6.புத்தகங்களைத் திருடுகிறவன்
இப்போதும் திருடி வந்த புத்தகத்தைப் பற்றி இப்போது பேசாவிட்டால் வேறு எப்போது பேசுவது… உலகின் மிக முக்கியமான 25 புத்தகங்களில் ஒன்றாக இதை பட்டியலிடுவார்கள்.
கார்ல் மார்க்ஸ் எழுதியதை லெனின் நடைமுறை படுத்திய புரட்சி நடந்த நாட்களைப் பற்றியது. மிக நெருக்கடியான புரட்சி நடந்த முதல் பத்து நாட்களைப் பற்றியது.
இந்த புத்தகத்தின் பெயர் உலகை குலுக்கிய பத்து நாட்கள், அமெரிக்க எழுத்தாளர் ஜான் ரீட் அவர்கள் எழுதியது. இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த நாட்களில், நான் உலகை முழுதாக கண்களை விரித்துக்கொண்டு பார்க்கத் தொடங்கியிருந்தேன். அப்படிப் பார்க்க இந்தப் புத்தகம் கற்றுக் கொடுத்தது.
நூற்றுக் கணக்கான போர் காட்சிகள் நிறைந்த படங்களைப் பார்த்த கிளர்ச்சி, எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ஏற்படுத்தும். புனைவு என்ற சொல்லுக்கே சின்ன இடமுமில்லை, அப்பட்டமான கறுப்பு என்பார்களே அப்படி …. இந்தப் புத்தகத்தை வாசித்த நாட்களில் என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் என்னால் கேள்வி கேட்கவும், உற்று நோக்கவும், மற்றவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும், ஏமாற்று, பாசாங்கு, பசப்பு அரசியல்களை ப் புரிந்துகொள்ளும் நெஞ்சுரம் ஏற்பட்டது போலிருந்தது என்று என்னால் உண்மையாகச் சொல்லமுடியும்.
உலகை குலுக்கிய பத்து நாட்கள் புத்தகம் வாசிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ‘டாக்டர்’ பட்டம் பெற்றதற்காக திரையுலகம் பாராட்டு விழா நடத்தியிருந்தது. நான், என் தம்பி, பாலிடெக்னிக்கில் பயிலும் என் உறவினர் என சிறுவர்களாகிய நாங்கள் பழைய நேரு திறந்தவெளி விளையாட்டரங்கில் நடக்கும் விழாவை வேடிக்கை பார்க்கப் போயிருந்தோம். எம்.ஜி.ஆர். மேடையேறிய தருணம், மக்கள் முண்டியடித்து அவரை அருகில் பார்க்கத் துடித்த ஆர்வக் கோளாறில் சிறுவர்களாகிய நாங்கள் சிக்கிக்கொண்டோம். அந்த சன சுனாமியடங்க பத்து நிமிடம் பிடித்தது. (சனங்களின் அலையில் நாங்கள் சிக்கி பிதுங்கிவிட்டோம். உயிரோடு வீட்டுக்குப் போனது அதிசயம்தான்.) அதுநாள் வரை எனக்கு எம்.ஜி.ஆர். மீதிருந்த சிறுவர்களுக்கே உரிய மயக்கம் தெளிய காரணம் அந்தப் புத்தகம்தான்…
உண்மையிலும் உண்மையான புரட்சியாளனை, உண்மையான மக்கள் தலைவனான வி.இ.லெனின் என்கிற விளாந்திமிர் இல்யிச் உல்யானவ் அவர்களை, உலகின் மிகச் சில அரிய மக்கள் தலைவரில் ஒருவரை மீண்டும் ஒருமுறை எனக்கு எடுத்துக்காட்டிய புத்தகம்.
சமநிலையற்று வர்க்கமாகப் பிளவுண்டிருக்கும் இந்த சமூக ஆக்கத்தின் உண்மையான பிரதிநிதிகளான உழைக்கும் மக்களின் ஆட்சியை சமைக்க பன்னெடுங்காலமாக வேலைகள் நடந்து வந்தன. பல்லாயிரம் உயிர் தியாகங்கள் செய்யப்பட்டன… அதன் இறுதி கட்டமான அந்தக் கடினமான நாட்களைப் பேசுகிறது என்பதைவிட காட்டுகிறது என்பேன். இந்தப் புத்தகம் அழகியல் மிக்க கவிதைகளால் ஆனதல்ல..
