ஆதித்தா…. அங்கம்மா…
எங்குள்ளீர்கள் எனக் கேட்டது இளவரசன் ராஜேந்திரனின் குரல்.

தனிமையில் தனதாக்கிக் கொண்டிருந்த இளஞ்ஜோடிகளின் எண்ணக் கனவினை கலைத்தது அந்த குரல். நிதர்சன நிலைக்கு அப்போது தான் வந்தனர் இருவரும்.

குரல் வந்த திசையை நோக்கி பார்த்தபோது ஒரே கும்மிருட்டாக தெரிந்தது. வரும்போதும் அதே இருள் சூழ்ந்து தான் இருந்தது.

காதல் மோகத்தில் திளைத்த இளஞ்ஜோடிகளுக்கு அந்த காரிருள் கூட கை விளக்காக தெரிந்தது போலும்.

குரல் வந்த திசையை நோக்க கும்மிருட்டாக இருந்தது.
இருவரது கரங்களும் இணைந்தே இருந்தது. இதழ்கள் மட்டும் பிரிந்தன.
மௌனித்த இளவரசியும் இளவரசனும். நாணல் கோண நடைபயின்று வாயில் நோக்கி சென்றனர்.

வெளியே நின்றிருந்த ராஜேந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த மத்திரவாதிகளின் கூட்டம் வரத்தொடங்கியபோது நம் கூடத்தானே இருந்தனர் ஆதித்தனும் அங்கம்மாவும்.!

வேறகெங்கே சென்றிருப்பார்கள்.! என குழம்பிய எண்ணத்தோடு, ஆதூரச்சாலை வாயிலுக்கு வந்திருந்தான்.
அங்கம்மா. ஆதித்தா.. எங்குள்ளீர்கள் என சத்தமிட்டு அழைக்க.

நாப்புறமும் அமைதி.

ஆதூரச்சாலை உள்ளிருந்து சலங்கையொலி மெல்ல கேட்க.
செவிப்புலன்களை கூர்மையாக்கி சத்தம் வந்த திசையை நோக்கினான் ராஜேந்திரன். ஆம். மருத்துவச்சாலையின் உள்ளிருந்து மெதுவாக அசைந்தாடி பாதச் சலங்கையொலி வந்து கொண்டிருக்க.

வாயிற் தாழிக்கு உள்ளே வலப்பக்கம் காரிருள் மூண்டிருந்தது. ஆங்காங்கே தீப்பந்த ஒளியேற்றப்பட்டு ஒளிர்விட்டுக் கொண்டிருந்தாலும். முழுமையாக எதையும் காண முடியவில்லை. அந்தி பொழுது தொடங்கியிருந்த இந்த வேளையில்.

யாரங்கே.. என கர்ஜித்தான் ராஜேந்திரன்.
இடையில் செருகியிருந்த குறுவாளை கையில் பிடித்துக்கொண்டு மறுபடியும்.

யாரங்கே.. என சத்தமாக கேட்க. உள்ளிருந்து ஞாலம் அளவிளா மேன்மை அழகுடையாள் பதம் பிடித்த நடையுடன் காட்சியளிக்க.
அருகில் இருந்த விளக்கொளியில் நட்சத்திர கூட்டம் நடுவே பதுமையாக வெளிப்பட்டாள் அங்கம்மா தேவி.

தீப்பந்த ஒளியில் முழுச் சந்திரன் போல முழுவதுமாக காட்சியளித்த அங்கம்மாவின் நாட்டியபாங்கு தோரணை வித்தியாசமாக தோன்றியது ராஜேந்திரனுக்கு.

அங்கம்மா.. எவ்வளவு நாழிகை அழைக்கிறேன்.? எங்கே சென்றாய்.? ஆதித்தன் எங்கே என அடுத்தடுத்து கேள்விகளை கேட்க.

ஐம்புலன்களும் நாணல் கொண்டு. மெய்ப்புலனாக நடந்து வந்தவள். கருவிழி இரண்டையும் ஒரு முறை சுழற்றி பின்பக்கமென சைகையால் உணர்த்த.!

அங்கம்மாவின் நடவடிக்கைகள் எல்லாம் புதுமையாக உள்ளதே என ஆச்சரியம் கொண்டவானானான் இளவரசன் ராஜேந்திரன்.

இளவரசி அங்கம்மா வாயிலுக்கு வந்து விட. தீப்பந்த ஒளியில் திடகாத்திரமான உருவம் ஒன்று தெரிந்தது.

ஆதித்தன்…..

பாளைய தளபதி. ஆதித்தா… என்னவாயிற்று.
எங்கே போனீர்கள்?
நாழிகை நேரத்தில் பதறிப்போய் விட்டோமே என ராஜேந்திரன் பதட்டப்பட.

ஆதித்தன் உள்ளுணர்வோ சொரசொரவென்று பதறியது.

இளவரசே. அந்த மந்திரவாதிகள் போன வேளையில் சற்று உள்ளே போய் ஒதுங்கியிருக்கலாம் என உள்ளே சென்றேன். வழி தெரியாமல் ஓர் விசால அறைக்குச் சென்று மாட்டிக்கொண்டேன். இளவரசிதான் என்னை கண்டுபிடித்து இங்கு அழைத்து வந்தார் என சமாளிக்கும் உத்தியில் பதிலுரைக்க.

ராஜேந்திரன் அருகில் நின்றிருந்த அங்கம்மா தேவி பதில் ஏதும் சொல்லாமல். நாணிக்கொண்டு பூமியைப் பார்த்து பூத்துக்கொண்டிருந்தாள்.
பருவமெய்திய மாடப்பெண்டிர் ஆண்களைப்போல ஆட்சி புரிய எண்ணியவள்.

ஆடவனின் பார்வையில் விழுந்து ஆட்கொணர்வில் ஆட்பட்டு கிடக்கிறாள்.

ராஜேந்திரனுக்கு பின்னால் இருந்து ஒரு குரல்.
ஆதித்தா. எங்கு சென்றீர்கள். மந்திரவாதிகள் கூட்டத்தில் சிக்கி போனீரோ என கண நேரம் தவித்து விட்டோம் என்றான் பழுவூர் நக்கன்.

இருவரும் இவ்வளவு கேள்விகள் கேட்ட பின்பும். ஆதித்தனும் அங்கம்மாவும் பதிலுரைக்க தெரியாமல் அமைதியாக நின்றிருக்க.

அட. என்னாச்சு பாளைய தளபதிக்கு. காளாமுக மந்திரவாதிகளின் மாய வலையில் சிக்கிவிட்டாரோ என ராஜேந்திரன் கேட்க.

பழுவூர் அரசரே. மந்திரவாதிகள் கூட்டம் நெருங்கி வந்த வேளையில். எங்கு செல்வதென்ற குழப்பத்தில். ஆதூரச் சாலையின் உள்ளே போய்விட்டேன். இளவரசி தான் தன்னை மீட்டு வந்தார் என மறுபடியும் ஒரு பொய்க்காரணத்தைக் கூற.

இளவரசி. அண்ணா. அந்தி சாய்ந்து விட்டது.
தந்தை இங்கு வருவதாக கூறினார் என்று தாங்கள் முன்னமே சொன்னீர்கள். ஆனால் இதுவரையிலும் இங்கே வரவில்லை. இடையே அந்த மந்திரவாதிகள் கூட்டம் வேறு தஞ்சை வேதாரண்யம் சாலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே தந்தையின் மீது அந்த மகா காளாமுகர்கள் கோபமாக உள்ளதாக ஊருக்குள் செய்திகள் உலாவருகின்றன.

எனக்கு அச்சமாக உள்ளது. இருள் சூழ்வதற்குள் அரண்மனையை நோக்கி பயணிக்க தயாராகினால் என்ன? என்று கூற.

