புத்தகங்களை திருடுகிறவன் -11
சகோதரிகள் (ரஷ்ய நாவல்)
அஸ்காட் முக்தார் எழுதியது. 500 பக்கம்
அற்புதமான உஸ்பெக் நாவல். நான் இதுவரை இப்படி ஒரு புதினத்தை கேள்விபட்டிருக்கவில்லை. ஆனால், ரஷ்ய புரட்சிக்கு முன்பான நாவல்கள் இரண்டாம் உலகப் போருக்கு பின்பான நாவல்கள் என பல வாசித்த எனக்கு ஜான் ரீட் எழுதிய உலகை குலுக்கிய 10 நாட்களில் புரட்சி நடந்த காலத்தை பற்றிய பேசிய புத்தகம் போல புரட்சி நடந்து முடிந்த பிறகு மக்களிடம் மாஸ்கோவிலிருந்து, லெனின் கிராடிலிருந்து தொலை தூரத்தில் செம்படையினர் புரட்சியின் எதிரிகளை எப்படி அடக்கினர் என்று பேசுகிற பல புதினங்களும் படித்திருக்கிறேன். ஆனால் புரட்சி நடந்த சமீபத்திய ஆண்டுகளில் மதக்குழுக்கள் மற்றும் இனக் குழுக்கள் மத்தியில் நடந்த தொழில் வளர்ச்சி, மக்கள் அதை புரிந்துக்கொண்டவிதம், நடந்த மாற்றங்கள் பற்றிய இலக்கியம் எதாவது இருக்கிறதா (நான் விரும்பிய வடிவத்தில்) என்ற ஏக்கம் கூட எனக்கிருந்தது. நிக்கொலாய் ஓஸ்திரோவ்ஸ்க்கிய் அவர்களின் வீரம் விளைந்தது மற்றும் சிங்கிஸ் ஐத்மாத்தவ் படைப்புகளை தவிர்த்து அந்த கால கட்டத்துக்கு முன்பான ஒன்றை வெகு காலமாக தேடிக்கொண்டிருந்தேன். பா. ரஞ்சித் அவர்களின் அலுவலகத்தில் உள்ள நூலக அலமாரியில் இருந்த புத்தகங்கள் ஒன்றிரண்டை எடுத்து புரட்டிக்கொண்டிருந்தேன், அதில் இந்த புத்தகத்தை பார்த்துவிட்டேன். எப்படியோ அல்லது என் வழக்கமான முறையிலோ சகோதரிகள் நாவலை கண்டுக்கொண்டேன். இந்த 500 பக்க புத்தகத்தை எப்படியாவது நகர்த்திக்கொண்டு போக வேண்டுமே என்று தவித்துக்கொண்டிருந்தேன்… சரி முயற்சிப்போம் என்று அங்குள்ள தம்பி ஒருவரிடம் இதை நான் கொண்டு போகலாமா என்று கேட்க “அண்ணா இவ்வளவு நாள்ல நீங்க ஒன்னையும் எதையும் எடுத்து போகலியேன்னு நெனைச்சிகிட்டிருந்தேன் ..இன்னாண்ணா கேட்டுக்குனு எடுத்துக்குனு போங்கண்ணா”
“சரி நோட்டுல பதிவு பண்ணிட்டு குடுங்க” என்று நான்
“ண்ணோவ் எடுத்துக்குனு போங்கண்ணா” என்று தம்பி.
அடடா இத்தனை காலம் நான் எந்த மாதிரி ஒன்றுக்கு ஏங்கிக்கொண்டிருந்தேனோ அந்த மாதிரியிலானதொரு படைப்பு.
1919,20 ஆண்டுகளில் நடக்கிற கதை
நய்மன்சா என்கிற கல்வி பற்றிய எந்த சிந்தனையுமற்ற நெசவாளர்கள் வாழுகிற ஒரு கிராமம்… குரலால் மட்டுமே அடையாளம் காணப்படுமளவு பர்தா அணிந்த பெண்கள், மதவாதிகள் வழிகாட்டும் கட்டுபாடான சமூகம், எல்லோர் வீட்டிலும் நெசவு தறி .அது தான் அவர்களது வயிற்றிபாட்டை அரைகுறையாக தீர்க்கிறது.
