2019 ஆம் ஆண்டின் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் வீர்ர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

மே மாத இறுதியில் தொடங்கி ஜுன் மாதம்வரை 50 ஓவர் உலகக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைப்பெறவுள்ளது. சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் – அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் உள்ளன. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி இத்தொடர் நடக்கவுள்ளது.  இத்தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தரவரிசைப்படியும், வெஸ்ட் இண்டீஸ், மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யபட்டுள்ளன.

இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கு முன்பாக இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் டிராபால்கர் சதுக்கத்தை இணைக்கும் மாலில் உலகக்கோப்பைக்கான துவக்க விழாவை பிரமாண்டமாகத் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் எதிர்பார்த்தது போலவே விராட் கோலி கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் அனுபவ அடிப்படையில் தினேஷ் கார்த்திக், மற்றும் விஜய் சங்கர் என இரண்டு தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர்.

வீரர்கள் பட்டியல்:
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக்கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சகால், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா.