புதிதாக இடம் மாறிய பின்னர் அன்று காலை காப்பி அருந்துவதற்கென  கணவருடன் அந்த ரெஸ்டாரெண்டுக்கு  சென்றிருந்தேன். இருவருக்கும் காப்பி கொண்டுவரச் சொல்லிவிட்டுப் பேசிக் கொண்டிருந்த வேளையில், அந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் அருகில் இருந்த மேசையில் வந்தமர்ந்தார்.  எங்களுக்குக் காப்பியைக் கொண்டுவந்து கொடுத்த பரிமாறுபவர், அந்த முதியவரிடம் சென்று என்ன வேண்டும் என்று கேட்கவில்லை. ஒரு சிறு புன்னகையுடன் அவரைப் பார்த்துத் தலையாட்டியபடி சென்றார்.

 

சிறிது நேரத்தில் வந்த பணியாளர், இரண்டு காப்பிகளையும், அதனுடன் இரண்டு கேக்குகளையும் மேசையில் வைத்துச் சென்றார். எங்களுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. எதற்கு இரண்டு காப்பிகள்? ‘சரி, இவர் உணவுப் பிரியராக இருப்பார்’ என்று நினைக்கும்போது, ஆச்சரியமான செயல் ஒன்று அங்கே நடந்தது. முன்னால் இருப்பவர் ஒருவருக்குக் கொடுப்பது போல, ஒரு காப்பியையும், கேக்கையும் எதிரே நகர்த்தி , அவருடன்  உரையாடும் பாவனையில் தன் காப்பியையும் கேக்கையும் உட்கொள்ள ஆரம்பித்தார். வார்த்தைகளற்ற அந்த இடம் அமைதியாகவே இருந்தது.

 

அவரை மனநிலை பிறழ்ந்தவரோ என நினைத்துப் பரிதாபத்துடன் பார்த்தோம். காப்பி குடித்து முடிந்ததும், பணத்தைச் செலுத்திவிட்டு எழுந்து சென்றார். உண்ணப்படாமல் ஒரு காப்பியும், கேக்கும் அப்படியே இருந்தது. இந்தச் செயல் எங்களுக்குள் ஒரு அவஸ்தையை ஏற்படுத்தியது. எங்கள் மனநிலையை அறிந்து கொண்ட பணியாளர்  “ஆறு வருடங்களுக்கு முன்னர், இவர் தினமும் மனைவியுடன் இங்கு  வந்து காப்பி அருந்துவார். கேக்கை மனைவி விரும்பி உண்பதை ரசித்துக் கொண்டிருப்பார். ஆனால், அவரது மனைவி விபத்து ஒன்றில் மரணமானதைத் தொடர்ந்து இன்றுவரை தினமும் அவர் இந்த ரெஸ்டாரெண்டுக்கு வந்து, மனைவிக்கும் பரிமாறி தானும் காப்பி அருந்திச் செல்வது வழக்கம் “ எனக்கூறி முடித்தார்.

காதலர் தினம் காதலர் தினம் என்கிறோமே, காதல் என்றால் என்னவென்று நாம் நிஜமாகவே உணர்ந்துகொண்ட தினம் அது.