காதலின் பித்தும் காதலிகளின் அளவற்ற அன்பும் அதன் தொடர்ச்சியாக எழும் மனநெருக்கடியும் முன்னாள் காதலர்களும் இன்னாள் காதலர்களும் அனுபவித்த அனுபவிக்கின்ற ஒன்றே. இன்றைய காதலர் தினத்தில் எழுதவேண்டுமென்று நினைத்தவுடன் என் மனதில்  தோன்றியவை அந்நெருக்கடி தருணங்களே. குறிப்பாக காதலிக்கத்துவங்கும் நாட்களில் காதலர்களில் பெரும்பாலானோருக்கு தனக்கு பிடித்த அனைத்தையும் தங்கள் காதலர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆவல் பட்டாம்பூச்சியாய் அடிவயிற்றில் பறக்கத்துவங்குகிறது. அங்கிருந்தே அவர்களது இச்சையின் மணம் சுதந்திரமாக காற்றில் படரத்துவங்குகிறது. ஆனால் நம் கலாச்சார சூழலென்ற கொள்ளிவாய்ப்பிசாசு அவற்றை முழுமையாக வெளிப்படுத்த எவ்வித வாய்ப்பையும் இலகுவாக வழங்கிவிடுவதில்லை. இந்தியாவில் காதலெர்களுக்கென்று தனிப்பட்ட பூங்காக்கள் எதாவது இருக்கிறதா என்ன!!உண்மையை சொல்லவேண்டுமென்றால் ஒரு ஆணோ பெண்ணோ தத்தமது காதலரால் தழுவப்படுவதற்கும் முத்தமிடப்படுவதற்கும் தேர்ந்தெடுக்கும் இடங்கள் இங்கே(B&C centres ) திரையரங்காகவோ அல்லது ஒதுக்குபுறமான வயல்காடுகளாகவோதான் இருக்கிறது அதுவும் அங்கே படையலை அள்ளித்திங்கும் அவசரத்தில் எதையும் முழுமையாக திண்ண இயலாமல் போய்விடும்.

இதன் தொடர்ச்சியாக அவர்கள் வேட்கை தனியாத விரக்தியோடு எந்த சிறு இடம் கிடைத்தாலும் தொட்டுக்கொள்ளவும் தழுவவுமே விரும்புவார்கள் .காதலர்கள் நெருங்கி அமர்ந்து செல்லும் பேருந்து பயணங்களில் இதை கவனித்திருக்கமுடியும் .ஒருவேளை  பொதுவெளியில் காதலர்களின் இச்செயல்களை இயல்பாக எடுத்துக்கொள்ள இயலாமல் பதட்டமடையும் நபர்கள் காதல் என்பதை வேறுவிதமாக புரிந்துகொண்டிருக்கலாம். ஆதியிலிருந்து பரிணாம மாற்றம் எல்லாவற்றிலும் நடந்துவருகிறது காதல் என்ற சொல்லும் அதைப்பற்றிய கற்பிதங்களும் அந்த மாற்றத்திற்கு உட்படுகின்றன அவ்வளவே.பேருந்து நிலையத்தில் ஒருமுறை  “உன்கையைப்பிடித்துக்கொண்டு நடக்க ஆசையாயிருக்கிறது ஆனால் அனைவரும் நம்மை பார்ப்பதைப்போலவே இருப்பதால் பயமாயிருக்கிறது என்று சொன்ன என் காதலியின் கைகளை வேண்டுமென்றே பிடித்துக்கொண்டு நடந்துவர “ஏம்பா இது என்ன உங்க வீடா இப்படியா நடந்து போறது என்று கேட்ட மத்தியவயதினனை கெட்டவார்த்தையால் திட்டியதற்காக என்னுடன் இரண்டு நாட்கள் அவள் பேசவேயில்லை. இப்பொழுது அது பெருநகரங்களில் சகஜமாக ஒன்றாகிவிட்டது ஆனால் சிற்றூர் காதலர்களுக்கு இன்னும் அதே அனுபவம் தொடர்வதாக இருக்கலாம். இது என்ன பெரிய நெருக்கடியா என்றால் அய்யாமார்களே காதலில் எல்லை  மீறாமல் முத்தமிடுவதை அவமானம் என்று நினைக்கும் தலைமுறை காதலர்களுக்கு இன்னும் எத்தனை நூற்றாண்டிற்கு புனிதப்போர்வை போர்த்தி இயல்பான இச்சையைக்கூட வெளிப்படுத்த இயலாமல் அவர்களை கசக்கி காதலின் பரவசத்தை அனுபவிக்க இயலாமல் செய்வீர்கள்!நம் சாட்டையை அவர்கள் மீது சுழற்ற வேண்டாம் அவர்கள் உடைகளை

நடைகளை வசைபாடவேண்டாம்

கண்ணால் பார்த்தேன் காதல் செய்தேனென்ற மொன்னை போதனையை அவர்கள் மீது திணிக்கவேண்டாம் இன்றொரு நாளாவது தங்கள் பயங்கள் கடந்து

காதலர்கள் முத்தமிடட்டும் மதம்,சாதி,இனம்,மொழி இடம் அனைத்தையும் கடந்து சகஜீவராசிகளாக கட்டுகளற்று முத்தமிடட்டும் அது ஒரு பெருமழையாக  உலகை நிறைக்கட்டும்.