3.புத்தகங்களைத் திருடுகிறவன்
திருடி வந்த புத்தகத்தைப் பற்றிப் பேச எனக்குக் கொள்ளையாசை. ஆனால், என்ன நாம் ஓரளவேனும் ஆர்வமூட்டும் விதமாகப் பேசிக்கொண்டிருக்கிறேம் அதில் ஒன்றும் சுணக்கம் ஏற்படுத்த நான் விரும்பவில்லை… லெனின் வாழ்க்கை வரலாற்றைப் படித்த நாளில் அது புதினமா அல்லது வரலாறா என்கிற குழப்பம் இருந்தது… நான் யாரிடமாவது போய் கேட்பது,
புத்தகத்தின் பின்பக்க இணைப்பாக வாசகர்களுக்கு என்று 9 வரிகளில் எதோ எழுதப்பட்டுருந்தது. அந்தப் புத்கம் குறித்தும், அதன் தயாரிப்புக் குறித்தும் கடிதம் எழுதச்சொல்லி ருஷ்ய நாட்டின் முகவரி தந்திருந்தார்கள்.. ஏனோ அந்த நல்ல செயலை நான் செய்யவில்லை. ஒருவேலை அதை செயல்படுத்தும் ஆசை எனக்கு இல்லாமல் போனது. ஒரு ரஷ்ய பதிப்பகத்துக்குக் கடிதம் எழுதுகிற நல்ல வாய்ப்பை இழந்துவிட்ட துயரம் எனக்கு இப்போது ஏற்படுகிறது. ஆனால் நல்ல வேலையாக இன்னொரு பக்கத்தில் சென்னையில் அந்த பதிப்பகத்தின் புத்தகங்கள் விற்கும் முகவரியை போட்டிருந்தார்கள்.
136, அண்ணாசாலை, சென்னை 600002
என் கால்கள் இனியும் நிற்குமா என்ன? அந்தச் சூழலில் எப்படியோ என் கைகளுக்கு எழுபது ரூபாய் வந்து சேர்ந்திருந்தது. பணம் வந்த கதையை நான் இப்போது சொல்லப்போவதில்லை அது தேவையில்லாமல் சில பக்கங்களை விழுங்கிவிடும்…
டிமலஸ் சாலையிலிருந்து சால்ட் கோட்ரஸ் வழியே நடந்தே அண்ணா சாலைக்கு போய்விட்டேன்… நடப்பது என்பது எனக்கு வாசிப்பதுபோல வாசிப்பது எனக்கு மண்ணில் நடப்பதுபோல இந்த நடை 1983லிருந்து 2007 வரை நீடித்தது. அதிக தூரம் நடக்க இப்போது வாய்ப்பதில்லை. மலைச்சாலையில் புத்தகக் கடை தேடி ஓடிக்கொண்டிருக்கிறேன். வழியில் தேவியில் மெக்னஸ் கோல்டு சினிமா என்னை இழுக்கிறது… ம்… தப்பித்து முகவரி தேடி ஓடுகிறேன். அதோ நியு செஞ்சுரி புக் ஹவுஸ்.
எனக்கான பல்கலைக்கழகத்துக்குள் நுழைகிறேன் என்று நான் அப்போது அறிந்திருக்கவில்லை. மாலை நான்கு மணிக்கு நுழைந்திருப்பேன். அங்கிருந்த அறிவியல் புத்தகங்கள் அடேங்கப்பா வண்ணப்படங்களுடன் விண்வெளியைப்பற்றி அவ்வளவு புத்தகங்கள் நான் நுழைந்த முதல் புத்தகக் கடை என்பது மட்டுமல்ல எனக்காக நான் நுழைந்த கடையும் அது தான் அதற்க்கு முன் அம்மாவுக்காக மட்டுமே நான் கடைகளுக்கு போவேன்… எங்கள் குடும்பத்துக்கு என்ன பொருளெல்லாம் தேவையோ அத்தனையும் என் அம்மாவின் வழிகாட்டுதலில் வாங்கி வருகிறவன் இப்போது எனக்காக என் ஆசைக்காக கடையொன்றில் புத்தகங்களை வாரி வாரி அணைத்துக்கொண்டிருந்தேன்.
என் ஆசான்கள் அலமாரிகளில் ஒளிந்துக்கொண்டு என்னைப் பார்க்கிறார்கள். என்னை பேரன்போடு கைநீட்டி அழைக்கிறார்கள் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லையே… புத்கங்களின் விலையைப் பார்த்தால் எனக்கு மலைப்பு தாங்கவில்லை நான் தடுமாறிக் கொண்டிருப்பதைப் பார்த்து கடைக்காரர் உதவிக்கு வந்தார்.
ஐந்து ரூபாய், இரண்டு ரூபாய் விலைகளை என்னால் நம்ப முடியவில்லை.. அவரிடம் கேட்க அவர் அதைவிடவும் குறைவான விலையைச் சொல்ல எனக்கு ஆச்சரியம் விண்வெளிக்கு போவோமா.. புத்தகம் ஐந்தாறு அறிவியல் புத்தகம் எடுத்துக்கொண்டுபோய் கணக்கு போட்டால் இன்னொரு சின்ன நாவலும் ஒரு பெரிய நாவலும் அதில் இருந்தது.
