ஹங்கேரி மூலம்: லாஜாஸ் பிரோ

 தமிழில்: எஸ்.ராஜா

       (இரண்டாம் உலகப் போரின்போது, பிரிட்டிஷ் அரசாங்கம், இந்தியாவில் காகிதத் தட்டுப்பாடு காரணமாகப் பத்திரிகை அச்சடித்திட தடை விதித்தது. எனவே புத்தக வடிவில் சிறிய வெளியீடுகள் பிரசுரமாயின. ஜோதி நிலையம், சர்வதேசக் கதை மலர் – 8 என 1944- ஆம் ஆண்டில்  3 கதைகள்: ஹங்கேரியக் கதை என்ற தலைப்பில் ஐம்பது பக்கங்களில் எஸ். ராஜா மொழிபெயர்த்த சிறுகதை நூலினை வெளியிட்டது. அந்தப் புத்தகம் 1983 ஆம் ஆண்டு முதலாக என்னிடம் இருக்கிறது. சுவராசியமான கதைகள் அடங்கிய புத்தகம், மட்டமான தாளில் அச்சடிக்கப்பட்டனால், இப்பொழுது  தாள்கள் பொடியாகிக் கொண்டிருக்கின்றன. ஹங்கேரி நாட்டினரான லாஜோஸ் பிரோ(1880) எழுதிய ”வியன்னாவில்” என்ற கதை, நூலில் முதலாவதாக இடம் பெற்றுள்ளது. இசையின் மகத்துவத்தையும் காதலின் உன்னதத்தையும் பதிவாக்கியுள்ள வியன்னாவில் கதை, வாசிப்பில் அதிர்வை ஏற்படுத்துகிறது. பீதோவன் என்ற இசை மேதையை முன்வைத்துச் சொல்லப்பட்டுள்ள கதையில் வரும் தாயும் அவருடைய மூன்று மகன்களும் ஒருபோதும் மறக்கவியலாத பாத்திரங்கள்.  1940களில் வழக்கினில் இருந்த பிராமண மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த கதையின் நடையை இன்றையச் சூழலுக்கேற்பச் செம்மையாக்கியுள்ளேன். வாசித்துப் பாருங்கள் – ந.முருகேசபாண்டியன்.)

 

வசந்தத்தின் குளிர்ந்த காற்று விசிறிவிசிறி அடித்துக்கொண்டிருந்தது. வியன்னாவின் தெருக்களில் கிடந்த தூசிதுப்பட்டைகளை எல்லாம் எல்லாம் காற்று அடித்துக்கொண்டு போய்விட்டது. ராஜா தியேட்டரின் இசைக் குழுவைச் சேர்ந்த ஸ்கோல்ஸ் சகோதரர்கள் மூவரும், நாடகசாலையைட்டு வெளியே வந்தார்கள். சட்டையை இறுக்கமாக இழுத்துப் போர்த்திக்கொண்டு, மனசிலே இருண்ட சிந்தனைகளுடன், வீடு நோக்கிக் கிளம்பினார்கள். காற்றுடன் போரடித் தள்ளாடி, வீடு வந்து சேர்ந்தார்கள். வீட்டுக் கதவைத் திறந்தவர் அவர்களுடைய தாயார். அவரின் தலைமுடி நரைத்திருந்தது. வாழ்க்கையில் அகப்பட்டு நசுக்குண்டவர் என்பதை அவர் முகமே காட்டியது. கிழவிதான். அவர்களுடைய சட்டைகளைக் கழற்றிட அவர்தான் உதவி செய்தார். அவர்கள் வீட்டில் வேலைக்காரர்கள் என்று யாரும் இல்லை. அவசரஅவசரமாகச் சாப்பாடு தயார் செய்து, அவர்களுக்குப் பரிமாறினார்.

ஸ்கோல்ஸ் சகோதரர்கள் மூவரும், குனிந்த தலை நிமிராமல், மனதிலே பலவிதமான கசப்பான எண்ணங்களுடன் சாப்பிட உட்கார்ந்தனர்.

பல்லைக் கடித்துக்கொண்டே உடால்ப் கேட்டான்.” அப்பா இன்னும் வரவில்லையா?”

