ஒரு சட்டப்பையில், அல்லது சுருக்குப்பையில் அல்லது ஒரு பர்ஸில் பல நாணயங்களைப் போட்டுக்கொண்டு வருகிறோம். அது ஒருபுறம் கிழிந்திருக்கிறது, பொத்தல் விழுந்திருக்கிறது இருக்கிறது என்பதைக் கவனிக்கவில்லை. அதன்வழியாக நாணயங்கள் நழுவி விடுகின்றன. ஒரு சமயத்தில் கையை அதற்குள்ளே செலுத்தி துழாவுகிறோம். வெறுமையாக இருக்கிறது. கை அந்தக் கிழிசலை அதனூடாக வெறுமையைச் சந்திக்கிறது.

அதைப்போலத்தன் நாம் நமது சுயம் என்று ஒரு பெயரை, ஒரு சமூக அடையாளத்தை, ஜாதி, மதம், ஊர், குலம், மொழி என்று பலவற்றைப் போட்டுக்கொண்டு வருகிறோம். ஒரு கட்டத்தில் அவை எல்லாம் நழுவிப்போய் வெறுமைய, சூன்யத்தை சந்திக்கிறோம். அப்போது நம்மை நிலைநிறுத்திக்கொள்ள மற்றமையை நாடுகிறோம்.

நம்மை உருவாக்கிய இறைவன், கடவுள் என்று ஒன்றைக் கற்பித்துக்கொள்கிறோம். அந்த இறைபிம்பத்தை நோக்கி காதலால் கசிந்து உருகுகிறோம். கண்ணீர்விட்டு இறைஞ்சுகிறோம். மெய்மறந்து, அதாவது நமது உடலை மறந்து பரத்தின் வசமாகி, பரவசப்படுகிறோம்.

இப்படி உடலை மறக்காமல் மற்றைமையின் வசப்படுவதும் எவ்வளவு அழகானது. அது மற்றொரு உடல் நம்மை அணைக்கும்போது, நம்முடல் அதன் கதகதப்பை, சுவாசத்தை உணரும்போது வியர்வையும், உமிழ்நீரும் கலக்கும்போது நம் சுயத்தின் எல்லைகள் கலைந்து மற்றமையின் ஆலிங்கனத்தில் நம் உடல் ஆசுவாசமடைகிறது. உயிரின் பெருக்கத்திற்காக நம் உடலில் பொதிந்துள்ள காமத்தின் சுரப்பிகளை அந்த ஆலிங்கனம் திறக்கும்போது மேலும் உடல் திளைப்புற அமைதி அடைகிறது.

காதல் என்ற உயிர்ச்செயல்பாட்டின் பேறாற்றல் இப்படியாக மெய்யாகவும், மெய்மறந்தும் பரவசப்படுதலேயாம். அதனால்தான் காதல் போயின் சாதல் என்றார் மகாகவி.

உயிர்ச்செயல்பாட்டின் மையத்தில் உயிரின் பெருக்கம் என்னும் இனப்பெருக்கம் அமைந்திருப்பதால் அதற்கான உடல் உறவுக்கு இட்டுச்செல்லும் ஆண் பெண் எதிர்பாலின காதல் அதிகம் கொண்டாடப்படும் காதலின் வகைப்பாடாக உள்ளது. ஆனால் அது மட்டுமே காதல் அல்ல.

மற்றமையின் பல்நூறு வடிவங்கள் மீதும் காதல் கொள்வது சாத்தியம்தான். இப்படியாக காதலின் இலக்குகள் பன்மையுறும் மனது, காதலின் ஊற்றாக மாறுவதும், காதலிப்பது என்பது நிரந்தரச் செயல்பாடாக பல்கி எந்த ஒரு தனிப்பட்ட இலக்கையும் கொள்ளாத நிலையையும் அடையும்.

காதலின் அத்தகு முதிர்ந்த நிலையில் தோற்றுவாய் உண்டு, இலக்கில்லை என்பதை விளக்க ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஆங்கிலத்தில் லவ் என்பது இன்ட்ரான்ஸிடிவ் வெர்ப் என்றார். அதாவது நான் நடக்கிறேன் என்று சொல்லும்போது எதை நடக்கிறேன் என்று சொல்ல முடியாது என்பதைப்போல நான் காதிலிக்கிறேன் என்று சொல்லும்போது எதை, யாரை காதலிக்கிறேன் என்று சொல்ல முடியாது என்றார்.

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.