கரையாத நிழல்கள் – 5
‘Accept as it is’. உளவியல்துறையில் தனிப்பட்ட முறையில் நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பண்பு. ‘எந்த ஒன்றையும் முழுமையாக அதன் தனித்த பண்புகளுடன் ஏற்றுக்கொள்ளுதல்’. நீங்கள் ஒரு கம்யூனிச சிந்தனையாளராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு இந்தச் சொல்லில் நிச்சயம் விமர்சனங்கள் இருக்கும். துன்பங்களை ஏற்றுக்கொள்ள பழகிவிட்டால் அதன் காரணங்களுக்கு எதிராக எப்படி மக்களைத் திரட்டுவது? ‘அநீதிகளை ஏற்றுக்கொள்ள பழகுங்கள் என போதிப்பதை அநீதிகளுக்கு எதிராக மக்களைத் திரட்டுவதே நேர்மையானது’ என நீங்கள் வாதிடலாம். நானும் அதில் உடன்படுகிறேன். ஆனால் நான் இங்கு சொல்ல வந்தது மாறாத ஒன்றை அது மாறாதது அல்லது மாற்ற முடியாதது என புரிந்துகொள்வது மிகவும் முக்கியமாக அதைத் தன்னால் மாற்றிவிட முடியும் என நம்பாமல் இருப்பது.
இந்த உலகில் மாறாதது என்று ஒன்று இருக்கிறதா? மாற்றம் ஒன்றுதானே மாறாதாது என நீங்கள் கேட்கலாம். என்னளவில் உலகில் மாற்றமுடியாத ஒன்று இருக்கிறதென்றால் அது ஒருவருடைய தனிப்பட்ட ஆளுமையாகத்தான் இருக்க முடியும். நமது ஆளுமை பண்புகள் நமது மரபணுவோடு தொடர்புடையவை. அதாவது நாம் இப்படிப்பட்ட ஆளுமையாகத்தான் இருப்போம் என்பது நாம் பிறப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. நமது மரபணுக்கள்தான் நமது ஆளுமையை நிர்ணயிக்கின்றன. அப்படி என்றால் இந்த உலகத்தில் இருந்து ஒரு மனிதன் எதையுமே கற்றுக்கொள்வதில்லையா? கல்வி, வாசிப்பு, மனிதர்களின் அறம், பிற மனிதர்களின் வளர்ப்பு என அனைத்துமே உபயோகமற்றதா? பிறப்பதற்கு முன்பே நமது அத்தனைப் பண்புகளும் முடிவு செய்யப்பட்டிருக்கும் என்றால் இந்த உலகத்தில் நாம் என்னதான் கற்றுக்கொள்கிறோம்?
வெளியுலகம் நமது ஆளுமையைச் செலுமைப்படுத்துகிறது. எது அறம் என்ன சொல்லிக்கொடுக்கிறது. வெளியுலகத்தில் இருந்து நாம் கற்றுக்கொண்டவைகளை வைத்து அதற்கு ஏற்றார்போல நமது ஆளுமையை செலுமைப்படுத்திக்கொள்கிறோம். அதாவது நமது ஆளுமையை வெளிப்படுத்துவதில் சில சாமர்த்தியங்களை நாம் கற்றுக்கொள்கிறோம். சமூகத்தோடு மிகவும் இணக்கமான பண்புகளை உடையவர்கள் அறத்தின் பால் மிகவும் தீர்க்கமானவர்களாக வளர்கிறார்கள். இந்தப் பண்பு குறைவாக பெற்றவர்கள் பொதுவாக பிற மனிதர்களின்மீதான கரிசனங்களைவிட தன்னலம் மிக்கவர்களாக வளர்கிறார்கள். வெளியுலகம் அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. தங்களது ஆளுமையைப் பொறுத்து தேவையானவற்றை நாம் அதிலிருந்து தேர்வு செய்துகொள்கிறோம்.