இல்லை அங்கம்மா.
அந்தி பொழுதில். அரிசலாற்றங்கரையில் ஆர்ப்பரித்து எழுந்திடுவேன். அதுவரை பொருத்திடுக என தந்தை என்னிடம் கூறியுள்ளார். நிச்சயமாக நமது தந்தை கொடுத்த வாக்கினை மீறாதவர். பொறுத்திரு. சிறிது நேரம் பொறுத்துப் பார்க்கலாம். என்றான் ராஜேந்திரன்.

இளவரசே. அதுவரை சும்மா இருப்பதைக் காட்டிலும் ஏதாவது ஒரு கதை சொல்லுங்களேன். நேரத்தை வீணாக்க வேண்டாம். பொழுதும் போய்விடும் என்றார் நல்லப்ப உடையார்.

அட. நான் கூட இளவரசர் கதை சொல்லி கேட்டதில்லை. இரு அருமையான யோசனையாக உள்ளது. ராஜேந்திரா. விறுவிறுப்பான கதை ஒன்றை கூறுங்கள் என்றான் பழுவூர் நக்கன்.

இதையெல்லாம் சொல்லத் தெரியாது. காவியமொன்றை சொல்கிறேன் கேளுங்கள் என்றான் இளவரசன் ராஜேந்திரன்.

சோழத்து இளவரசர் காவியம் பேசுவது சொப்பனத்திலும் நினைக்காதது.
தங்கள் சித்தம் என் பாக்யம் என்றான் ஆதித்தன்.

அண்ணா. உங்களிடம் கதை கேட்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டது. மறுபடியும் அந்த பாக்யம் கிடைப்பது எண்ணற்ற மகிழ்ச்சி. என்றாள் இளவரசி அங்கம்மா.

ஆவா இருவர் அறியா அடிதில்லை யம்பலத்துள்
மூவா யிருவர் வணங்கநின் றோனையுன் னாரின்முன்னித்
தீவா யுழுவை கிழித்தந் தோசிறி தேபிழைப்பித்
தாவா மணிவேல் பணிகொண்ட வாறின்றொண்டகையே..!

என்று காவியப் பதிகம் பாடிய ராஜேந்திரன். பாளைய அரசன் நல்லப்ப உடையாரை நோக்கி.

தொண்டை மண்டலத்து தளபதி நல்லப்பரே. இதன் விளக்கத்தை சொல்ல முடியுமா எனக் கேட்க.

ஏன் முடியாது ராஜேந்திரரே. இதோ கூறுகிறேன் கேளுங்கள்.

நீங்கள் பாடிய இப்பாடலின் முன் இரண்டடிகளில். கல் நெஞ்சையும் இளகும் விதத்தில் அன்பு நிரம்பிய சிவனின் பெருமையைச் சொல்கிறது. அடுத்த அடியில். சிறந்த நல்லொழுக்கத்தினை அணிகலனாக கொண்ட பதுமையொருவள். அவ்வான் மகனோடு காதல் கொண்டதை அறிவதாக கூறுகிறது. அடுத்த வரியில் தலைமகன் நாவினாலே உறுதிசெய்வதுதான் முறையென்று முடிகிறது இளவரசே என்றார் நல்லப்ப உடையார்.

ஆஹா. தொண்டை மண்டல நாடு தமிழை தாங்கிப்பிடித்து அமுதமாக வடிக்கிறது என்பதற்கு சான்றாக. பாளைய தேசத்து அரசர் நல்லப்பர் திகழ்கிறார். வாழிய செந்தமிழ். வாழிய சோழ தேசம். என பாராட்டினான் சிற்றரசன் பழுவூர் நக்கன்.

ராஜேந்திரன் ஆதித்தனைப் பார்க்க.
முகமெல்லாம் வியர்த்து கொட்டியது ஆதித்தனுக்கு.

சாதாரணமாக கேட்கிறாரா. அல்லது நம் கதை‌ தெரிந்து கேட்கிறாரா என்று புரியாமல். எச்சில் விழுங்கினான் ஆதித்தன்.

இளவரசே. ஆதித்தன் சிறுவயது ஒத்தவர். ஆனாலும். அவர் வசித்து வந்த இல்லத்தில் ஒரு சைவநெறி குடும்பமும் சேர்ந்துதான் வசித்து வந்தது. தினம் தினம் சிவனின் தேவாரப்பாடலை பாடி. நெறி வளர்த்த ஆனை வன நாயகன் இவர்.
என் தமிழை விட ஆதித்தன் அழகான பதிகம் பாடுவதில் கெட்டிக்காரர். கழுகு வனத்து மக்களின் பொழுதுபோக்கு குறையை நிவர்த்தி செய்வது நமது ஆதித்தனும் அவரது தோழர்களும் தான், எனக்கூறினார் நல்லப்ப உடையார்.

என்ன. ஆதித்தா. ஒன்றுமே பேசாமல் இருக்கிறாய். ஏதாவது கூறும் என ராஜேந்திரன் கேட்க.

ஆதித்தனை கேட்டது தான் தாமதம். அருகில் இருந்த அங்கம்மா தேவிக்கு பயப் பித்து பிடித்து விட்டது.

ஆஹா தங்களது காதல் கதையைத் தான் அண்ணன் கவியாக பாடுகிறார். இது தெரியாமல் பழுவூர் நக்கனும் நல்லப்ப உடையாரும் ஏகத்திற்கு பாராட்டுகின்றனர்.

எங்கே அனைவரின் முன்னிலையிலும் ஆத்திரப்பட்டு விடுவாரோ.. என மனதிற்குள் கவலை ரேகைகளை ஓட விட்டுக் கொண்டிருந்தாள் இவள்.

ஆதித்தன் சற்றும் தளராது.
ஆடவன் அவனின்றி இங்கு பிறர் வரப்பெறாரன்றே! அவ் வாடவன் வேங்கைப் புலியாக இருந்திட மெனுமோ. தன்றலைவி வாள்வீசும் இளவரசியாகினும். சோழத்து சுடராகினும் சுந்தரரின் பெயர்த்தியாகினும் மங்கையை மணப்பவன் பாளைத்தான் அன்றி வேறெவெர் இங்கு வந்திடுவர் எனக் கூற.

இங்கு நடப்பது காவியப் பதிகம் அல்ல. காதல் பதிகம் என்றுணர்ந்து. ஆச்சரியம் கொண்டனர் பழுவூர் நக்கனும் பாளைய நல்லப்பரும்.

ராஜேந்திரா. முதலில் நான் கூட தமிழ்ப்பதிகம் பாடுவதாக எண்ணித்தான் விளக்கங் கொடுத்தேன்.
ஆனால். ஆதித்தன் கொடுத்த பதிலுரையை கேட்ட பின். அது உங்கள் உறவுகளுக்கான விளக்கவுரை என்பதை அறிந்து கொண்டோம்.

இளவரசி அங்கம்மா.. இங்கே சற்று வாருங்கள் என அழைத்தார் நல்லப்பர்.

பயத்தோடே நல்லப்பர் அருகில் நெருங்கிய அங்கம்மா தேவியின் கரங்களைப் பற்றிய நல்லப்பர்.

ராஜேந்திரா. இந்த பதுமை சோழ தேசத்தின் சொத்து. எங்களால் எந்தவொரு களங்கமும் எழாது . பாளைய தேசத்து அரசராக நான் உறுதி கூறுகிறேன்.

ஆதித்தனை மன்னித்து அரவணைத்துக் கொள்வாயாக என கூறினார் நல்லப்ப உடையார்.

அதெல்லாம் முடியாது. வேங்கைப்புலி ஆடவன் என் தமக்கையை கரம்பிடிக்கும் பாளையத்தானின் பைந்தமிழை காணாமல் செல்லமாட்டேன் என்று ராஜேந்திரன் பதிலுரைக்க.

என்ன…… ராஜேந்திரா. உம் மனதே மனது.
எங்கே ஆதித்தனை கோபங்கொண்டு வெறுத்து விடுவீர்களோ என தவறாக புரிந்து கொண்டேன். ராஜ வம்சம் என்றால் என்னவென்று எங்களுக்கு உணர்த்திவிட்டீர்கள்.

நாகப்பட்டினம் சூடாமணி விகார துறவியைக் காண வந்த நமக்கு செயற்கரிய சம்பவங்கள் என்னென்னவோ நடந்துவிட்டது.
இவ்வேளையில். தனது தமக்கையை கரம்பிடிக்கும் ஆடவனை காவியப் பதிகத்தால் சூட்சுமமாக தெரிவித்த உங்களின் பண்புகள்‌ சோழப் பரம்பரைகளுக்கே உரித்தானது என்பதை நிரூபித்துள்ளீர்கள்.

அரசர் வந்த பின்னர் இது பற்றி ஆலோசிக்கலாம். தற்போது இருள் சூழ்ந்து விட்டதால். வெளியே நிற்பது நல்லதல்ல. வாருங்கள் ஆதூரச் சாலைக்கு உள்ளை செல்லலாம் என்றார் நல்லப்ப உடையார்.

அருகில் இருந்த பழுவூர் நக்கன் சற்று புன்னகை உதிர்த்து. விளக்கம் எதுவும் கூறாமல். வாருங்கள் உள்ளே செல்லலாம் என்று கூறி ஆமோதித்தான்.

ஆதித்தனது நெஞ்சுப் பகுதி பட் படென்று‌ வெகு வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. தற்போதுதான் இளவரசனிடம் பழகவே ஆரம்பித்துள்ளோம். அதற்குள்ளாக இந்த காதல் கண்ணாமூச்சி விளையாட்டுகளால் எங்கே தனது பெயருக்கு களங்கள் வந்திடுமே என்று பயந்தவனுக்கு.

ராஜேந்திரன் கூறிய வார்த்தைகள். ஆகாசத்தில் பறப்பது போலாகியது. இவ்வளவு வேகத்தில் வளர்ந்துள்ள சுயம்வரக் காதல் காவியமா என்னுடையது. ஆஹா. எதிர்பாராத முத்தம். ஏனைய சொச்சத்தில் இளவரசனின் சம்மதம்.
நான் காண்பது சொப்பனமா. இல்லை இல்லை.. உண்மை தான். அதோ ஆலமரம் அசைந்தாடி சந்தோசத்தில் குதூகலிக்கிறது.
இதோ. சாலையின் ஓரத்தில் உள்ள கரு வண்டுகள் ரீங்காரமிட்டு சிறகடிக்கின்றன.

வான் மேலே நட்சத்திர கூட்டமெல்லாம் ஒன்று கூடி வாழ்த்துக்கள் கூறுகிறது.

அருகில் அங்கம்மா. எதிரே இளவரசன் ராஜேந்திரன். ஒரு பக்கம் நல்லப்ப உடையார். மறுபக்கம் பழுவூர் நக்கன்.

என்ன வாழ்க்கை டா இது…

இதைக் காணாது இவ்வளவு காலம் வீணாகிப்போனதே.. பரவாயில்லை. இனியும் விரயமாக்க வேண்டாம். இப்படிப்பட்ட சொந்தங்களைப் பேண எவ்வளவு தவம் செய்தோமோ என்றெண்ணி.

கனவு தேசத்தில் மிதக்கலானான் ஆதித்தன்.

அதற்குள் மருத்துவச்சாலையின் வாயிலுக்கு சென்றிருந்த அனைவரும். திரும்பி தனியாக நின்றிருந்த ஆதித்தனை அழைத்தனர்.

உள்ளிருந்து தீப்பந்தம் எடுத்து வந்த பணியாள் ஒருவன். வாயிலுக்கு அருகில் நின்று கொண்டான்.

இதற்கிடையில். தூரத்தில் இரண்டு மூன்று நெருப்புக் கனல்கள் அசைந்தது.

அங்கம்மா வேகமாக ஓடி. ஆதித்தனை இழுத்து வர. அதற்குள் ஆதுரச்சாலை வைத்தியரும்‌ வாயிலை வந்தடைந்திருந்தார்.