”இல்லை. இன்னும் வரவில்லை” பரபரப்புடன் பதில் சொன்னார் தாயார்.

ருடால்ப் சாப்பிடத் தொடங்கினான். வேறு ஏதாவது கேட்பானோ என்று சிறிது நேரம் அவனுடைய தாயார் தயங்கினார். ஆனால் ருடால்போ மற்ற பிள்ளைகளோ அவருடன் பேச விரும்பவில்லை. அவர்கள் எப்பொழுதுமே அவருடன் பேச விரும்பியதில்லை. அவரும் எதுவும் பேசாமல் சாப்பாட்டைப் பறிமாறிவிட்டுச் சமையலறைக்குள் போய்விட்டார். அவர்களில் யாருக்கும் தங்களுடைய எண்ணங்களை வாய்விட்டுச் சொல்ல மனமில்லை போலும்! அப்படி அவ்வளவு இருண்ட எண்ணங்களுக்குக் காரணம்தான் என்ன?

கடைசியில் பிரான்ஸ் நீண்ட பெருமூச்சு விட்டான். நீண்டு வளர்ந்திருந்த தன்னுடைய தலைமயிரை கோதிவிட்டுக் கொண்டான்.” என்னால் இன்மேல் தாளாது என்றான்.”

மாக்ஸிமிலியன் தலையை ஆட்டினான். அவன் தலை, சிங்கத்தின் தலையைப்போல இருந்தது. அவன் சொன்னான்: நான் இவர்களைவிட்டுத் தனியாகப் போய்விடத்தான் போகிறேன். தனியாகப் போய்விட வேண்டியதுதான்.” என்றான் . அவன் குரல், ஆழ்ந்த நிலையற்ற துக்கத்தை அடக்கியதாக இருந்தது.

ருடால்ப் சொன்னான்: ”ஓரிடத்தில் ஓர் அறை வாடகைக்குக் கிடைக்கிறது. கோட்டை வெளிக் கதவு அருகில் ஓரிடம். யாரோ ஒரு ஹோட்டல்காரனுடைய வீடு. ஹோட்டல்காரனுக்கு அழகான பெண்கள்கூட இருக்கிறார்கள்.”

”நாம் அங்கே போய் விடலாமே” என்றான் மாக்ஸ்மிலியன்.

யோசனையில் மூழ்கியவர்களாக அவர்கள் சாப்பிட்டார்கள். சாப்பாடு முடியும்வேளையில் தெருவில் அவர்களுடைய தகப்பனாரின் குரல் கேட்டது. எனவே சட்டுப்புட்டென்று சாப்பிட்டு முடித்துவிட்டு, தங்கள் அறைக்குள் போய், சுங்கானைப் பற்ற வைத்துக்கொண்டு அவரவர் படுக்கையில் படுத்தனர்.

அவர்கள் போனபின் சாப்பாட்டு அறைக்குள் வந்தார் ஹெர்ஸ் கோல்ஸ். அவர் வேகமாக நடந்து வரவில்லை; ஆனால்  அதிகமாகச் சப்தம் செய்தவாறு வந்தார். பெரிய நீதிமன்றத்தில் அமீனாவாக இருந்து, ஓய்வு பெற்றவர். அன்று வெகு நேரம் அவருடய நண்பர்களுடன் குடித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருந்துவிட்டு அப்பொழுதுதான் வீடு திரும்பி இருந்தார். அரசியல் முதல் இசைவரையில் எல்லா விஷயங்களைப் பற்றியும் தீவிரமாக விவாதம் செய்துவிட்டு, உக்கிரமாகவே வீடு திரும்பியிருந்தார். குடியினால் வேறு அவருடைய நடை தடுமாறியது.

அவர் வாசலில் வருகிற சப்தம் கேட்டவுடனேயே அவருடைய உணவைத் தயார் செய்துவிட்டார் அவருடைய மனைவி. அவர்  சாப்பிட மேசையருகில் வந்து உட்காரும்போது, உணவைக் கொண்டு வந்தும் வைத்துவிட்டார். ஆனால் அப்படியும் அவர் மீது எரிந்து விழுந்தார் அவருடைய கணவன்.