அந்த நாவல் சாகும்வரை என் இதயத்தை வருடப்போகிற புதினமென்று எனக்குத் தெரியாது, சின்னதும் சாதாரணமானதில்லை மொத்த புத்தகங்களும் நாற்பத்தைந்து ரூபாய்கள்தான், நெகிழியில் போட்டு தந்தார்கள்… ஆமாம் நான் சின்னப்பையனல்ல மவுண்ட் ரோட்டுக்கு வந்து புத்தகங்கள் வாங்குகிறவனாம்… விடை கொடு அம்மா உனக்கு சொல்லாமலே நான் இன்று சினிமாவும் பார்க்கப் போகிறேன் சரியா உனக்கு இதை ஒரு போதும் சொல்லப்போவதில்லை. ஆமாம்… பதின் வயதின் மனம் கொந்தளிக்க, உடலும் விரைத்துக்கொண்டு நிற்கிறது. தேவியில் மாலை 7 மணிக்கு படம், நான் இதுவரை நடராஜ், ராக்ஸி, சரஸ்வதி, மகாலட்சுமி, பாலாஜியில் மட்டுமே படம் பார்த்தவன் அங்கெல்லாம் பால்கனியில் உட்காரவே நான்கு ரூபாய்தான் இங்கு பத்து ரூபாய் இருக்கும் என்ற மனக்கணக்கில் போனால் இரண்டாம் வகுப்பே இருபது ரூபாயாம்… ம் அதனாலென்ன என்னிடம்தான் பணம் இருக்கிறதே…
அட எவ்வளவு பிரமாண்டமான அரங்கு… அப்போதுதான் நினைவுக்கு வந்தது. எப்போது சினிமாவுக்குப் போனாலும் முத்தாரமோ அல்லது கல்கண்டோ வாங்காமல் நான் சினிமாவுக்குப் போக மாட்டேன்.. காரணம் அரங்கில் திரை தூக்கும் நேரம் வரை என்னால் பொறுமையாக இருக்க முடியாது… அந்த இடைபட்ட நேரத்தை கடத்தவே இந்தப் புத்தகம் அதில் நிறைய துணுக்குச் செய்திகள் இருக்கும் புதிய கார்கள், புதிய விமானங்கள் என்று… சரி படம் ஆரம்பித்துவிட்டார்கள்.
அட என்ன உலகம்டா இது… பிரமிப்பான அந்தப் படத்தைப் பற்றிப் பேச வேண்டாம். படம் முடிந்து படத்தின் பிரம்மிப்பு மனதில் வேகத்தைக்கூட்ட மீண்டும் நடை பயணம் அதிகமாக போனால் அரை மணி நேரம் அவ்வளவுதான் வீடு வந்துவிடும். முதல் வேலையே புத்தகங்களைப் பார்ப்பது உடனே வாசிப்புதான், விண்வெளியில் ரஷ்யர்கள் செய்த சாதனைகள் விண்கலம் போகும் பாதை பிரியும் பாதை இறங்கும் பாதை பின் அதன் செயல்பாடென… அறிவியல் புத்தகங்களைத் தீர்த்துக் கட்டிவிட்டுப் பொறுமையாக அந்த 842 பக்கங்கள் கொண்ட புத்தகத்தைக் கையிலெடுத்தேன்…
ஓர் பல்கலைக்கழக ஐந்தாண்டு படிப்பு ஒருவனுக்கு இந்தளவு கற்று தருமா…ம் கற்று தரும் ஆனால் இந்தளவு உணரவைக்குமா?… தெரியல
முன்னேற்ற பதிப்பகம் மாஸ்கோ ……….
தொடரும்.
முந்தைய தொடர்கள்:
2.லெனினுக்கு மரணமில்லை – https://bit.ly/2IXJU79
1.புத்தகங்களைத் திருடுகிறவன் – https://bit.ly/3baGDNO
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- சகோதரிகள் : கரன் கார்க்கி
- சிங்கிஸ் ஐத்மாத்வ் : ஜமீலாவின் ‘’கிச்சினே பாலே ’’ -கரன் கார்க்கி
- அலெக்சாந்தர் புஷ்கினின் ’கேப்டன் மகள்’- கரன் கார்க்கி
- ‘’தாக்குங்கள்.. பெத்யூன் நம்முடன் இருக்கிறார்’’: ஒரு மருத்துவப் போராளியின் கதை- கரன் கார்க்கி
- உண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய்- கரன் கார்க்கி
- ருஷ்ய புரட்சியைப் பேசுகிற ஒற்றைப் புத்தகம்: ‘உலகை குலுக்கிய பத்து நாட்கள்’ - கரன் கார்க்கி
- சிங்கிஸ் ஐத்மாத்தவின் முதல் ஆசிரியன்: இரண்டு பாப்ளர் மரங்கள் - கரன் கார்க்கி
- லேவ் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு: அழிவற்ற அறத்தின் குரல் - கரன் கார்க்கி.
- லெனினுக்கு மரணமில்லை - கரன்கார்க்கி
- 1. புத்தகங்களைத் திருடுகிறவன்