அதில்லாமல் குத்ரதுல்லா என்கிற முதலாளி ஒரு நெசவு கூடம் வைத்திருக்கிறான்… பெரும்பாலும் பெண்களே அவனது தொழிலாளர்கள். அவர்களை பலவீனமாக்கி சுரண்டுவது, அடக்குமுறை என நசநசப்பான பழைய உலகின் எச்சம் போல அந்த தொழிற் கூடம் இருக்கிறது. கிராமத்தில் கரடு முரடான பருத்தியாலான மாட்டுத்துணியே நெய்கிறார்கள். அந்த ஊரின் ஒரு நெசவாலை முதலாளியைத் தவிர மற்றவர்களுக்கு வறுமை மட்டும் தான் எந்த வசதிகளுமற்ற கிராமம்… அந்த கால கட்டத்தில் புரட்சி நடந்து முடிந்திருக்க புரட்சியாளர்களை ஒடுக்க பணக்கார குலாக்குகள் சூழ்ச்சிகள் தாக்குதல்கள் என போராட்டமான காலம்.
சபீர் என்கிற செம்படை வீரன் அவனும் அரசியல் புரிதலுக்கு முன் வழக்கம் போல தான் தாய் நாவலில் வரும் பாவேல் போல. அவனுக்கு அனக்கோன் என்கிற மனைவி , இரண்டு பெண் குழந்தைகள் பசோராட் மூத்தவள், துர்சுனாய் இளையவள்…. சபீர் தன் வறுமை காரணமாக எழும் சச்சரவை எதிர் கொள்ள வழியற்று குடிப்பது, தன் பழைய தறியை கோபத்தில் உடைப்பது, மனைவி மீது எரிந்து விழுவது என்று உலகம் பூராவுமான மனிதனை போலதானிருக்கிறான்… அந்த நாளில் ரஷ்ய புரட்சியின் புது ஒளி அவன் கிராமம் வரை பாய்கிறது. அதில் கவரப்பட்ட சபீர் புரட்சி நிலைத்து நிற்க அதன் எதிரிகளோடு போராட கிளம்புகிறான்.. எப்போதும் வீடு திரும்பும் போது கொஞ்சம் ரொட்டி கொண்டு வருவான்… ஒரு நாள் சபீர் செம்படையினருக்கு உதவ கிளம்புவான். அதைப் பற்றி அவ்வளவாக அறியாத அவனது மனைவி அனக்கோன் சபீரிடம் இப்படி கேட்பாள்
“அன்பே நீங்கள் வரும் போது என்ன கொண்டு வருவீர்கள்”
“சின்னஞ்சிறு சிவப்பு நட்சத்திரம் கொண்டு வருவேன்” என்று சொல்லிவிட்டு கிளம்புவான் ..ஆனால் திரும்பி வராதவனை தேடிப்போகும் அனக்கோனும் அவளது இரண்டு பெண் குழந்தைகளும் சபீரை உயிரற்ற சடலமாக பார்கிறார்கள். அவன் தொப்பியிலிருந்த சின்னஞ்சிறு சிவப்பு நட்சத்திம் மட்டும் அவர்களுக்கு கிடைக்கும்.
