காதலின் சங்கடமான தருணம் என்பது காதலைவிட முக்கியமானதாய் மாறிப்போன வேறொன்றிற்காக காதலைக் கைவிடுகிற தருணம்தான். காதல் நம் வாழ்க்கைக்குள் நுழையும் போது அது நம் அன்றாடங்களின் ஒரு அங்கமாக மாறிவிடுகிறது. நினைவு மறந்து தூக்கம் வரும் நிமிடம் வரை உள்ளுக்குள் காதல்தான் நம்மோடு விழித்திருக்கிறது. கண்விழிக்கிற பொழுதுகளின் முதல் நினைவாக காதல்தான் இருக்கிறது. காதலுக்காகத்தான் நாம் ஆடைகள் தேர்வு செய்கிறோம், அலங்காரம் செய்துகொள்கிறோம், நமது நாளின் நேரங்களை வகுத்துக் கொள்கிறோம். காதல் நம்மோடு கூடவே பயணித்துக் கொண்டிருக்கிறது. பார்க்கிற எல்லா திரைப்படங்களிலும் கேட்கிற எல்லாப் பாடல்களிலும் நம் காதலே பேசப்பட்டிருக்கும். இந்த உலகத்திற்குள் இருந்துகொண்டே நாம் காதலின் உலகத்திற்குள் வாழ்ந்து கொண்டிருப்போம். நம் நிகழ்கால நிகழ்வுகளும் வருங்காலக் கனவுகளும் காதலால் ஆனதாய்த்தான் இருக்கிறது. ஆனாலும் காலத்தின் மாயங்களால் காதலை வேறு எதன் பொருட்டோ கைவிட நேர்கிற தருணம் இருக்கிறதே அதுதான் காதலின் மிகுந்த சங்கடமான தருணம். பேசிப் பிரிந்தாலும் பேசாமலே பிரிந்தாலும் பிரிவு என்பது நம்மை இந்த உலகத்திலிருந்து தனித்து விடப்பட்ட அனாதையாக்கிவிடும். அந்த வலியானது மயக்க ஊசி போடாமலே தையல் போடுவதைப் போல வதை நிறைந்தது. அந்தத் தருணம்தான் இந்தக் காதல் ஏன் நம் வாழ்வில் வந்ததோ என மருகவைக்கிற தருணம்.