“நான் பட்டினிகிடந்து செத்தால் நீ சந்தோசப்படுவாய்? இல்லையா, லிஸி? என்னைப் புதைத்துவிட்டுத்தான் மற்ற காரியம் எல்லாம்தான் என்று நீ தீர்மானித்திருக்கிறாய் இல்லையா? அப்படித்தானே உன் எண்ணம், லிஸி? ஆனால் அப்படி நடக்காது. நான் சொல்கிறேன் நம்பு. லிஸி, நீ இறந்து, உன்னைப் புதைத்துவிட்டு அதற்குப் பிறகுதான் நான் சாவேன்! தெரிந்ததா, லிஸி? எனக்கு முன் நீ தான் சாக வேண்டும்” என்றார் ஸ்கோல்ஸ்.

ஆனால் பனிவுடன் நின்றார் அவருடைய மனைவி. அவர் ஒன்றும் பேசவில்லை. ஆனால் அவருடைய மெல்லிய கைகள் நடுங்கின.

” என்ன? கைகள் நடுங்குகின்றன? நடுக்கமா? இன்று நடுங்குகிறதே உன் கைகள்! அன்று ஏன் நடுங்கவில்லை – உன் காதலனைக் கட்டியணைக்கும்போது உன் கைகள் நடுங்கவில்லையே!’ என்று குரைத்தார் ஸ்கோல்ஸ்.

இதற்குப் பதில் ஒன்றும் அவர் சொல்லவில்லை. ஆனால் திரும்பவும் சமையலறைக்குள் போய்ப் புகுந்து விடலாம் என்று நினைத்தவர் போல நகர்ந்தார்.

”நில்லு, அப்படியே நில்லு!” என்று அதட்டினார் முன்னாள் அமீனா.

அசையாமல் அவர் அப்படியே நின்றார். ஸ்கோல்ஸ் எதிரே இருந்த உணவைச் சாப்பிட்டுக்கொண்டே மெதுவாக நிறுத்திச் சொன்னார்…” நீ ஏதோ பிரார்த்தனை செய்கிறாய் என்று எனக்குத் தெரிகிறது. உன் பிரார்த்தனைகள் பலிக்காது. நீ நரகத்துக்குப் போக வேண்டியவள்தான். ஆனால் நீ நரகத்துக்குப் போகுமுன் கட்டிய கணவனை ஏமாற்றிப் பிற புருஷனை அணைந்ததற்காக நீ பிராயச்சித்தம் செய்தே ஆக வேண்டும். நீ பிராயச்சித்தம் செய்யாமல் போனால், நான் உன்னைவிடப் போவதில்லை. கடவுள் சந்நிதியில் கணவனாக நீ என்னை ஏற்று மதிப்பதாகச் சொன்னதை மறந்து நீ வேறு ஒருவனுடன் உறவு கொண்டாய். கல்யாணம் என்ற புனிதச் செயல்பாட்டினை நீ அலட்சியம் செய்தாய்! நில்லு!, அப்படியே! நகராதே! இருபத்திரண்டு வருசமாக நீ பிராயச்சித்தம் செய்து வருகிறாய்! என் விருப்பப்படிப் பிராயச்சித்தம் செய்து வருகிறாய். இன்னும் பத்து வருஷங்களில் நீ என் கைகளிலிருந்து தப்பிப்போய் விடுவாய் – ஆனால் நீ தப்பிப்போகும்வரையில் நான் உன்னைத் தண்டித்துக்கொண்டுதான் இருப்பேன். உன்னைத் தண்டிக்கும் பொறுப்பைக் கடவுள் என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்- உன்னை நான்…..”

இவையெல்லாம் பக்கத்து அறையில் படுத்திருந்த ஸ்கோல்ஸ் சகோதரர்கள் காதில் தெளிவாக விழுந்தன. அவர்கள் புரண்டுபுரண்டு படுக்கையில் கிடந்தார்கள்.

சற்று மெல்லிய குரலில் ருடால்ப் சொன்னான்: “ அவர் இன்றும் அம்மாவை அடிக்கப் போகிறார் .”