ஒருவரிடம் நிகழும் அகம், புறவய மாற்றங்கள் தன்னிச்சையாக நிகழ்வதே. பண்புகளை நிர்ணயிக்கும் மரபணுக்கள் மற்றும் வெளியுலகில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து இந்த மாற்றங்கள் தன்னிச்சையாக அந்த தனிநபரினுள் நிகழ்கிறது. அதனால் ஒருவரின் ஆளுமையில் ஏற்படும் மாற்றங்களும் தன்னிசையாகவே நடைபெறுகின்றன. இதில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது ‘ஒரு மனிதனால் இன்னொரு மனிதனின் ஆளுமையை ஒரு போதும் மாற்றிவிட முடியாது’.
“தினமும் காலையில் எழுந்து எல்லாருக்கும் சமச்சி வச்சிட்டு, கொழந்தைய ஸ்கூல்க்கு ரெடி பண்ணி, சாப்பாடு ஊட்டி, எல்லாருக்கும் சாப்பாடு கட்டி, நானும் சாப்ட்டு கிளம்பி வேலைக்குப் போறேன். எங்க மாமியார் அங்கதான் இருக்காங்க, கொஞ்சம் உதவியா இருக்கலாம்ல?” என்று கேட்ட பெண்ணிடம் திருப்பி கேட்டேன் “என்னமாதிரி உதவி எதிர்பார்க்கறீங்க?” அந்தப் பெண்ணுக்குச் சொல்ல தெரியல. மாமியார் உதவி செய்தால் சரியாகக்கூடியதல்ல அந்தப் பெண்ணின் பிரச்சினை. உதவி என்பது வேலைகளைப் பகிர்ந்துகொள்வதல்ல. அந்தப் பெண்ணின் தவிப்பிற்குக் காரணம் காலையில் இருந்து இரவுவரை தொடர்ச்சியாக வேலை செய்துகொண்டிருக்கும் தனக்கு எந்தவித அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பதுதான்.
“அய்யோ பாவம் இந்தப் புள்ள இவ்வளவு கஷ்டபடறாளே” என மாமியார் புரிந்துகொண்டு ஒரு வார்த்தை சொன்னால் அவள் இதைவிட அதிக வேலை செய்வதற்கு தயாரானவளாகத்தான் தெரிந்தாள். சக மனிதர்களிடம் இருந்து கிடைக்கும் உண்மையான அங்கீகாரங்களைத் தவிர உழைப்பவர்களுக்கு வேறு என்ன தேவை இருக்கிறது? அதை செய்ய தவறும் போதே மனிதர்கள் சோர்ந்து போகிறார்கள்.
“அவங்ககிட்ட இருந்துதான் இது கிடைக்கலயே அப்புறம் ஏன் வீணா எதிர்பார்க்கறீங்க?” என்றேன்.
“கஷ்டமா இருக்கு சார், அவங்க புள்ளங்களுக்கு அவங்க பேரப்புள்ளங்களுக்காகதானே உழைக்கிறேன். அத புரிஞ்சிகிட்டா சந்தோசமாதானே இருக்கும்”
“அவங்களுக்குப் புரியாதுனு நினைக்கிறீங்களா?. புரியும். ஆனா அவங்க இருக்கிற மாமியார்ங்கிற நிலையில இப்படித்தான் நடந்துக்குனும்னு அவங்களோட தனிப்பட்ட அனுபவங்கள்ல இருந்து அவங்க கத்துகிட்டு வந்துருக்காங்க, அவங்களே நினைச்சாலும் அத மாத்திக்க முடியாது. அது ஒரு நாள்ல உருவானதும் இல்ல, ஒரு நாள்ல மாறப்போறதும் இல்ல. அதனால் அத நீங்க எதிர்பார்க்காதீங்க, அவங்க உங்கள புரிஞ்சிட்டுதான் இருப்பாங்க…. ஆனா அத வெளிப்படுத்தறது இல்ல, அதற்கு உங்கள பிடிக்காது அல்லது உங்க மேல உள்ள கோபம் காரணம் அல்ல, அவங்களோட தனிப்பட்ட அனுபங்களால அவங்க அப்படி இருக்காங்க. அதனால் அவங்ககிட்ட இருந்து இத எதிர்பார்க்கறத விட்டுட்டு அவங்களோட நிலமைய நீங்க புரிஞ்சிக்கங்க. மத்தவங்க நம்மல புரிஞ்சிக்கலனு சொல்ற நாம, மத்தவங்கள எந்த அளவுக்கு புரிஞ்சி வெச்சிருக்கோம்?” என்றேன்.