சபீரின் நண்பனான மற்றொரு செம்படை வீரன் யெபீம் சபீரின் குடும்பத்துக்கு ஆதரவு தருகிறான். காலமான சபீரின் மனைவி அனக்கோன் தன் சின்னஞ்சிறு பெண் குழந்தைகளுடன் தன் வாழ்வை கடப்பதில் அரசியல் எவ்விதம் உதவுகிறது என்பதில் புதினம் வேகமெடுக்க ஜூராக்கோன் என்கிற பெண் தன் பர்தாவை கழற்றிவிட்டு கிராமத்தில் அரசியல் பணி செய்வதுடன்.. கிராமத்துப் பெண்களை அரசியல்படுத்தி பெண்களே நிர்வகிக்கும் கூட்டுறவு விற்பனை நிலையம் அமைக்கிறாள், பர்தாவுக்குள் ஏன் பதுங்கி கிடக்கிறீர்கள் என்று அவர்களுக்கு மானுட சுதந்திரம் பற்றி பேசுகிறாள். பிறகு தங்கள் கிராமத்தில் நவீன நெசவாலை ஒன்றை அமைக்க திட்டமிடுகிறார்கள். நவீனமென்ற எது ஒன்றையும் கண்டறியாத ஆண்களால் சுரண்டலுக்காளான பெண்கள் தங்கள் பர்தாங்களை தூக்கியெறிந்து கூட்டுறவு நிலையம், நெசவாலை, கல்வி என்று யோசிக்க… பழைய முதலாளியின் தொழில் நிலைய பெண்கள் ஜுராக்கோன் பின்னால் அணி திரள முதலாளி குத்ரதுல்லாவின் நெசவுக்கூடம் ஆளற்று காலியாகிறது. அதனால் கோபமுற்ற புரட்சியின் எதிரிகளான முதலாளிகள், மதவாதிகளுடன் சேர்ந்து ஜுரோகோனை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள்… அந்த கிராமத்தில் இருக்கும் வளங்களை வைத்தே ஒரு நெசவாலையை கட்ட கிராம பெண்களில் ஒரு குழுவை அமைக்க ஒரு குழு மில்லை கட்டும் வேலையில் இறங்க, இன்னொரு குழுவை கட்சி மாஸ்கோவுக்கு நவீன நெசவாலையை இயக்குவது எப்படி என்கிற பயிற்சிக்கு அனுப்புகிறது. அதே நேரம் இங்கு கட்டிடம் கட்ட துவங்க நகரிலிருந்து நவீன கருவிகள் வர உள்ளூர் மதவெறியர்களும் புரட்சியை விரும்பாதவர்களும் ஆலை உருவாகாமல் இருப்பதற்கான சதி வேலைகளை செய்வதுடன் ஜுராக்கானையும் கொலை செய்கிறார்கள். ஆறு வார உழைப்பில் படிப்படியாக வளர்ந்த மில் கட்டிடம் அய்யோக்கியர்களின் சதி காரணமாக இடிந்து விழ கிராம பெண்களில் சிலர் கடவுளின் கோபம்தான் என்பதான கட்டு கதைகளில் சிக்கி மீண்டும் பர்தாவுக்குள் தங்களை சிக்க வைத்துக்கொள்ள நினைக்க அனக்கோன் கொல்லப்பட்ட ஜுராக்கோனின் இடத்தில் நின்று மக்களை ஒன்று திரட்டி வழி நடத்துகிறாள் … அதே நேரம் மாஸ்கோவில் தொழில் நுட்பம் பயின்ற குழு கிராமத்துக்கு திரும்ப படித்த பெண்கள் இப்போது ஊக்கமுடன் செயல்பட ஆலை வானுயர்ந்து வளர்கிறது.
இந்த நாவலில் கணவனை இழந்த அனக்கோனுக்கும் அந்த தொழிற்சாலை கட்டுமானத்தின் தோப்ரகோட்டா பொறியாளனுக்குமான மிக மெல்லிய காதல் மிக அற்புமாக நாவலில் ஒரு கொடிபோல படருகிறது…. வாசிப்பவர்கள் காதல் காட்கிகளை காண முடியாது. ஆனால் உணர முடியும். பழைய பிரபு வம்சத்தில் முறையற்று பிறந்த தொப்ரகோட்டா பணக்கார வம்சத்தவரோடு தொடர்புடையவன் .அவனது மனைவியும் அவளது பணக்கார குடும்பத்தினரும் புரட்சி நடந்த காலத்தில் சொத்துகளை சுருட்டிக்கொண்டு ஐரோப்பா ஓடிவிடுகிறார்கள். தொப்ரகோட்டா மட்டும் ரஷ்யாவிலே தங்கிவிடுகிறான். ஆனாலும் அவன் எப்போதும் மற்றவர்களால் சந்தேகத்துடன் பார்க்க படுகிறான். அவனுக்கும் கூட ஒரு அச்சம் இருந்துக்கொண்டேயிருக்கிறது… புரட்சியின் புதல்வர்கள் அதை எப்படி எதிர்கொண்டு அவனை புரிந்துகொள்கிறார்கள். அவனும் கூட எப்படி மிக சிறந்த உழைக்கும் மனிதனாக மாறுகிறான் என்பதை பற்றி நாவல் அற்புதமாக பேசுகிறது.