மாக்ஸிமிலியன் தலையை ஆட்டினான், தோள்ப்பட்டையைக் குலுக்கினான். “ இந்தக் காட்சி உனக்கு இன்னும் பழக்கம் ஆகவில்லையா? என்று சலிப்புடன் கேட்டான்.

பிரான்ஸினுடைய உதடுகள் கோணக்கோணத் துடித்தன. “ இருபத்திரண்டு வருஷங்கள்! எவ்வளவு நீண்ட காலம்! அம்மா இருபத்திரண்டு வருஷங்களாக எப்படிக் கஷ்டப்பட்டிருக்கிறார்?”…. என்றான் பிரான்ஸ்.

“ அம்மா தனது ஆயுளில் இருபத்திரண்டு வருஷங்கள் இதைச் சகித்திருக்கிறார். நாம் இதை நம் வாழ்க்கை முழுவதும் சகிக்க வேண்டியிருக்கிறதே!” என்றான் ருடால்ப் ஆத்திரத்துடன்.

“…. ஆனால் நாம் இன்னும் அதிகமாகவே இன்னும் அதிக காலத்துக்கும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அம்மா – அதைச் சொல்லக்கூட வெட்கமாக இருக்கிறது – அவர் செய்திருக்கிற காரியம்….” என்றான் மாக்ஸிமிலியன்.

ஆனால் பிரான்ஸ் குறுக்கிட்டான். ”அவர் செய்தது  தப்போ சரியோ, யாருக்குத் தெரியும?” என்றான்.

”அவர் செய்தது எப்படிச் சரியாக இருக்க முடியும்? அவர் அப்படி இருந்தது மட்டுமின்றி, அது நமக்குத் தெரியவும் தெரிந்து விட்டதே!” என்றான் மாக்ஸ்மிலியன், ஆத்திரத்துடன், அழ மாட்டாத குறையாக.  அதற்குமேல் அவனுக்குப் படுக்கையில் இருப்புக் கொள்ளவில்லை.  எழுந்து படபடப்புடன் அறையில் குறுக்குநெடுக்குமாக நடந்துகொண்டிருந்தான்.

சாப்பாட்டு அறையில் ஸ்கோல்ஸ் என்கிற முன்னாள் அமீனா உணவை முடித்துக்கொண்டு எழுந்து விட்டார். மனைவியின் பிராயச்சித்தத்தை நடத்திவைக்கத் தயார் ஆனார்.

அவர் சொன்னார் – சொன்னார் என்று சொல்வதைவிடக் குரைத்தார் என்று சொல்வதே பொருந்தும்.  ”மண்டியிடு: நீ ஏமாற்றிய உன் புருஷனாகிய என் எதிரே மண்டியிட்டுத் தலைவணங்கு. நீ என்னை ஏமாற்றியதுண்டா? பிற புருஷனுடன் உறவு வைத்துக்கொண்டதுண்டா? உண்டா சொல்லு?”

”உண்டு’ என்று மிகவும்  மெல்லிய கம்மிய குரலில் அவரின் மனைவி நடுக்கத்துடன் ஒப்புக்கொண்டார்.

“ நீ எத்தனை காதலர்களுடன் தவறு செய்தாய்?” என்று அளவற்ற திருப்தியுடன் கேட்டார் கணவர்.

“ ஒருவருடன்தான்”

”ஒருவனுடன் தானா?

” சத்தியமாகச் சொல்கிறேன்- ஓருவருடன்தான்” என்று துக்கம் அடைக்க அவருடைய மனைவி பதில் சொன்னார்.

”யார் அந்தக் காதலன்?”

மண்டியிட்டுத் தலை வணங்கியிருந்த அவரின் மனைவிக்குத் தாள முடியவில்லை. கீழே சாய்ந்து விடுவதுபோல ஆடினார்; பெருமூச்சு விட்டார். துக்கத்துடனும் பயத்துடனும் தனது காதலனின் பெயரைச் சொன்னார்.

தன்னுடைய அறையில் மாக்ஸிமிலியன் கதவருகில் ஒடுங்கிய மனத்துடன் நின்றுகொண்டிருந்தான். அவர் சொன்ன பெயர் அவன் காதில் விழுந்தது. அது காதில் கேட்டதும், சிந்தனை தெளிந்தவன்போல ஒருதரம் தன் தலையை உலுக்கிக்கொண்டான். அவனுடைய முகம் திடீரென்று வெளிறிட்டது. எல்லையற்ற துக்கத்துடன் படுக்கையில் படுத்துக்கிடந்த சகோதரர்களைப் பார்த்தான் அவன்.

’’அம்மா சொன்ன பெயரைக் கேட்டாயா?” என்று திணறிய மூச்சுடன் கேட்டான்.

‘ இல்லையே! யார் பெயரைச் சொன்னார்?” ஆவலை அடக்கமாட்டாமல் அவன் சகோதரர்கள் கேட்டனர்.

தன் தாயார் சொன்ன பெயரை அவர்களிடம் சொன்னான் மாக்ஸிமிலியன். ருடால்பும் பிரான்சும் படுக்கைகளில் இருந்து குதித்து எழுந்தார்கள். அவர்களுடைய முகங்களில் புதிய ஒளி தோன்றியது. மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு மௌனமாக இருந்தனர், திடீரென்று அவர்கள் காதில் விழுந்த இந்தப் பெயர் அவர்களைத் திடுக்கிடச் செய்தது; திக்குமுக்காடச் செய்தது.

சாப்பாட்டு அறையில் முன்னாள் அமீனா எழுந்தார். திருப்தியுடனும் சந்தோஷத்துடனும்  எழுந்தார் என்று சொல்ல் வேண்டும். தன்  மனைவியைத் தண்டிப்பதில், வாழ்க்கையில் வேறு எதிலுமே கிடைக்காதா ஆனந்தம் அவர்க்குக் கிடைத்திருந்தது.

‘” ம் அப்படியா?’ என்று சொற்களை நிறுத்தி, கண்களை உருட்டிக்கொண்டே சொன்னார். “ அவனா உன் காதலனாக இருந்தவன்? அப்படியானால்..” என்று சொல்லிக்கொண்டே அடிப்பதற்குக் கையை ஓங்கினார்.

ஆனால் ஓங்கிய கை அடிக்கவில்லை. அதே விநாடி மாக்ஸிமிலியன் தன் அறைக் கதவைப் படாரென்று திறந்துகொண்டு வெளியே ஓடிவந்து தன்னுடைய தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டான். அவனுடைய முகத்தில் ஜொலித்த கோபத்தையும் ஆத்திரத்தையும் கண்டு ஸ்கோல்ஸ் பயந்து போனார்.

“ அடிக்காதே! அவரை விடுங்கள்! அவர் இவ்வளவுநாள் பட்டதெல்லாம் போதும்” என்றான் மாக்ஸிமிலியன்.

ஹெர் ஸ்கோல்ஸூக்கும் கோபம் வந்துவிட்டது. “ ஒகோ! இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று நான் உனக்குச் சொல்லிக் கொடுத்தேனா?” என்றார் பல்லை நறநறவென்று கடித்துக்கொண்டு, கையை விடுவித்துக்கொள்ள மாட்டாமல்.

“ நீங்கள் சொல்லிக் கொடுத்தது எல்லாம் சரிதான்! ஆனால் இது போதும். நீங்கள் அவரை அடித்தது போதும்- இனி அடிக்காதீர்கள்! எங்களுக்குத் தாங்காது! என்றான் மாக்ஸிமிலியன்.

தன் கையை விடுவித்துக்கொள்ள ஸ்கோல்ஸ் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. தன் கைப்பிடியைத் தளர்த்தாமல் நின்றான் மாக்ஸிமிலியன்.

”உன் தந்தையைக்கூட அடித்துவிடக்கூட நீ துணிவாய் போலிருக்கிறதே! தந்தையை எதிர்க்க ஓங்கிய கை… அழுகிவிடும், சாம்பலாகிவிடும். ஞாபகம் இருக்கட்டும்!” என்று தன் மகனைப் பயமுறுத்தினார் தகப்பனார்.

இதற்குள் பிரான்ஸும் ருடால்பும் வெளியே வந்து விட்டார்கள். “ நாங்கள் சும்மா இருக்க வேண்டுமானால் நீங்கள் அம்மாவை அடிக்கக்கூடாது. அவரை அமைதியாக இருக்க விடுங்கள்.”

“ நான் ஒருத்தன், புருஷன் இருக்கிறேன் என்பதை மறந்து அவள் வேறு ஒருவனுடன் சோரம் போனாளே!” என்றார் தகப்பனார்.

‘ அவர் செய்த பாவத்துக்கெல்லாம் பரிகாரமாக இதுவரை பட்டதெல்லாம் போதும். இனியும் அவரைத் தண்டிக்கவேண்டிய அவசியம் கிடையாது’ என்றான் ருடால்ப்.

“ அவரை உங்ககளுக்குப் பிடிக்காவிட்டால் அடித்து விரட்டி விடுவது தானே! அவரை விரட்டாமல் அடித்துக் கொல்லுவானேன்?’ என்று கோபமாகக் கேட்டான் பிரான்ஸ்.

எது எப்படியானாலும் தன் மனைவியை அன்று அடித்துத் தண்டித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பது  என்று தீர்மானித்தார் முன்னாள் அமீனா. தன் கையைப் பிள்ளையின் பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ள முயன்றார். முடியவில்லை. ஆனால் பிள்ளைகள் மூவருமாகச் சேர்ந்து அவரைக் குண்டுக்கட்டாகக் கட்டி எதிரேயிருந்த அறைக்குள் போட்டுக் கதவைச் சாத்தி விட்டார்கள். சாத்திய கதவைப் படபடவென்று நாலு தடவைகள் உதைத்தார் ஸ்கோல்ஸ். பின்னர்  குடிவெறியும் அசதியும், உண்ட மயக்கமும் மேலிடப் படுத்துக் குறட்டைவிட்டுத் தூங்கிவிட்டார்.

‘ சாப்பாட்டு அறையின் நடுவில் ஸ்கோல்ஸினுடைய மனைவி எழுந்து நின்றார். அவர் கண்களில் நீர் நிறைந்திருந்தது. அவருடைய குனிந்த தலை நிமிரவே இல்லை – தாழ்மையும் சோகமும் உருவெடுத்ததுபோல நின்றார்; தன் பாவாடையைத் தடவிவிட்டுக்கொண்டார்.

அவருடைய மூன்று பிள்ளைகளும், மனதிலிருந்த குழப்பம், முகத்தில் தெரிய அவரைச் சுற்றி நின்றனர்.

“ அம்மா.. உட்காருங்கள் அம்மா!’ என்றான் மாக்ஸிமிலியன், கடைசியில். அவன் குரல் தடுமாறிற்று, குழம்பியது,

பிரான்ஸ் தன் தாயாருக்காக நாற்காலியை எடுத்துப் போட்டான். அவர் உட்கார்ந்ததும் அருகில் மூவரும் அமர்ந்து கொண்டனர். ஆனால் சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது: யாரும் பேசத் துணியவில்லை. குழந்தைப் பருவத்தில் இருந்தே தங்களுடைய தாயாரை அலட்சியம் செய்யும் மனப்பான்மையுடன் வளர்ந்துவிட்ட பிள்ளைகள் மூவருக்கும் அவருடன் அன்பாகவும், ஆதரவாகவும், ப்ரியமாகவும் பேசுவது இப்பொழுது கஷ்டமாக இருந்தது.

அவர் பயம் நிறைந்த கண்களால் ஒவ்வொருவரையும் மாறிமாறிப் பார்த்தார். இந்த மாறுதல், தன் பிள்ளைகள் இப்படித் திடீரென்று மாறியது ஏன் என்று அறியாமல் அவர் திகைத்தார். ஆனால் அவர்கள் தங்கள் கண்களைத் தாழ்த்திக்கொண்டு, தலையைத் தொங்க விட்டவாறு உட்கார்ந்திருந்தனர்.

கடைசியில் மாக்ஸிமிலியன் தான் கேட்டான்: “ அம்மா.. நீங்கள் அப்பாவிடம் சொன்ன அந்தப் பெயர்… என் காதில் சரியாக விழவில்லை. அது என்ன?”