அந்தப் பெண் நிறைய யோசித்தாள். ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளாய் கிளம்பி போனாள்.
நிறைய நேரங்களில் நாம் ஒருவரை முழுமையாக அப்படியே புரிந்துகொள்வதில்லை. நமக்கு ஏற்றவாறு, நமது விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்றவாறு அவருடைய பண்புகளை உள்வாங்கிக்கொள்கிறோம். நமது இந்தப் புரிதலுக்கு முரணாக அவர் நடந்துகொள்ளும்போது ‘அப்படி எல்லாம் இருக்காது’ என்று நமக்குநாமே சமாதானம் செய்து கொள்கிறோம், நமது புரிதலை மறுபரிசீலனை செய்வதிலை. பின்னாளில் இப்படி நாம் மறுக்கப்பட்டு புரிந்துகொண்ட பண்புகள் அவரிடம் இருந்து வெளிப்படும்போது அது பல முரண்களுக்கு காரணமாகி விடுகின்றது. அதுவே உறவுசார்ந்த சிக்கல்களை ஏற்படுத்திவிடுகின்றது.
நிறைய நேரங்களில் நமது எதிர்பார்ப்புகள் நம்மை மையம்கொண்டதாகவே அதாவது சுயநல போக்குடனே இருக்கின்றன. உண்மையை நெருங்க நமக்கு இருக்கும் தயக்கத்தின் விளைவாக எதிர்பார்ப்புகள் பொய்க்கும் தருணங்களுக்கு நம்மளவில் புதிய விளக்கங்களைக் கொடுத்துக்கொள்கிறோம். ஏனென்றால் உண்மை அத்தனை உவப்பானதாக இல்லை அது நம்மை, நமது மதிப்பீட்டுத்திறனைப் பொய்யாக்குகிறது. அதனால்தான் அது அத்தனை சுலபமானதாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இல்லை. இந்த Denielதான் உளவியலில் பல முரண்களுக்கு காரணமாய் இருக்கின்றன. ஃபிராய்ட் இதை நமது ஈகோவை தற்காத்துக்கொள்ளும் முயற்சி என்கிறார். ஆனாம் சில நேரங்களில் ஒரு நிரந்தர நிம்மதிக்காக நாம் நமது ஈகோவை தியாகம் செய்வதற்கு நாம் தயாராக வேண்டும், “Accept as it is” என்பது இத்தகைய ஈகோவை சீண்டிப்பார்க்கும் முயற்சி ஆனால் உண்மையை உண்மையாய் எந்த முன்முடிவுகளுமின்றி அணுகுவது, ஏற்றுக்கொள்வது. நீண்ட கால நோக்கில் நமது ஈகோவை காத்துக்கொள்ளும் பக்குவம். அதனால் இனி திறந்த கண்களுடனும், திறந்த மனதுடனும் நாம் எப்போதும் காத்திருப்போம்.
முந்தைய தொடர்கள்:
4.‘ஒற்றை சொல்’: உறவுகள் முறியும் தருணம் – https://bit.ly/2QtEN2r
3.உடம்பார் அழியின்… – https://bit.ly/33tdYRm
2.அந்தியின் இருளில் நடப்பவர்கள்- https://bit.ly/3952h4q
1.மனித விசித்திரங்களினூடே ஒரு பயணம் – https://bit.ly/3952418