குறிப்பாக ஆண்கள் பெண்களை எப்படி நடத்தினார்கள் என்பது எப்போதும் நமக்கு அதிர்ச்சியளிக்கிற விடயமே என்றாலும் உஸ்பெக் கிராமம் ஒன்றில் ஆதரவற்ற ஒரு பெண்ணை ஏற்கனவே மணமான ஒரு வியாபாரி தன் வீட்டில் வேலைகாரியாக சேர்த்துக்கொள்ள, அவனது மனைவிகள் வேலைகாரியை கொடூரமாக துன்புறுத்த, அந்த நேரம் புதிய அரசு வேலைகாரரை வைத்துக்கொள்ள சட்டபடி வரி கட்ட வேண்டும் காரணம் அவளுக்கு முறையான சம்பளம் தருவதற்கு என்று சொல்ல வியாபாரி வரிகட்ட விருப்பமற்று அந்த பெண்ணை சட்டபடி கல்யாணம் செய்துக்கொள்கிறான்.மனைவியானால் அவளுக்கு வரியும் கட்ட தேவையில்லை . அதே நேரம் பாலியல்ரீதியாக சுரண்டிக்கொள்ளலாம் என்கிற பேருள்ளம் அவனுக்கு. அவளுக்கு குழந்தை பிறக்க இருவரையும் வைத்து காப்பாற்றுவது கட்டுபடியாகாததால் அவளை வீட்டைவிட்டு பழங்கால முறைபடி துறத்த புதிய புரட்சி அரசு அந்த பெண்ணுக்கு உதவிக்கு வந்து பெருந்தொகையை நட்ட ஈடாக வாங்கி தருகிற காட்சிகள் அன்றைய நாட்களை பிறகு உலகம் வியக்கும் நாடான சோவியத் ரஷ்யா அது பிறகு மறு கட்டுமானமானது… எல்லாவற்றையும் இந்த புதினம் அவதானிக்க வைக்கிறது.
கட்சி உறுப்பினன் எர்கேஷ் புரட்சியின் மீது பற்றுதி கொண்டு தன் காதலை கூட தள்ளி வைக்க நினைக்கிறான்.. மிக கண்டிப்பானவனாக இருப்பதால் ஓயாத உழைப்பு காரணமாக உடல் நலனையும் இழக்கிறான். மிக இறுக்கமாக அதிக கண்டிப்போடு இருப்பது தனக்கும் சமூகத்துக்கும் நல்ல விளைவுகளை உண்டாக்குவதில்லை என்பதை எர்கேஷ் என்கிற கதாபாத்திரம் மூலம் ஆசிரியர் மிக அற்புதமான படைப்பொன்றை உருவாக்கியிருக்கிறார்….. நார்மட், மற்றும் நாசோகாட் போன்ற பலவீனமான பழமைக்கும் புதுமைக்குமான மாற்றத்துக்கிடையில் சிக்கி அல்லலுறும் அப்பாவி மனிதர்களை அய்யோக்கியர்கள் எப்படி ஆட்டி படைக்கிறார்கள் அதே நேரம் அவர்களுக்கு நம்பிக்கையூட்டி நியாயத்தின் பக்கம் நின்று அனக்கோன் அவர்களை மீட்டெடுக்கிறாள்…. என்பதுடன் மக்கள் நெசவு ஆலையை கட்டி முடிக்கப்பட நவீன தறி இயந்திரங்கள் வந்து சேர்கிறது, கிராம மண் சாலைகள் கல் பாவிய நகரமாக உருமாறுகிறது, அந்த ஆலையை உருவாவதற்கான அரசியல் பண்பாட்டு சூழலை உருவாக்கிய ஜூராக்கோன் சமாதி தொழில் வளாகத்துக்கு அருகில் கம்பீரமாக நிற்க அனக்கோன் சிவப்பு வண்ண ரிப்பனை வெட்டி ஆலையை திறந்து வைக்கிறாள். தாங்கள் கட்டிய ஆலைக்குள் மக்கள் பேருவகையுடன் நுழைகிறார்கள். அந்த நேரம் பனி பொழிவு தொடங்குகிறது…. ஆனால் மேகம் கலைந்து சூரியனும் சுடர்கிறான்.
