நேற்று (மார்ச்,10) இரவு நடைபெற்ற ஐபிஎல்-ன் இரண்டாவது தகுதிச் சுற்றின் போது சென்னை வீரர் அம்பத்தி ராயுடுவை இழிவுப்படுத்தும் விதமாக வர்ணனையாளர் மைக்கேல் சிலேட்டர் கமெண்ட் செய்துள்ளார்.
ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸும் சென்னை கூப்பர் கிங்ஸும் இறுதி போட்டியில் மோத உள்ளனர். முதல் தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. எலிமினேட்டரில் வென்ற டெல்லி கேபிடள்ஸுக்கும் சிஎஸ்கேவிற்கும் இடையே இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களுக்கே எடுத்தனர். பின்னர் 148 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டுபிளெசிஸின் அதிரடியான பேட்டிங்கால் சிரமமின்றி சிஎஸ்கே வெற்றி பெற்றது.
இந்நிலையில், கடந்த சீசனில் சென்னை அணிக்காக அபாரமாக ஆடிய ராயுடு, இந்த சீசனில் ஃபார்மில் இல்லாததால் சென்னை அணிக்கு பின்னடைவே என்று சொல்லலாம். இதுவரை எந்தவொரு பெரிய இன்னிங்ஸையும் ஆடவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே பெரிதாக ஆடாததால் உலக கோப்பை அணியில் வாய்ப்பையும் இழந்தார். எனினும் சிஎஸ்கே அணி எந்தவொரு தனி வீரரையும் சார்ந்தில்லை என்பதால் வழக்கம்போல இறுதி போட்டிக்கு முன்னேறிவிட்டது.
டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராயுடு பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது, அவரை வர்ணனையாளர் மைக்கேல் சிலேட்டர் அசிங்கப்படுத்தும் விதமாக கமெண்ட் செய்தார். அக்ஸர் படேல் போட்ட ஹாஃப் டிராக்கர் பந்தை ராயுடு சரியாக ஆடவில்லை. அப்போது, ”எனது 6 வயது மகன் கூட இந்த பந்தை பவுண்டரி அடிப்பான்” என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சிலேட்டர், ராயுடுவை குறைத்து மதிப்பிடும் வகையில் கமெண்ட் செய்தார். அதற்கு, சக வர்ணனையாளர் ஒருவர், உங்கள்(சிலேட்டர்) உயரத்திற்கு உங்கள் பையன் கண்டிப்பாக அடிப்பான் என்று நக்கலாக பதிலடி கொடுத்தார். மைக்கேல் சிலேட்டர் உயரம் குறைவு என்பதால் அவரை கேளி செய்யும் விதமாக சக வர்ணனையாளர் இந்த கமெண்ட்டை பதிலடியாக கொடுத்தார்.