சிறு வயதில் கடைகளில் பொருள் வாங்கும்போது கொசுறு தருவார்கள். அப்படியான கடைகளில் ஒரு கடைக்காரர் எனக்கும் என்போன்ற சிறுவர்களுக்கும் எதாவது பொருள் வாங்கினால், அது பத்து காசுக்கு காப்பி தூளாகக்கூட இருக்கலாம்… கொசுறாக உடைத்தக் கடலையும் கொஞ்சம் நாட்டுச் சக்கரையும் தருவார். அவரை புரட்சித்தலைவர் என்று யாரோ சொல்ல, நாங்களும் அப்படியே அழைப்போம்… அப்படிதான் நம்மூர் ‘புரட்சித்தலைவர்கள்’ என்ற பட்டங்கள் எடுப்பாக இருக்க சூட்டிக்கொண்டவை என்று எனக்குப் புரிய வைத்த புத்தகம்.
இந்தப் புத்தகம்தான் நான் திருடி வந்து படித்த புத்தகம்… ஆனால் அந்தப் புத்தகமோ என் முழு இதயத்தை, அல்லது மனசாட்சியை, ஆன்மாவை என்று எழுத நினைத்தேன். அந்த வார்த்தையின் அர்த்தம் இங்கு மாய வாதமாக கருதப்படுவதால் அதைத் தவிர்க்கிறேன் (ஆன்மா என்பதற்கான பொருள் பற்றி எனக்கு தனிப்பட்ட ஒரு கருத்துண்டு. அது பற்றிய புதினம் ஒன்றெழுதவும் எனக்கு ஆசையுண்டு.)
ஒருவேளை இவ்வளவு காலம் புத்தக உரிமையாளர்களுக்கு தெரியாமல் நான் கொள்ளையடித்து வந்த பல புத்தகங்களையும், இப்போது வாசித்தப்பின் என்னை உலுக்கியெடுக்கும் இந்தப் புத்தகத்தையும் நான் ஒப்பீடு செய்து பார்க்கிறேன். முன்பு திருடிய புத்தகங்களின் பட்டியல் இப்படியாகத்தான் இருந்தது. நான்கைந்து அம்புலி மாமாக்கள்.. ஒன்றிரண்டு சாண்டில்யனின் வரலாற்று புனைவுகள், மிக அதிகமாக படக் கதை புத்தகங்கள்… ஆரம்ப நாட்களில் பட கதைகள்தான் என்னை ஒரேயடியாக கவர்ந்து இழுப்பவை. அவற்றைப் படித்து முடித்தவுடன் எங்கே எடுக்கப்பட்டதோ அங்கேயே வைத்துவிடுவது பற்றி நான் கவலைபட்டதில்லை….
ஆனால் இந்தப் புத்தகத்தை உரியவரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று என் உள்ளம் துடித்தது. அதே நேரம் புத்தகத்தையும் விட்டு பிரியமனமில்லை… காரணம், இந்த உலகில் நிகழ்ந்த அல்லது நிகழ்த்தப்பட்ட அரியதொரு நிகழ்வை எனக்குக் காட்டிய அந்தப் புத்தகத்துக்கும், அதை நான் வாசிக்க காரணமான மனிதருக்கும் நான் தருகிற மரியாதை அதை திருப்பி தந்துவிடவேண்டியதுதான். புத்தகத்தை எடுத்துக்கொண்டு திருப்பித்தர தொழிற்கல்வி மாணவர் விடுதிக்குப் போகிறேன்.. புத்தகத்துக்குரியவர் அறையைக் காலி செய்துகொண்டு போய்விட்டார் என்கிற தகவல் வந்தது… அதைவிட முக்கியமானது நான் எடுத்துச் சென்ற புத்தகங்களை அவர் எனக்குப் பரிசாக தந்துவிட்டதாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்… அப்படியானால் அந்தப் புத்தகத்தை எடுத்தது நான்தான் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. நான் அதை எடுத்துச் செல்ல அனுமதித்திருக்கிறார். அப்படிப்பட்ட மனிதரிடம் கேட்காமல் எடுத்து வந்த துயரம் 30 ஆண்டுகள் கழிந்த பின்னும் எனக்குண்டு.