வாயிலில் நின்றிருந்த அனைவரும் தூரத்தில் தெரிந்த நெருப்புக் கனலையே உற்று நோக்க. அது சில நேரம் வலது பக்கமாகவும் சில நேரங்களில் இடது பக்கமென அசைந்தது.

காளாமுக மந்திரவாதிகள் திரும்ப வருகிறார்கள் போல. அரிசலாற்றின் வழியே பூசை செய்கின்றனர் போல. இங்கு யாரும் இருக்க வேண்டாம். உள்ளே செல்லுங்கள் என சத்தமாக கூவினார் நல்லப்ப உடையார்.

நீங்கள் உள்ளே சென்று பத்திரமாக அமருங்கள். நான் இங்கேயே இருக்கிறேன். வருவது யாரென்று பார்த்துவிட்டு வருகிறேன் என கூறினார் ராஜேந்திரன்.

அண்ணா.. தயவு செய்து உள்ளே வாருங்கள். எனக்கு பயமாக உள்ளது. என ராஜேந்திரனின் கரங்களைப் பற்றினாள் அங்கம்மா.

தங்கையே.. நமது பரம்பரையில் பயம் என்கிற வார்த்தையை இப்போதுதான் கேட்கிறேன். அதுவும் வாளெடுத்து போர் முறைக்கும் உன் வாயால் கேட்பது இன்னும் ஆச்சரியமாக உள்ளது.

பரவாயில்லை. நீ உள்ளே போய் அவர்களுடன் இரு. நான் பிறகு வருகிறேன் என்றான் ராஜேந்திரன்.

இல்லை இல்லை. நீங்கள் வரவில்லை எனில் நானும் போக மாட்டேன். உங்களுடனே நானும் இருக்கிறேன் என பிடிவாதம் பிடித்தால் இளவரசி.

அதற்குள் அந்த நெருப்புக் கனல்‌நெருங்கி வருவது போன்று தோன்றியது.

சரி. இங்கேயே இரு. அது என்னவென்று பார்த்து விடலாம். எதற்கும் உனது வாளை தயாராக வைத்திரு என்றான் ராஜேந்திரன்.

சரி அண்ணா… அங்கம்மா.

ஆதித்தா. வெளியே ராஜேந்திரனுக்கு பாதுகாவலாக நீ போ. அங்கு இருக்கும் இளவரசியை இங்கே அனுப்பி வை. என உத்தரவு பிறப்பித்தார் நல்லப்ப உடையார்.

சரிங்க.. அரசரே என்று கூறிய ஆதித்தன். வாயிலை நோக்கி நடக்கலானான்.

வாயில் முற்றத்தில் கருமையாக இரு பெரும் உருவங்கள். திக்கென்றது ஆதித்தனுக்கு. உற்றுப் பார்க்கையில்.

இளவரசனும். இளவரசி அங்கம்மாவும் நின்று கொண்டு இருப்பது தெரிந்தது. அவர்களுக்கு அருகில் பெரிய தீப்பந்தம் எரிந்து கொண்டிருக்க. அந்த தீப்ந்தத்தை எடுத்த வந்த பணியாளைக் காணவில்லை. ஒரு வேளை உள்ளே சென்றிருக்கலாம் என்றெண்ணி.

இளவரசே. என்றழைத்தான் ஆதித்தன்.

வாருங்கள் மைத்துனரே…உள்ளே இருக்க மனமில்லையா என கிண்டலடித்தான் ராஜேந்திரன்.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை இளவரசே. தங்களோடு நான் இருக்கிறேன். இளவரசியை உள்ளே செல்லச் சொல்லுங்கள் என்று கூற.

என் தங்கையிடம் நீயே சொல்லலாமே.உங்களுக்கு மொழி பெயர்ப்பாளனாக நானெதற்கு.. என்று கூறி சிரித்தான் ராஜேந்திரன்.

சிறு புன்னகையுடன் அங்கம்மா அவ்விடத்தை விட்டு நகர்ந்து உள்ளே செல்ல.ஓர விழியால் அவளின் பிண்ணங் கூந்தலைக் கண்டு சொக்கிப் போனான் ஆதித்தன்.