முடிவற்ற உலகின் முடிவிலா சாட்சி போல இந்த படைப்பு எனக்கு தோன்றியது. மனிதர்கள் காலம் காலமாக இருக்கிற கெட்டிதட்டி போன வாழ்வை அதே உப்பு சப்பற்ற சுவையுடன் அழுது வடித்து ,மன்றாடித் தொழுது, ஒன்றுமற்று புதை குழிகளுக்கு இளைப்பாற செல்கிறார்கள். அந்த வழக்கமான பாவனையிலிருந்து புரட்சி மக்களுக்கு புதிய உலகை, காற்றோட்டமுள்ள விசாலமான அர்த்தமுள்ள வாழ்வை, ஒற்றுமையை , புரிதலை உண்டாக்கி உலகுக்கு ஒரு வழிகாட்டியாய் இருக்கிறது என்று பேசுகிற சிறந்த புதினத்தை, நான் எவ்வளவு எழுதினாலும் இந்த நாவலின் ஒரு பகுதியை கூட என்னால் அப்பட்டமாக சொல்ல முடியாது. நீங்கள் வாசிக்கும் போது உள்ளம் களிப்பெய்துவது மட்டுமின்றி சிலதை உங்களால் உணரவும் முடியும்.. உங்கள் மேலுள்ள ஒன்றுக்கும் உதவாத ஏதோ ஒன்று கழன்று விழுந்துவிடும்…. சில புத்தகங்கள் நம்மை உறைந்து போக வைக்கிறது. சில சமயம் உலுக்கியெடுக்கிறது. குறைந்தளவு நம்மை மெல்லிய அளவு வழக்கமான முறையிலிருந்து வேறுவிதமாக பார்க்க சொல்லி கட்டாயப்படுத்துகிறது. சகோதரிகள் நூல் அதைச் செய்கிறது . இதில் முக்கிய கதாப்பாத்திரங்களான சகோதரிகளை பற்றி நான் பேசவில்லை நீங்கள் படித்துணருங்கள்.
மொழிபெயர்ப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்…..
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- சிங்கிஸ் ஐத்மாத்வ் : ஜமீலாவின் ‘’கிச்சினே பாலே ’’ -கரன் கார்க்கி
- அலெக்சாந்தர் புஷ்கினின் ’கேப்டன் மகள்’- கரன் கார்க்கி
- ‘’தாக்குங்கள்.. பெத்யூன் நம்முடன் இருக்கிறார்’’: ஒரு மருத்துவப் போராளியின் கதை- கரன் கார்க்கி
- உண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய்- கரன் கார்க்கி
- ருஷ்ய புரட்சியைப் பேசுகிற ஒற்றைப் புத்தகம்: ‘உலகை குலுக்கிய பத்து நாட்கள்’ - கரன் கார்க்கி
- சிங்கிஸ் ஐத்மாத்தவின் முதல் ஆசிரியன்: இரண்டு பாப்ளர் மரங்கள் - கரன் கார்க்கி
- லேவ் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு: அழிவற்ற அறத்தின் குரல் - கரன் கார்க்கி.
- நடப்பது என்பது எனக்கு வாசிப்பதுபோல, வாசிப்பது எனக்கு மண்ணில் நடப்பதுபோல - கரன்கார்க்கி
- லெனினுக்கு மரணமில்லை - கரன்கார்க்கி
- 1. புத்தகங்களைத் திருடுகிறவன்