இப்புத்தகத்திற்கு தோழர் வி.இ.லெனின் அவர்களே முன்னுரை எழுதியிருந்தார்கள். 1917இல் நடந்த புரட்சியின் மிக முக்கியமான அந்தப் பத்து நாட்களின் ஆவேசத்தை உயிர்த் துடிப்புடன் இந்தப் புத்தகம் பேசுகிறது. உலகிலுள்ள ஒவ்வொரு தொழிலாளிக்கும் இந்தப் புத்தகத்தை நான் பரிந்துரைக்கிறேன் என்று லெனின் முகவுரையில் சொல்கிறார்.
ரஷ்யரல்லாத அன்னியர்களில் புரட்சியை நேரில் கண்ணுற்றவர்கள் மிகச் சொற்பமானவர்களே.. ஜான் ரீட் அவர்களில் மிக முக்கியமானவர். அக்டோபர் புரட்சியானது கடந்தகால வரலாறாகிவிட்டது. வருங்கால இளந்தலைமுறையினருக்கு இப்புத்தகம் தனி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ரீட் அவர்களின் இப்புத்தகத்தை இதிகாச படைப்பென்றே சொல்ல வேண்டும். இப்படி எழுதியவர், லெனின் அவர்களின் துணைவியார் நதேழ்தா குரூப்ஸ்கயா.
அமெரிக்கரான இந்நூலின் ஆசிரியர் ஜான் ரீட், புரட்சி காலத்தில் அதனோடு தன்னை இணைத்துக்கொண்டவர். இந்நூலை எழுதி முடிக்கும் முன்பே அந்த மதிப்பிற்குரிய தோழர் டைபஸ் (டைப்பாய்டு அல்ல) காய்ச்சலுக்கு ஆளாகி ருஷ்யாவின் கிரம்ளின் செஞ்சதுக்கத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்.
போல்ஷ்விக், மென்ஷிவிக், என்ற வார்த்தைகளைப் புரட்சி, எதிர்ப்புரட்சி என்பதன் அர்த்தங்களை எனக்குக் கற்பித்த புத்தகம். பாரிஸ் கம்யூனிஸ்டிகளின் வீர வரலாற்றை பேசுகிற ஒட்டுமொத்த புத்தகங்களுக்கு இணையான ருஷ்ய புரட்சியைப் பேசுகிற ஒற்றைப் புத்தகம் இந்த உலகை குலுக்கிய பத்து நாட்கள்.
புரட்சியாளர்கள் , எதிர்ப்புரட்சியாளர்கள், குள்ளநரித்தனம் கொண்ட தந்திரவாதிகள், நேர்மையற்ற பாசாங்கு அரசியல் வணிகர்கள், சனங்களைப் பற்றியென்ன, கழிசடைகள்… எசமானர்கள் தான் கடவுளுக்கு சமமானவர்கள் என்று மக்கள் மேல் பாய்ந்து பிடுங்கிய ராணுவ அதிகாரிகள் … என அன்றைய எல்லா நிலைமைகளும் காட்சிகளாய் நம் கண் முன்னே ஒரு திரைப்படத்தைப்போல அப்பட்டமாகக் காட்டுகிற புத்தகம்.
குறிப்பாக, புரட்சி நடந்த ஆண்டான 1917, குளிர்காலம் நீண்டதாக இருந்தது. பெரும்பாலான பணக்காரர்கள், மிக செல்வம் படைத்த வணிகர்கள், அண்டை நாடுகளுக்கு செல்வங்களுடன் ஓடிவிடுகிறார்கள். கடுமையான பஞ்சம். பனி, மழை, குளிர் இவற்றில் போதுமான ஆடைகளற்று உழைக்கும் மக்கள் பெண்கள் ,சிறுவர்களென விடியும் முன்பிருந்தே பால், ரொட்டி, சக்கரை, புகையிலைக்காக கடுங்குளிரில் நிற்பதை ரீட் மிக தத்ரூபமாக விவரிக்கிறார்…
அதே நேரம் புதிதாக அமைந்த பாட்டாளிகளின் ஆட்சியை ஒழிக்க விரும்பும் பணக்காரர்கள்… வழக்கம்போல கவிதை, நாடகம், ஓவியமென தங்க, வெள்ளி பேழைகளில் போதுமான சக்கரையுடன் தரமான ரொட்டியை சுமந்துகொண்டு சொகுசாக நமது ஜார் மன்னர் திரும்பவும் வருவாரா இல்லை ஜெர்மன் படை வந்து இந்த போல்ஷிவிக்குகளை ஒழித்துகட்டுவார்களா என்று ஏக்கத்தோடு குசுகுசுக்கும் காட்சிகள்.
