பாடல்

கான மஞ்ஞை அறை ஈன் முட்டை

வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்

குன்ற நாடன் கேண்மை என்றும்

நன்றுமன் வாழி தோழி! உண்கண்

நீரொடு ஓராங்குத் தணப்ப,

உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே.

 

ரு பெரிய மலைக்காடு

அந்த பெரிய மலைக்காட்டில் ஒரு சிறிய குன்று.

அந்தச் சிறிய குன்றில் ஒரு சிறிய பொந்து இருக்கிறது.

அந்தச் சிறிய பொந்தில் ஒரு மயில் முட்டை இட்டிருக்கிறது. அந்த மயில் அந்த முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருந்தது.

முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருந்த அந்தப் பெண் மயில் கால் ஆற நடப்பதற்காக அது வெளியே நடைப்பயிற்சிக்குப் போயிருந்தது.

அது ஒரு பகல் நேரம்.

நல்ல வெயில்.

அந்தச் சிறிய குன்றுக்கு ஒரு சிறிய குரங்குக்குட்டி வருகிறது.

அந்தக் குரங்கின் குட்டியின் முகம் கன்னங்கரேர் என்று இருக்கிறது.

குரங்குக்குட்டி மயில் முட்டைகளைப் பார்க்கிறது.

அது விளையாடுவதற்காக அந்த முட்டைகளில் ஒன்றை அது வெளியே எடுத்துக்கொண்டு வருகிறது.

அந்தக் குரங்குக் குட்டி அந்த முட்டையைப் பாறைகளில் உருட்டி உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறது.

குரங்குக் குட்டி பாறைமேல் உருட்டி உருட்டி விளையாடிக்கொண்டிருக்கிற அந்த முட்டையில் உயிருள்ள அழகான ஒரு மயில்குஞ்சு இருக்கிறது.

கபிலர்
குறுந்தொகை 38