனது நாட்டு படையுடன் இளவரசன் அஃறிப்பாவுடன் ஜெருசலேம் விரைந்தார். 

நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர யூதர்களின் தெருக்கள் சூறையாடப்பட்டன. ஜூடியாவை விட்டு கலிலீ நகரத்திற்கு கிரேக்கர்கள் இடம்பெயர்ந்தனர். யூதர்களிடமிருந்த நிலம் வீடுகள் அபகரித்து எரிக்கபட்டனர். லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர, 97,000 யூதர்கள் அடிமைகளாக, 1700 யூதர்கள் சிலுவையில் அறையப்பட்டு உயிர் இழக்க, ரோம் நகரத்திற்கும் தீ பரவியது…

முந்தைய தொடர்கள்:

2. “இனி எந்த ஒரு பவுத்தனும் பார்ப்பனரை அடிமைப்படுத்த முடியாது” – https://bit.ly/2J16cVk
1.அசோகரால் கொல்லப்பட்ட சமணர்கள் – https://bit.ly/2J0GIYo

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. “இனி எந்த ஒரு பவுத்தனும் பார்ப்பனரை அடிமைப்படுத்த முடியாது” - ஷ்ருதி.R
  2. அசோகரால் கொல்லப்பட்ட சமணர்கள் - ஷ்ருதி.R