டிராமில் ஒரு புரட்சிப்படையைச் சேர்ந்த பெண், தன் சக தோழரை ‘தோழர்’ என்று அழைத்ததற்காக, அவளைப் பணியிலிருந்து துரத்தியடிக்கும் ஒரு முதலாளி..
குழப்பத்தை உண்டாக்கி அதில் ஆதாயம் தேட முயன்ற அதிகாரிகள், ராணுவ ஜெனரல்கள், அமைச்சர்கள், எலும்பு துண்டுகளுக்கு விலை போகாத புரட்சியாளர்களை கண்டறிவது, கைது செய்வது என அவர்களுக்கு ஓயாத வேலை…. ஏனெனில் புரட்சியை நசுக்கி நாசமாக்கினால்தானே பழையபடி மக்களை ஏய்த்து கஜானாக்களில் செல்வத்தை குவிக்க முடியும். அதனால் புரட்சியை ஒழித்துக்கட்ட முதல் உலகப்போரில் யார் எதிரிகளாக இருந்தார்களோ அதே ஜெர்மன் ராணுவ முதலாளிகளுடன் சேர்ந்து ஓயாமல் சதி செய்தபடியே இருந்தவர்களைப் பற்றிய சான்றுகளுடன், அவர்களை எப்படித் தங்கள் திறத்தால் புரட்சியாளர்கள் வென்றார்கள் என்கிற சம்பவங்கள் இந்த புத்தகத்தில் ஏராளம்.
இந்த நூலை உங்களுக்கு என்னால் புரிய வைக்க முடியுமென நான் நம்பவில்லை. ஆனால் இந்தியாவின் இன்றைய நாட்களை அப்படியே பேசுகிறது அன்றைக்கு எழுதப்பட்ட இந்தப் புத்தகம்.
நாட்டுக்காக இன்னும் தியாகம் புரியுங்கள், இன்னும் அதிகமாக என்று ஆட்சியில் இருப்பவர்கள் புரட்சியில் பங்கேற்காத, அதைப்பற்றி புரிந்துகொள்ளாத மக்களைப் பார்த்து, அதிகாரிகள் கத்துகிறார்கள். அதே நேரம் எல்லா வசதிகளும் பெற்றிருப்பவர்கள் எதையும் கைவிடாதபடி சுகமாக இருக்கிறார்கள் அல்லது மேலதிகமான பணத்துடன் வெளிநாடுகளுக்கு ஓடிவிடுகிறார்கள்.
லெனின் முதல் உலகப்போரில் ஈடுபட்டிருந்த ருஷ்யர்களை, “சண்டை நமக்கு வேண்டாம். இப்போது நமக்கு வேண்டியது சமாதானம். உள்ளூரில் புரட்சிக்கு உதவ நாடு திரும்புங்கள்…. புரட்சிக்கு எதிரான கயவர்களை அடக்க வாருங்கள். சண்டை வேண்டாம், நமக்கு அண்டை நாடுகளுடன் சமாதானமே இப்போதைய தேவை” என அழைக்கிறார். ஆனால் புரட்சிக்கு எதிரான ஆட்களோ, “ஜெர்மனி நம் எதிரி. அவனை ஒழிக்க வேண்டும். யுத்தத்துக்கு போங்கள். யுத்தம்… யுத்தம்” என்று கத்துகிறார்கள்… லெனின் பேச்சைக் கேட்டு யாராவது போர்முனையிலிருந்து திரும்பினால் மரண தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கிறார்கள்.
அவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக ஒரு படையாள் இப்படிக் கேட்கிறான்:
“நான் போர் புரிவது எதற்காக என எனக்குச் சொல்லுங்கள்… சுதந்திர ருஷ்யாவிற்காகவா? அல்லது சனநாயகத்துக்காகவா? அல்லது கொள்ளைக்கார முதலாளிகளுக்காகவா? நான் போர் புரிவது புரட்சியின் பாதுகாப்புக்காக என்பதை உங்களால் எனக்கு நிரூபிக்க முடியுமா? சுதந்திர ருஷ்யாவுக்காக நான் போரிடுகிறேன். சனநாயகத்துக்காக நான் போரிடுகிறேன் என்று நீங்கள் நிரூபித்தால் எதற்கு மரண தண்டனை அச்சுறுத்தல்? நானே என் ருஷ்யாவிற்காக சண்டையிடுவேன். நிலம் விவசாயிகளுக்கும், ஆலை தொழிலாளர்களுக்கும், ஆட்சியதிகாரம் மக்களுக்கும் என்றாகுமென்றால் நான் சண்டையிடுவது அர்த்தமுள்ளதாக இருக்கும். அதற்காக மட்டுமே நான் போர் புரிவேன்.”
இப்படியாக எல்லா போர் முனைகளிலும் பேச்சுகள் எழுகிறது. வீரர்கள் உள் நாட்டின் புரட்சிகர தொழிலாளர்களுடன் சேர்ந்துகொள்ள நாடு திரும்புகிறார்கள்.
உள் நாட்டின் புரட்சிகர அமைப்புகளுடன் சேர்ந்து மென்ஷ்விக்குகளான புரட்சியின் எதிரிகளோடு போராடக்களத்தில் நிற்கிறார்கள். புரட்சிப்படைகளை சீர்குலைக்க புரட்சிக்கு எதிரான பணம்படைத்தவர்கள் ஒயினை இலவசமாக வினியோகிக்கிறார்கள். புரட்சிப் படையினர் அதை கண்டுபிடித்து ஒயின்களை நாசமாக்கி மூழ்கடிக்கிறார்கள்.
கேரென்ஸ்கி போன்ற ஆட்கள் புரட்சிக்கெதிராக எவ்வளவு தந்திரத்தையும், வன்மத்தையும் காட்டியும் போல்ஷிவிக்குகள் தங்கள் தியாகத்தாலும் நேர்மையாலும் முடிவில் ஆட்சியதிகாரத்தைக் கைபற்றுகிறார்கள்.
குளிர்கால அரண்மனையில் 50 கோடி ரூபில் மதிப்புள்ள பொருட்கள் சூரையாடப்பட்டதாகப் புரட்சிக்கு எதிரானவர்களால் குற்றம் சாட்டப்பட்டது… உண்மையில் பல அரிய பொருட்கள் செப்டம்பரிலேயே மாஸ்கோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. சில, மிக பாதுகாப்பான முறையில் அரண்மனையின் நிலவறைகளில் பதுக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தன. பல பொருட்கள் திருடப்பட்டிருந்தன என்பது உண்மையே. பல நூறு ஆண்டுகளாக உழைக்கும் மக்கள் நுழையமுடியாத அந்த அரண்மனைக்குள் உட்புகுந்ததும் இதுவரை பார்த்தறியாத விலை மதிக்க முடியாத பொக்கிசங்களை அள்ளிச்செல்லவே… அதை மீட்க, திரும்ப ஒப்படைக்க சோவியத் அரசாங்கம் தனிப்படையமைத்து திரும்பத் தரும்படி உத்தரவிடுகிறது.
பொருட்களை எடுத்துச் சென்ற மக்கள் புரட்சியினர், அரசின் வார்த்தைக்கு மதிப்பளித்து அதை திருப்பித் தருகிற கண்ணியம் .. அதையும் விலைக்கு வாங்கிக் கடத்தத் துணியும் பணம்படைத்த கசடர்களின் கேடுகெட்ட செயல், என பலவிதமான காட்சிகள்.
நடிப்பு கவர்ச்சிகளைப் புரட்சித்தலைவர் என்று நம்பிய 17 வயது இளைஞனின் உள்ளத்தை.. அறமற்ற சுரண்டல் அரசியல் சூழலில் வாழும் இலக்கிய மனம் கொண்ட சின்னஞ்சிறுவனை, இந்தப் புத்தகம் என்ன பாடு படுத்தியிருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியாது. இன்றைய எனது புதின படைப்புகளுக்கான சக்தியூற்று இதுபோன்ற புத்தகங்களின்மீதான வாசிப்பும், புரிதலும்தான் வேறென்ன? என்னைச் சுற்றியும், உங்களைச் சுற்றியும் இதுபோன்றவைகள்தானே நெருக்குகிறது.
புரட்சிக்கு எதிரான முதலாளித்துவ புளுகர்களின் பேச்சுக்குப் பலியாகாதீர்கள். தொழிலாளர்களே, படையாட்களே, விவசாயிகளே, புரட்சிகர பற்றுறுதியும் கட்டுபாடும் காட்டும்படி உங்களை அறை கூவியழைக்கிறோம். மக்கள் புரட்சியின் வெற்றி உறுதியிலும் உறுதி என்கிற அறிவிப்புகள் கொண்ட சுவரொட்டிகள்.
