2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து நீக்கப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டியை மீண்டும் இணைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு நடக்கும் விளையாட்டுப் போட்டியில் டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 2010,2014 ஆம் ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் இடம் பெற்றிருந்தது. ஆனால் சர்வதேச போட்டிகளை காரணம் காட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த போட்டிகளுக்கு அணியை அனுப்பவில்லை. அதனால் கடந்த ஆண்டு(2018) ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து கிரிக்கெட் நீக்கப்பட்டது.
இந்நிலையில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து 2022 ஆம் ஆண்டு 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோவ்(Hongzhou) நகரில் நடக்கவுள்ளது. இதில் கிரிக்கெட்டை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் டி20 போட்டிகள் மட்டுமே இடம் பெறும் என இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் ராஜீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு முறைப்படி கடிதம் மூலம் தெரியப்படுத்தப்படும் என தெரிவித்தார்.