ஆதித்தா. அங்கே பார் என கிழக்குப் பக்கமாக எரிந்து கொண்டு வரும் நெருப்புக் கனலைக் காட்ட. திக் திக் திக் என்றது ஆதித்தனுக்கு.

இளவரசே. ஏதேனும் புலப்படுகிறதா.? அது‌என்னவென்று.? ஆதித்தன்.

அது தெரிந்தால் உன்னிடம் எதற்கு காட்டப்போகிறேன். பொறுத்திரு. இவ்வழியாகத்தான் வருகிறது போலிருக்கிறது.
ஒரு வேளை அந்த மந்திரவாதிகள் எனில் சத்தம் போடாமல். தீப்பந்தங்களை அனைத்து விட்டு அமைதியாக உள்ளே போய்விடுவோம்.

வேறு… கள்வர்களோ அல்லது இரவு பிரயாணிகளாக இருக்கும் பட்சத்தில். என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று கூறினான் ராஜேந்திரன்.

உள்ளே. அங்கம்மா தேவி. இங்கே வந்து அமருங்கள் என கோரை விரிப்பினை எடுத்து வந்தார் வைத்தியர். அருகில் நல்லப்ப உடையாரும் பழுவூர் நக்கனும் அமர்ந்திருக்க. இரண்டு மூன்று பேர் சிறிய விளக்கொளியை கையில் பிடித்தபடியும். கையில் நீண்ட தடியுடனும் பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்தனர்.

வெளியே கட்டப்பட்டிருந்த இவர்களின் குதிரைகளுக்கு பசி ஏற்பட்டிருக்கும் போல். உய்ய்ய்ய. உய்ய்ய்ய. என கனைக்கத் தொடங்கின. தூரத்தில் கோவில் மணியோசை போலவுமின்றி. சலங்கையோசை போலவுமின்றி சத்தங்கள் கேட்டன.

வெளியே நின்றிருந்த இருவருக்கும் அந்த ஓசை கொஞ்சம் கொஞ்சமாக அருகில் வருவது போல் கேட்டது.

சலக்.. சலக்.. சலக்..

தூரத்தில் மாட்டுக் கழுத்தில் ஒலிக்கும் சலங்கையொலி போன்ற சப்தங்கள் நன்றாகவே கேட்டது.

ஆதித்தா….

சொலுங்க இளவரசே….

வருவது மந்திரவாதிகள் அல்ல..
ஒன்று வழிப்போக்க்களாக இருக்கனும்‌, இல்லையெனில்…

இல்லையெனில்…. அப்படின்னா. ஆதித்தன் ‌புரியாமல் கேட்டான்.

வழிப்போக்கர்களாக இல்லாத பட்சத்தில் நிச்சயமாக அது ராஜராஜராகத் தான் இருக்கும்…

இந்த நேரத்தில் ராஜராஜர் பயணமா..? ஆதித்தன்

நிச்சயமாக கூற முடியாது. ஒரு வேளை அவராகவும் கூட இருக்கலாம்… ராஜேந்திரன்

இருவருக்கும் பதட்டம் அதிகரித்தது.

மின்மினிப் பூச்சியைப் போல சிமிட்டிக்கொண்டிருந்த‌ அந்த நெருப்பு கனல்கள். கிட்டத்தட்ட ஆதூரச் சாலைக்கு அருகில் இருந்த ஆலமரத்திற்கு அருகில் நெருங்கி விட்டது.

தலைப்பாகையணிந்து ஒருக்கரத்தில் புலிக்கொடி ஏந்தி மறுக்கரத்தில் தீப்பந்த தழலை ஏந்தியவாறு பணியாட்கள் இருவர் முன்னே வர.

பின்னே. பல்லக்கு அசைந்தாடி வரும் ஓசை பளீரென்று கேட்டது இவர்களுக்கு.

உள்ளிருந்த நல்லப்பர். நக்கன். வைத்தியர் அவரது பாதுகாவலர்கள் என அனைவரும் வாயிற்படியினை நோக்கி வந்து விட்டனர்.