கசாக்குகள் வீரதீரமான படை என்று புகழ்பெற்றது. ஆனால் அந்தப் படைகளின் தலைவர் கலேடின், கசாக்குகளின் பெரும் நிலப்பிரபுகளுக்கு ஆதரவானவர். எழை கசாக்கு விவசாயிகளுக்கு நிலம் பகிர்ந்தளிக்கும் நடைமுறைக்கு எதிராக இருந்தவர். ஆனால் அவரது படையினரோ லெனின் அவர்களின் நிலம் பகிர்ந்தளிப்பு முறைக்கு ஆதரவாக இருந்தார்கள், எனவே அவர்கள் புரட்சிப்படைக்கு ஆதரவாக மாற, கலேடின் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிலை உண்டானது.
புரட்சி முடிவுக்கு வந்ததும் லெனின் முதல் உலகப்போரிலிருந்து ருஷ்யாவை முழுமையாக விடுவித்துக்கொள்கிறார்… அண்டை நாடுகளுடன் சமாதானம்… படையாட்கள் உள்ளூர் நிலைமைகளைச் சரிசெய்ய மக்களுக்கு உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறார். புரட்சியை ஒழித்துக்கட்ட முதலாளிகள் பழைய ஜாரை மீண்டும் பதவியில் அமர்த்த பிற்போக்கு வெளிநாட்டு உதவியுடன் நசுக்க முனைய, மக்கள் அவர்களை ஆயுதங்களால் எதிர்கொள்கிற காட்சிகளை ரீட் பார்த்ததை பார்த்தபடி விளக்குகிறார். போல்ஷ்விக்குகளின் தியாகம், அதனால் விளைந்த ருஷ்ய புரட்சியை இப்புத்தகம்போல் சொல்ல வேறு சில புத்தகங்களும் அரிதாக இருக்கலாம்… இந்த நூலை மிகச் சிறப்பான ஒன்று என நீங்கள் வாசிக்கும்போது புரிந்துகொள்வீர்கள்.
அடுத்து இரண்டாம் உலகப்போரில் விமானச் சண்டையில் தன் இரண்டு கால்கள் இழந்த பின்னும் 18 நாட்கள் பனியில் ஊர்ந்து கடந்த சாகசக்காரனை, மீண்டும் விமானியாகி விண்ணில் எதிரிகளோடு சமர் புரிந்த உண்மை மனிதனின் வரலாற்று புதினத்தை பற்றிப் பேசுவோம்.
உலகை உலுக்கிய புத்தகம், என்னை உலுக்கியது. உங்களையும் உலுக்கும்.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
5.சிங்கிஸ் ஐத்மாத்தவின் முதல் ஆசிரியன் – https://bit.ly/39cpdiw
4. லேவ் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு – https://bit.ly/2xRVWN0
3.நடப்பது என்பது எனக்கு வாசிப்பதுபோல – https://bit.ly/3b7r09O
2.லெனினுக்கு மரணமில்லை – https://bit.ly/2IXJU79
1.புத்தகங்களைத் திருடுகிறவன் – https://bit.ly/3baGDNO
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- சகோதரிகள் : கரன் கார்க்கி
- சிங்கிஸ் ஐத்மாத்வ் : ஜமீலாவின் ‘’கிச்சினே பாலே ’’ -கரன் கார்க்கி
- அலெக்சாந்தர் புஷ்கினின் ’கேப்டன் மகள்’- கரன் கார்க்கி
- ‘’தாக்குங்கள்.. பெத்யூன் நம்முடன் இருக்கிறார்’’: ஒரு மருத்துவப் போராளியின் கதை- கரன் கார்க்கி
- உண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய்- கரன் கார்க்கி
- சிங்கிஸ் ஐத்மாத்தவின் முதல் ஆசிரியன்: இரண்டு பாப்ளர் மரங்கள் - கரன் கார்க்கி
- லேவ் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு: அழிவற்ற அறத்தின் குரல் - கரன் கார்க்கி.
- நடப்பது என்பது எனக்கு வாசிப்பதுபோல, வாசிப்பது எனக்கு மண்ணில் நடப்பதுபோல - கரன்கார்க்கி
- லெனினுக்கு மரணமில்லை - கரன்கார்க்கி
- 1. புத்தகங்களைத் திருடுகிறவன்