“ அந்த விஷயம் பற்றித் தன் பிள்ளைகளிடமே தாய் எப்படிப் பேச முடியும்?” என்றார் அன்னை.

‘” அவர் பெயர்….உன்னுடன்…ம்… அவர் பெயர் என்ன?”

சலிப்புடன், ஆனால் உள்ளூர ஏதோ இன்பக் கனவுகளைக் காண்பவர்போலக் கண்களை மூடிக்கொண்டு “ பீதோவன்” என்றார்.

வாயில் ஊறிய எச்சிலை விழுங்கமாட்டாமல் விழுங்கிக்கொண்டே மாக்ஸிமிலியன் “ எந்தப் பீதோவன்” என்று கேட்டான்.

ஆச்சரியத்துடன் கண்களைத் திறந்து பார்த்தார் அவனுடைய தாய்.” எந்தப் பீதோவனா?” இந்த உலகிலேயே ஒருவர்தான் உண்டு” என்று பெருமையும் மகிழ்ச்சியும் ததும்பிய குரலில் சொன்னார்.

பயமும் பக்தியும் நிரம்பிய குரலில்” லட்விக் வான் பீதோவனா?” என்று கேட்டான் மாக்ஸிமிலியன்.

“ அவரே தான்” என்றார் அவன் தாய். அவருடைய குரலும், உடலும், உள்ளமும் புது மெருகும் பூரிப்பும் பெற்றுவிட்டன போலிருந்தது. “ ஆம் லட்விக் பீதோவன்தான். அந்த இசை மேதைதான். அவரும் நானும் ஒரே வீட்டில் குடியிருந்தோம். அவர் நினைவாகத்தான் உங்களுக்கெல்லாம் இசையைக் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தேன் . நீங்களும் அவர்போல இசை மேதையாக வேண்டும் என்று நான் விரும்பினேன். அமீனாவின் பிள்ளைகளாக…” பெருமூச்செறிந்தார்.

மீண்டும் அந்த அறையில் மௌனம் குடிகொண்டது. தங்களுடைய தாய், லட்விக் பீதோவனை அறிந்திருந்தவர், அவருடைய காதலியாகக்கூட இருந்தவர் என்பதை அவர்கள் அறிந்தார்கள் – திடுக்கிட்டார்கள்- வியப்பில் மூழ்கினர். தங்கள் நாற்காலிகளை இழுத்துப் போட்டுக்கொண்டு தாயை நெருங்கி உட்கார்ந்தனர். பயத்துடனும், பக்தியுடனும் தாயைப் பார்த்தவாறு சற்று நேரம் மௌனமாக அமர்ந்திருந்தார்கள்.

 

 

உருக்கமான மெல்லிய குரலில் “சொல்லுங்கள் அம்மா’” என்றான் ருடால்ப்.

“ ஆமாம் அம்மா! அவரைப்பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள் அம்மா” என்றான் பிரான்ஸ்.

மாக்ஸிமிலியன் தன் தலையை ஆட்டிக்கொண்டே உட்கார்ந்திருந்தான் – அவன் புருவத்தைச் சுளித்துக்கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். ஆனால் அது எவ்வளவு இன்பகரமான சிந்தனை என்பதை அவன் முகத்தில் பரவியிருந்த ஒளி காட்டியது.

அவர்களுடைய தாயார் அவர்கள் மூவரையும் மாறிமாறிப் பார்த்தார். பிறகு எங்கேயோ தொலைவில், சுவரில் ஒரிடத்தை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரின் கண்களிலே புதிய ஒளி படர்ந்தது. அவரின் முகத்திலே புதிய பாவம் தோன்றியது. மூச்சுவிடக்கூடத் துணியாமல் தாயைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள் அவருடைய மூன்று பிள்ளைகளும்.

கனவு கண்டு விழித்தவள்போல, கம்மிய குரலில் அவர் பேச ஆரம்பித்தார் – ஒருகாலத்தில் தன் காதலனாக இருந்த பீதோவனைப்பற்றிப் பேச ஆரம்பித்தார்.

இசைக் குழுவைச் சார்ந்த ஸ்கோல்ஸ் சகோதரர்கள் மூவரும் மௌனமாக, பக்தியுடன் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தனர்.