’ஸ்போர்ட்மேன்ஷிப்’ என்பது ஒரு வீரரின் திறன் மட்டுமல்ல ஆடுகளத்தில் அவர் வெளிப்படுத்தும் உயர் பண்புமாகும். உணர்ச்சிகளின் கொந்தளிப்பும் சாவல்களும் நிறைந்த மைதானத்தில் சக ஆட்டக்காரகளிடம் காட்டும் கண்ணியமே அவரை ரசிகர்கள் மனதில் உயர்த்துகிறது. பொதுவாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் எதிரிகளை நிலைகுலையச் செய்யும் வகையில் சில மோசமான  தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவார்கள் என்ற வரலாறு உண்டு. அதற்கு ஆஸ்திரேலிய ஆட்டகாரர் ஸ்மித்தும் விதிவிலக்கல்ல. ஆனால் அதற்கு நேர்மாறாக, அதே ஆஸ்திரேலிய அணியுடனான பந்தயத்தில் இந்தியவீரர் விராட் கோலி ஆஸ்திரேலியவீரர் ஸ்மித்திற்கு எதிராக கூச்சலிட்ட இந்திய ரசிகர்களை கண்டித்து அமைதிப்படுத்திய காட்சி அவரது மதிப்பை பெரிதும் உயர்த்தியுள்ளது.

 

12ஆவது உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று லண்டனில் நடைப்பெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 14 ஆவது லீக் ஆட்டத்தில் 316 ரன்களுக்கு ஆஸியை  கட்டுப்படுத்தியது இந்தியா. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலாவதாக ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு  352 ரன்கள் எடுத்தது. இரண்டாவதாக களமிறங்கிய ஆஸ்திரேலியா 316 ரன்களில் சுருண்டது. இதனால் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விராட் கோலி களத்தில் இருந்தப்பொழுது மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் விராட்டிற்கு ஆதரவாக கூச்சலிட்டனர். அதே சமயம் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை சிறுமைப்படுத்துவது போலவும் கூச்சலிட்டனர். இதனைக் கண்ட இந்திய அணி கேப்டன் விராட் கோலி ரசிகர்ளின் இந்த செயல் தவறானது என்று இந்திய ரசிகளுக்கு புரியவைக்கும் வகையில் ரசிகர்களை நோக்கி ஸ்மித்தை கைத்தட்டி உற்சாகப்படுத்துமாறு சைகைக் காட்டினார். விராட்டின் இச்செயலைக் பார்த்து ஸ்மித், விராட்டை தட்டிக் கொடுத்து நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த விராட் கோலி, ” என்றோ ஒருநாள் ஏதோ நடந்துவிட்டது. அதற்காக இப்பொழுது ஒருவரை சிறுமைப்படுத்துவது தவறு. மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள ஸ்மித் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இப்பொழுது பழைய கதைகளை கிளறி அவரை சிறுமைப்படுத்த வேண்டாம் ” என தெரிவித்துக் கொண்டார். விராட் கோலியின் இந்த செயலுக்கும் கருத்துக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.