மதம் கொண்டு மனிதர்கள் -2

கி.மு.180 மேற்கிலிருந்து பாக்த்ரிய-கிரேக்க படைகள் கங்கையை நெறுங்கி வந்துகொண்டு இருக்கிறது. வெகு சீக்கிரம் மகத ராஜியத்திற்குள் நுழையும். ஸ்தூபிக்கள் கோயில்களை வேட்டையாடும். மக்களைக் கொல்லும். போர்மூளும் நாள் தொலைவில் இல்லை. 

அசோகருக்குப் பின்பு பல படையெடுப்புகள் கண்டு மௌரிய ராஜ்யம் பெரிதாக வளராது குன்றிக்கிடந்த சமயம் பிரகதிரதன் மௌரியா மன்னர் ஆனார். தனது முன்னோர்கள் போல பெரிதாக சாமர்த்தியம் இல்லை, அகண்ட ராஜ்யம் இல்லை, ஏழு ஆண்டுகள் மட்டுமே ஆட்சிப் புரிந்து மிகவும் சிறுவயதில் தன் தலையில் மகுடத்தை வைத்துவிட்டு இறந்த தந்தை, தான் பிறக்கும்போதே இறந்த தாய், வளர்ந்து வரும் சத்திரியர்கள், பார்ப்பனர்களின் சக்தி தரும் அச்சுறுத்தல், தான் பின்பற்றி வரும் பெளதத் மத துறவிகளின் ஆதிக்கம் என  எல்லாப் புறமும் பிரகதிரதரை அழுத்தங்கள் துரத்தியது. பிரகதிரதா அதற்கெல்லாம் தயாராக அரியாசனம் ஏறியவர் அல்ல. அவர் மிகவும் மென்மையானவர். சொல்லப்போனால் மணிமுடி ராஜியத்திற்கு ஆசைப்படாத வேறு வழியில்லாமல் பொறுப்புகளை ஏற்ற முடி இளவரசர். பிரகதிரதாவின் தந்தை சதத்தன்வன் இறந்த பிறகு விதர்பர்கள், கிரேக்கர்கள் என்று பல வெளி அச்சுறுத்தல்களைப் பிரகதிரதர் சந்திக்கலானது. தனது ஆட்சியைத் தக்கவைக்க பலமான இராணுவத்தைக் கட்டமைக்க வேண்டிய அவசியம் வந்தது.

நாட்டில் உள்ள வீரர்களை தேர்வு செய்யும் வேலைகள் துரிதமாய் நடந்தேறியது. போர் தந்திரங்கள், உடல் திறன்கள் கொண்ட பிரஜைகள் தேர்வானார். அவர்களில் முக்கியமானவன் புஸ்யமித்ரன். பிறப்பால் பார்ப்பனன். தனது மதத்தை பெளத்தம் ஒடுக்கிகொண்டு இருக்க, அதை எதிர்த்து குரல்கொடுத்த வெகு சில பார்ப்பனர்களின் தலைமை. சாதாரண படை வீரனாக சேர்ந்து இரண்டே ஆண்டுகளில் மன்னருக்கு மிக நெருக்கமான மந்திரிகளின் நம்பிக்கையைப் பெற்று சபைக்கு வந்து நின்றான். மன்னர் பிரகதிரதர் வியக்கும் வண்ணம் வித்தகளைச் செய்துகாட்டினான். மன்னர் கவரப்பட்டார். புஸ்யமித்ரன் படை தளபதியாக நியமிக்கப்பட்டான். 

தளபதி புஸ்ய மித்ரனின் படை வளர்ந்தது. அரசு கஜானாவில் இருந்து அரச இராணுவத்திற்கு அதிக நிதி அளிக்கப்பட்டது. வீரர்கள் உற்சாகமானார்கள். தளபதியின் வாக்கை தேவ வாக்காக கருத ஆரம்பித்தார்கள். அதுவரை பௌத்த வழியில் சைவம் மட்டும் உண்டுக்கொண்டு இருந்த வீரர்களுக்கு தளபதியின் ஆணைக்கினங்க அசைவ உணவுகளும் இறைசிகளும் வழங்கப்பட்டது. மாட்டிறைச்சி உண்டால்தான் கிரேக்கர்களுக்கு எதிராக திராணியுடன் போர் செய்ய முடியும் என்ற புஸ்யமித்ரனின் வாக்கை அரசர் நம்பினார். பவுத்தை பின் பற்றிக்கொண்டே வீரர்கள் அதிலிருந்து மெதுவாக விலகளானார்கள். 

இது ராஜ்ய சபையில் இருந்த அநேக பௌத்த துறவிகளின் அகிம்சையை சோதித்தது.  படைத்தளபதிக்கு எதிராக மன்னரிடம் பல முறையீடுகளும் குற்றச்சாட்டுகளும் வந்து சேர்ந்தன. மன்னர் புஸ்யமித்ரனுக்கு ஆதரவாக நின்றார். வீரர்களின் பேராதரவு, மன்னரின் நம்பிக்கை – புஸ்யமித்ரனின் பலத்தை அதிகரித்தது. தனது நம்பிக்கைகளையும் மதசார்புகளையும் வீரர்களின் மீது அதிகம் செலுத்தலானன். புஸ்யமித்ரனின் செல்வாக்கு அதிகரித்தது. 

அன்று அந்தி சாய்ந்த வேலை. மன்னர் தன் அறைக்குள் தனது முக்கிய மந்திரிகளின் பேசிக்கொண்டு இருந்தார். ஒற்றன் வந்திருப்பதாக தகவல் வருகிறது. மந்திரிகளைக் கலைத்துவிட்டு ஒற்றனை அழைக்கிறார். ஒற்றன் தன் ஓலையை மன்னரிடம் தருகிறான். கங்கையைக் கடந்து மகதத்தை நோக்கி கிரேக்கர்களின் படையைத் திரட்டிக்கொண்டு டெமெட்ரியஸ் வந்துகொண்டு இருப்பதுதான் தகவல். மன்னர் புஸ்யமித்ரனை வரச்சொல்லி அழைக்கிறார். சிறிது நேரத்தில் புஸ்யமித்ரன் வருகிறான். தங்களைவிட உயரமான, அடர் மார்போடு ஆஜானுபாகுவான தரைப்படைகள், தங்களைவிட மூன்று மடங்கு பெரிய குதிரை படைகள் என வெற்றி பெற எல்லா வாய்ப்புடன் மகதத்தை அழிக்க எதிரி வந்துகொண்டிருப்பதை மன்னர் கவலையுடன் தளபதியிடம் கூற, 

புஸ்யமித்ர சுங்கர்

புஸ்யமித்ரன் அவர்களை வீழ்த்துவதற்கான எல்லா வழிகளையும் தான் வைத்திருப்பதாகவும், தங்கள் ராஜ்யத்தின் ரதகஜபுரவி படைகள் தயாராக இருப்பதாகவும் மன்னரிடம் கூறுகிறான். சிறிது ஆசுவாசமான மன்னரை ராஜ்ஜியத்தின் ராணுவத்தைப் பார்க்க அழைக்கிறான் புஸ்யமித்ரன். மன்னர் ஒப்புக்கொள்கிறார். 

பொழுது விடிகிறது. அதுதான் தனது கடைசி பொழுது என்று தெரியாமல் ராஜா பிரகதிரதன் புஸ்யமித்ரன் அழைத்த இடத்திற்கு அவன் கேட்டுக்கொண்டவாறே யாருக்கும் சொல்லாமல் புறப்படுகிறார். புஸ்யமித்ரனே தனது ரதத்தில் அரசரை அழைத்து செல்கிறான். தான் திரட்டி பயிற்றுவித்த இராணுவ தளவாடங்களை காண்பிக்கிறான்.

காலான் படை, குதிரை படை கடந்து யானை படைக்கு வருகிறார் மன்னர். புஸ்யமித்ரன் தான் வளர்க்கும் யானையை ஆசையோடு காண்பிக்க மன்னரை அழைக்கிறான். மன்னர் அவனைத் தொடர்கிறார். மூர்க்கமான பெரிய தந்தங்கள் கொண்ட யானையது. புஸ்யமித்ரன் தவிர்த்து இதுவரை வேறு யாருக்கும் அடிபணிந்ததில்லை என்று பாகன் மன்னரை எச்சரித்துக்கொண்டே இருக்கையில் மன்னரை கீழே விட்டுவிட்டு யானை மீது ஏறிய புஸ்யமித்ரன், யாரும் எதிர்பாராத நிமிடம் யானையின் கழுத்தை இறுக்கி பிடிக்க யானை பிளிறிகொண்டே தனது காலால் மன்னரை மிதிக்கிறது. கணநேரத்தில் வீரர்கள் சூழ்ந்திருந்த பூமியில் மன்னர் பிரகதிரதன் துடிதுடித்து இறக்கிறார்.

சலனம் இல்லாமல் புஸ்யமித்ரன் இறங்கி வந்து மன்னரின் வாளை எடுத்து உயர்த்தி “இனி எந்த ஒரு பவுத்தனும் பார்ப்பனரை அடிமைப்படுத்த முடியாது” என்று கொக்கரிக்கிறான். பிரகதிரதன் மௌரியருடன் மௌரிய பேரரசு வீழ்கிறது. இதற்கடுத்து மன்னரின் ராஜ்ய சொந்தங்கள் வேட்டையாடப்படுகின்றனர். மன்னர் சபையில் இருந்த பௌத்த பிக்குக்களின் தலை கொய்யப்படுகிறார்கள். பவுத்த மடாலையங்கள் தீயிட்டு கொளுத்தப்படுகிறது. பாடாலிபுத்திரம்,  சாஞ்சி நகரங்களில் இருந்த பவுத்தர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள்.

இதுவரை பவுத்தர்களுக்கு அரசிடம் இருந்து வந்த சலுகைகள் ரத்தாகிறது. நாடே தீயில் மூழ்கிய நிலம்போல் தகித்துக்கொன்டிருக்க புஸ்யமித்ரம் தனக்குத்தானே முடி சூட்டிக்கொள்கிறான். பெளதர்களை விரட்டி ஒரு பார்ப்பன அரசர் தனது படைபலத்துடன் இரண்டு அஸ்வமேக யாகங்களை நடத்தி புதிய சாம்ராஜ்யத்தின் தொடக்கத்தில் புள்ளி வைக்கிறான். இந்தியாவின் முதல் பார்ப்பன அரசான, சுங்கா பேரரசு உதயமானது.

முந்தைய தொடர்கள்:

1.அசோகரால் கொல்லப்பட்ட சமணர்கள் – https://bit.ly/2J0GIYo

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. ரோம் எரிகிறது- ஷ்ருதி.R
  2. அசோகரால் கொல்லப்பட்ட சமணர்கள் - ஷ்ருதி.R